எம்பி-கள் சஸ்பென்ஷன்: ஒரு சர்வாதிகார நடவடிக்கை
சிபிஐ குற்றச்சாட்டு
நாடாளுமன்றத்தின் 255வது கூட்டத் தொடரிலிருந்து 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு செயலாளரும் நாடாளுமன்ற குழுத் தலைவருமான பினாய் விஸ்வம் எம்பி நவம்பர் 29ல் வெளியிட்ட அறிக்கை வருமாறு:
“நான் உள்பட மாநிலங்களவையின் 12 எதிர்கட்சி உறுப்பினர்களைச் சஸ்பென்ட் செய்ததன் மூலம் அரசு தனது அதிகாரத்துவ, சர்வாதிகார முகத்தை மீண்டும் காட்டியுள்ளது. சஸ்பென்ஷனுக்குக் காரணமாக சென்ற 254 கூட்டத்தொடரின் நிகழ்வுகளைக் குறிப்பிட்டுள்ளது. அந்த மழைகாலக் கூட்டத் தொடரின் அந்நிகழ்வுகள் எது தொடர்பானவை என்பதையும் சேர்த்தே பார்க்க வேண்டும். அது ஏதேச்சிகார அரசின் சொந்த அணுகுமுறையின் விளைவே ஆகும்.
வேளாண் சட்டங்கள், பெகாசஸ் உளவு, விலைவாசி உயர்வு, கோவிட் தொற்று பாதிப்பு நடவடிக்கைகள், வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைகளைத் தனியார்மயப்படுத்துவது குறித்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் மீது நாடாளுமன்ற அவைகளில் விவாதங்களை அரசு மூர்க்கமாக மறுத்ததன் காரணமாகவே நிகழ்ந்தது. ஜனநாயக, நாடாளுமன்ற முறையில் என்னென்ன வாய்ப்புகள் உண்டோ, அதையெல்லாம் பயன்படுத்தி எதிர்கட்சிகள் எதிர்த்தபோதும், அவற்றையெல்லாம் மீறி அரசு தனது மிருக பலத்தைக்கொண்டு அவையின் மாண்பையும், நிகழ்முறைகளையும் நொறுக்கியது. குடிமக்களை வேவு பார்க்க அரசு எடுத்த உளவு நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க விசாரணைக் குழு அமைத்ததன் மூலமும், வேளாண் சட்டங்களுக்குத் தடை விதித்ததன் மூலமும் உச்சநீதிமன்றம், எதிர்கட்சிகள் எடுத்த நிலைபாடு சரி என்பதை நிரூபித்துள்ளது.
எல்லா விஷயங்கள் குறித்தும் வெளிப்படையாக விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது எனத் தேனொழுக உணர்வு பொங்க பிரதமர் பேசிய அதே நாளில்தான், நாடாளுமன்ற இரு அவைகளிலும் எந்த விவாதமும் நடத்தப்படாமல் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது எவ்வளவு பெரிய முரண் நகை! அரசு ஒவ்வொரு ஜனநாயக நிகழ்முறை மற்றும் நாடாளுமன்ற விதிகளைச் சீர்குலைத்தாலும், அவர்கள் மக்கள் மன்றத்தில் நாட்டு மக்களுக்குப் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும் என்பதற்குப் பிரம்மாண்டமான விவசாயிகளின் சரித்திர இயக்கம் சான்று பகர்கிறது. சர்வாதிகார அணுகுமுறையால் ஆதரவைத் திரட்ட முடியாது என்பதை அரசு உணரும் காலம் வரும் – ஜனநாயக நாட்டின் சுதந்திரமான வாக்காளர்களுக்கு இறுதியாக அவர்கள் பதில் சொல்லியே தீர வேண்டும்.
மாற்றுக் கருத்துக்களை நசுக்கவும்; இந்திய தேசம் மற்றும் குடிமக்களைக் கவலை கொள்ளச் செய்யும் மையமான முக்கிய பிரச்சனைகளை எழுப்புவதிலிருந்து மக்கள் பிரதிநிதிகளைத் தடுக்கவும், 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பென்ஷன் பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பிரச்சனைகளை முன்வைத்து விவாதிப்பதிலிருந்து இத்தகைய சஸ்பென்ஷன் நடவடிக்கைகள் எங்களைத் தடுத்து நிறுத்திவிடும் என அரசு கருதுமேயானால் அவர்கள் ஏமாந்தே போவார்கள். – கொடுமையான சட்டங்களுக்கும் நடவடிக்கைகளுக்கும் பணிந்து வீழ்வது என்ற கேள்விக்குச் சரித்திரத்தில் இடமே இல்லை!”
“துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்தபோதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே!”