கட்டுரைகள்

தேர்ந்தெடுக்கப்பட்ட எதேச்சதிகாரத்திலிருந்து பாசிச சர்வாதிகாரம் நோக்கி!

டி.ராஜா

நாடாளுமன்றத்தின் உள்ளும் – புறமும் செயல்வீரர்கள் தேவை!

“மாண்பார்ந்த மக்களாட்சி முறைமையை போர்ப்படைத் தளபதிகள் பலியிடுவது இல்லை. ஆனால், அந்த முறைமை வழியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களான – பிரதமர்கள், அதிபர்கள் – அந்த மக்களாட்சி முறைமையை சீர்குலைத்து, சிதைத்து விடுகிறார்கள். அத்தகைய தலைவர்களில் சிலர் (ஜெர்மனியின் நாடாளுமன்ற கட்டடமான ரெய்ச்ஸ்டாக் 1933ல் தீக்கிரையான சம்பவம் நிகழ்ந்த பின்னணியில், ஹிட்லர் செய்ததைப் போல்) மக்களாட்சி முறையை விரைவாக அழித்து விடுகிறார்கள். பெரும்பாலும் மக்களாட்சி முறையானது வெளிப்படையாக, ஆனால் மெல்ல மெல்ல அரித்துப் போகிறது” என்று ஸ்டீபன் லெவிட்ஸ்கி மற்றும் டேனியல் ஜிப்லட் கூறுகிறார்கள்.

இந்தியாவில் இன்று நிலவும் சூழலை அவர்களது இந்தக் கூற்று மிகப் பொருத்தமாக எடுத்துரைக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தலைமை சிற்பியான டாக்டர் அம்பேத்கர் கூறியபடி, நாடாளுமன்றம் தான் நமது தேசத்தின் உயர்மட்ட அமைப்பு ஆகும். தேசம் மற்றும் மக்களின் நலன் கருதி, பிரச்சினைகளைப் பற்றி விவாதிப்பதற்கும், சட்டங்களை இயற்றுவதற்குமான தளமாக நாடாளுமன்றம் திகழ்கிறது. நல்ல நிர்வாகத்தை நாட்டிற்கு வழங்கிடவும், நாடாளுமன்றத்திற்கும் அதன்வழியாக மக்களுக்கும் பதிலளிக்கக் கூடிய பொறுபுடைத்தன்மை கொண்டதாக அரசாங்கம் மற்றும் அதிகார வர்க்கத்தை கட்டமைப்பதற்கான பல்வேறு வழிமுறைகளை நாடாளுமன்றம் தன்னகத்தே கொண்டுள்ளது.

ஆட்சி அதிகாரத்தை ஆர்எஸ்எஸ் – பாஜக கைப்பற்றிய நாள் முதல், மக்களாட்சி முறையையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் அழித்து வருகிறது. நாடாளுமன்றம் தேவையற்ற ஒன்று என்பதை போல் மிகைப்படுத்தப்படுகிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் பாற்பட்ட அனைத்து மக்களாட்சி நடைமுறைகளையும் ஆளும் கட்சி எவ்வாறு குறைமதிப்பிற்கு உள்ளாக்கி வருகிறது என்பதை அண்மைக்கால நிகழ்வுகள் நமக்கு எடுத்துரைக்கின்றன.

மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஓராண்டு காலமாக நீடித்த போராட்டத்தை விவசாயிகள் எழுச்சியுடன் நடத்தினார்கள். இந்தச் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு எவ்வித விவாதங்களும் இன்றி நிறைவேற்றப்பட்டன. கேலிக்குரிய விஷயம் என்னவென்றால், நாடாளுமன்றத்தில் எவ்வித விவாதங்களும் நடைபெறாமலேயே இந்தச் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டன. இந்த அரசாங்கத்தின் குறைபாடுகள் மற்றும் பேராபத்து நிறைந்த நோக்கங்களுக்கு எதிரான சவால்களும், போராட்டங்களும் கடும் அடக்குமுறைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.


ஊபா(UAPA) உள்ளிட்ட சட்டங்கள் இதற்காக கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இந்தப் போக்கு மக்களாட்சி முறைமைக்கு முற்றிலும் முரணானது ஆகும். நாடாளுமன்ற ஜனநாயக கட்டமைப்புக்குள், கூட்டுப் பொறுப்பின் அடிப்படையில் கொள்கைகளை வகுத்திடும் தளமான நாடாளுமன்றம் இப்போது பழிவாங்கும் படலத்தைக் கண்டு வருகிறது. அதன் நீட்சியாக, அண்மையில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள அவலத்தையும் நாம் பார்த்தோம்.

ஹிட்லரின் பாசிச ஆட்சியில் நடைபெற்ற சம்பவங்களில் இருந்து நாம் படிப்பினைகளைப் பெறவேண்டியது கட்டாயமாகும். இன்றைய இந்தியாவில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை ஜெர்மன் நாடாளுமன்ற கட்டடமான ரெய்ச்ஸ்டாக் தீக்கிரையான நிகழ்வோடு ஒப்புமை மேற்கொள்வது சற்று மிகைப்படுத்தப்பட்டதாக த் தோன்றக்கூடும். ஆனாலும், இரண்டிற்கும் அடிப்படையான ஆதாரம் ஒன்றே ஆகும் – மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களால் மக்களாட்சி முறைமையும், அமைப்புகளும் குறைமதிப்பிற்கு உள்ளாக்கப்படுவதே அந்த அடிப்படை ஆதாரம் ஆகும். எதேச்சதிகாரத்தை நோக்கிய ஆர்எஸ்எஸ் – பாஜக வின் நடவடிக்கைகள் படிப்படியானவை: வேகம் குறைந்தவை என்றபோதிலும் வெளிப்படையாக  மேற்கொள்ளப்படுபவை ஆகும்.

நமது மக்களாட்சி முறையில் ஏற்பட்டுள்ள விரிசல்களை மதிப்பீடு செய்வதற்கான அளவுகோலாக, ஜெர்மன் நாடாளுமன்ற கட்டடமான ரெய்ச்ஸ்டாக் தீக்கிரையாக்கப்பட்ட பிறகு வெய்மர் குடியரசுக்கு ஹிட்லர் முடிவு கட்டியதை நாம் சுருக்கமாகப் பார்க்க முடியும்.


1923 ஆம் ஆண்டில் முனிச் நகரில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் தோல்வியுற்று, நெஞ்சுரம் குன்றிய ஹிட்லர், சட்டப்படியான தேர்தல் வழிமுறைகளின் ஊடாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிட முயற்சிகளை மேற்கொண்டார். நாஜி கட்சிக்கு தலைமையேற்ற ஹிட்லர் தனது சொல்வன்மையால், கனல் தெறிக்கும் பேச்சாலும் கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க தீவிரமாக உழைத்தார். 1928ஆம் ஆண்டில் உறுப்பினர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்தது. நாஜி கட்சியின் படைப்பிரிவின் வன்முறை வழிமுறைகளை நியாயம் என்று நிலைநாட்ட கடந்தகால நிகழ்வுகளைத் தோண்டித் துருவினார்; ஜெர்மனி அனுபவித்து வந்த துயரங்களுக்கு ‘நவம்பர் குற்றவாளிகள்’தான் காரணம் என்று தனது உரைகளில் தொடர்ந்து குறிப்பிட்டார். வருங்காலத்தின் மீது அக்கறை கொள்ளாமல் கடந்த காலத்தை முன்னிலைப்படுத்துவதை செயல்திட்டமாக கொண்டிருந்த ஹிட்லர் வெர்சைல்ஸ் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட அரசியல் தலைவர்கள் மீது வசைமாரி பொழிந்தார்.
 இந்தக் காலகட்டத்தில் நாஜி கட்சியின் வளர்ச்சி குறிப்பிட்டுச் சொல்லத்தக்கதாக இருந்தாலும், 1928ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் வெறும் 2.6 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. 1920 மற்றும் 1930களில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை ஹிட்லருக்கு ஒரு மகத்தான வாய்ப்பாக அமைந்தது. வேலைவாய்ப்பின்மை காரணமாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பொருளாதாரம் நிலைகுலைந்தன. ஜெர்மனியில் மட்டும் சுமார் 60 லட்சம் நபர்கள் (அந்நாட்டு மக்கள் தொகையில் அது 30 சதவீதம்) வேலைவாய்ப்பின்றித் தவித்தார்கள்.

முதலாளித்துவ பொருளாதாரத்தின்  பொதுவான அம்சங்களான பொருளாதார சரிவு, வேலைவாய்ப்பின்மை, வருங்காலம் பற்றிய நிச்சயமற்ற சூழல் ஆகியவை ஹிட்லருக்கு சாதகமாக அமைந்தது. அவரது சொல்வன்மையும், தீவிர நிலைப்பாடும் மக்களிடையே ஒரு பேசுபொருளாக பல்கிப் பெருகியது. ஹிட்லரின் மேலாதிக்கம்  ஓங்கியது. இதர வலதுசாரி அணிகளோடு இணக்கம் கொண்டபோதும், 33 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. எனினும், ஹிட்லர் வேந்தர் பதவியை அடைந்திட நிலைத்தன்மையற்ற அரசியல் சூழல் ஏதுவாக அமைந்தது.

1933ஆம் ஆண்டு ஜனவரி 30 அன்று வெய்மர் அரசியலமைப்புச் சட்டத்தின்படி , அதிபர் பால் வான் ஹிண்டன்பர்க், ஹிட்லரை வேந்தர் பதவியில் நியமித்தார். அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஹிட்லர் வேந்தராகப் பொறுப்பேற்றதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
ஹிட்லர் பொறுப்பேற்ற நான்கு வாரங்களுக்குள்ளாகவே, அவரது அதிகார பலத்தை பெருக்கி, எதிர்க்கட்சிகளை அழித்தொழிக்க வித்திட்டது. ரெய்ச்ஸ்டாக் கட்டடம்  தீக்கிரையான சம்பவம்.

1933 ஆம் ஆண்டு பிப். 27ஆம் நாள் இரவு ஜெர்மனியின்  நாடாளுமன்ற கட்டடம் தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு வீரர்களின் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. போலீசார் ‘மாரினஸ் வென்டர் லுப்’ என்ற டச்சு கட்டட தொழிலாளரை கைது செய்தனர். நாஜிக்கள் அவரை ‘கம்யூனிஸ்ட் ஆதரவாளர்’ என்று முத்திரை குத்தினர். அதைத் தொடர்ந்து சுமார் 4000 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் கம்யூனிஸ்ட்கள் என்பதால் சிறைக்குள் கடும் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். இந்தச் சூழல் ஹிட்லருக்கு கடவுள் கொடுத்த வரமாக அமைந்தது. பிப்ரவரி மாதம் 28ஆம் நாள் அதிபர் ஹிண்டன் பர்க் வெய்மர் அரசியலமைப்புச் சட்டத்தின் 48வது ஷரத்தை பிரயோகித்தார். மக்களையும், அரசையும் பாதுகாப்பதற்கான அதிபரின் ஆணையை அமைச்சரவை ஏற்றது.

பேச்சுரிமை, பொது இடங்களில் ஒன்று கூடும் உரிமை, ஆகியன இந்தச் சட்டப் பிரயோகத்தால் பறிக்கப்பட்டது. கடிதப் போக்குவரத்து இடை மறிக்கப்பட்டது. தொலைபேசி உரையாடல்கள் ரகசிய உளவுக்கு உள்ளாயின. கூட்டமைப்பில் இருந்த மாநிலங்களின் சுயாட்சி உரிமை இடைக் காலமாக நீக்கப்பட்டது.

1932ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி 17 சதவீதம் வாக்குகளைப் பெற்றது. எனவே, நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், கம்யூனிஸ்டுகள் இந்தச் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அன்று இரவு அரங்கேறிய நாடாளுமன்ற தீவைப்பு சம்பவத்தைக் காரணமாகக் கூறி, கம்யூனிஸ்டுகளை காலவரையின்றி காவலில் அடைத்து விட்டனர். நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வெறுமை, நாஜிகளை தங்கள் மனம் போன போக்கில் செயல்பட உந்தித் தள்ளியது. சிவில் உரிமைகள் மற்றும் எதிர்க் கருத்துகளை அழித்தொழிக்கும் அவசரகால ஆணைகளை நியாயப்படுத்துவதற்காக ஹிட்லர் இந்த சம்பவத்தை உடனடியாகப் பயன்படுத்திக் கொண்டார்: எதிர்ப்போர் அனைவரையும் அழித்தொழித்து இரண்டாம் உலகப்போர் முடியும் வரையிலும் தனது அதிகாரத்தை ஹிட்லர் பெருக்கிக் கொண்டே இருந்தார்.

நாஜிகள் அரசு அதிகாரத்தைத் திடீரென கைப்பற்றிய விதத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் ஆர்எஸ்எஸ்-பாஜக அதிகார பீடத்தைக் கைப்பற்றியது பிரமிக்கத்தக்கதாக இருக்காது. இருப்பினும் இவ்விரு ஜனநாயக விரோத சித்தாந்தங்களுக்கு இடையே சில விசித்திரமான ஒத்த தன்மைகள் உள்ளன. நாடாளுமன்றம் உள்ளிட்ட விவாத அமைப்புகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவது அவற்றில் ஒன்றாகும். ஜெர்மனியில் நாடாளுமன்றம் தீக்கிரையானது. ஆனால், ஹிட்லரின் முடிவுக்குப் பின்னர் ஜனநாயக உணர்வு மீண்டும் செழித்தது. நமது தேசத்தில் பா.ஜ.க.- ஆர்.எஸ்.எஸ். செயல்பாடு மிகவும் நுட்பமானதாக இருக்கிறது. மக்களாட்சியின் அடித்தளங்களும், விவாத மனப்பான்மையும் மங்கி, மறைந்து வரும் சூழலில், நாடாளுமன்றத்திற்கு ஒரு புதிய கட்டடம் எழுப்பப்படுகிறது.

சகிப்புத் தன்மைக்கும், மதச்சார்பற்ற ஜனநாயகத்திற்கும் மாற்றாக அரசின் அதிகாரப்பூர்வ தத்துவமாக இந்துத்துவாவை படிப்படியாக நிறுவுவது தற்செயலான நிகழ்வு அல்ல. திட்டமிட்டு நிறைவேற்றப்படும் சதிச்செயல் ஆகும். கிறிஸ்டோபர் ஜாஃப்ரெலெட் குறிப்பிட்டுள்ளபடி ஆர்எஸ்எஸ் அமைப்பு நாஜி கட்சியைப் போல் பலப்பிரயோகத்தால் அரசாங்கத்தை தகர்க்கும் அமைப்பு அல்ல. ஹிட்லர் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றியது தவறு என்று கோல்வால்கர் கருதினார். கோல்வாக்கர் குறிப்பிட்டது பின்வருமாறு: “அரசியல் நோக்கத்திற்காகப் பலரும் பல சந்தர்ப்பங்களில் ஒன்று சேருவதை காணமுடிகிறது. ஆனால், அந்த நோக்கம் நிறைவேறாமல் தோல்வியுறும் போது ஒற்றுமை உருக்குலைந்து போய் விடுகிறது. தற்காலிகமான வெற்றிகள் நமக்கு தேவையில்லை: நிலைத்துநிற்கும் ஒற்றைத் தன்மையே நமது தேவை ஆகும்.” மனுதர்ம கோட்பாட்டை உயர்த்திப் பிடிக்கும் மற்றும் சாதி, மத, பாலின கட்டிறுக்கத்தைத் தகவமைத்து தொடரச் செய்யும் ஹிந்து தேசியத்தின் மற்றொரு பெயர்தான் ‘நிலைத்து நிற்கும் ஒற்றை தன்மையாகும்‘.

எண்ணிக்கை பெரும்பான்மையைக் கொண்டு நாடாளுமன்றத்தையும், மக்களாட்சி மரபுகளையும் அழித்தொழிப்பது – விவாதங்கள் மற்றும் எதிர் கருத்துக்களை முன்வைக்கும் பாரம்பரியத்தை தீக்கிரையாக்குவதாகும். பழுதுபட்ட  ரெய்ச்ஸ்டாக் கட்டடம் புனரமைக்கப்பட்டது: ஆனால், மக்களாட்சி மாண்புகள் நசுக்கப்படுமாயின் மீண்டும் புதுப்பிப்பது மிகவும் கடினமாகும். தேச மக்கள் இந்த பேராபத்தை உணர வேண்டும்.

இந்த ஆண்டு இந்திய தேசத்தின் 75வது சுதந்திர தின ஆண்டு ஆகும். ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் கிளை அமைப்புகள் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்றபோதும், தங்களின் சதித் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக சுதந்திர தினத்தைக் கொண்டாட முயற்சி செய்கிறார்கள். அரசியல் நிர்ணய சபையில் தனது முடிவுரையின் போது டாக்டர் அம்பேத்கர் விடுத்த எச்சரிக்கையை இங்கு நினைவு கூருவது பொருத்தமாக இருக்கும். “சுதந்திரம் பெற்றுவிட்டபடியால், இனிமேல் நடைபெறும் தவறுகளுக்கு ஆங்கிலேயர்களை நாம் இகழ்ந்துரைக்க முடியாது. இனிமேல் தவறுகள் நிகழும் பட்சத்தில், நாம் நம்மைத் தவிர வேறு எவரையும் இகழ்ந்துரைக்க முடியாது. தவறுகள் நடைபெறுவதற்கான மாபெரும் அபாயங்கள் இருக்கின்றன.”

சுதந்திர இந்தியா தற்போது பன்மடங்கு அபாயத்தை எதிர் கொண்டு வருகிறது. ‘மக்களாகிய நாம்‘ ஜனநாயக குடியரசை மீட்பதற்கு அணிவகுக்க வில்லை என்றால், நம்மில் எவரும் பாதுகாப்பாக வாழ்ந்திட முடியாது.
பாஸ்டர் மார்ட்டின் நிமோலர் வலியுறுத்திக் கூறியது பின்வருமாறு:
முதலில் அவர்கள் கம்யூனிஸ்ட்களை வேட்டையாட வந்தனர். நான் எதுவும் பேசவில்லை. ஏனெனில், நான் ஒரு கம்யூனிஸ்ட் அல்ல.
பிறகு அவர்கள் சோசலிஸ்ட்டுகளை வேட்டையாட வந்தனர். நான் எதுவும் பேசவில்லை. ஏனெனில், நான் ஒரு சோசலிஸ்ட் அல்ல.
பிறகு அவர்கள் தொழிற்சங்கவாதிகளை வேட்டையாட வந்தனர். நான் எதுவும் பேசவில்லை. ஏனெனில், நான் ஒரு தொழிற்சங்கவாதி அல்ல.
பிறகு அவர்கள் யூதர்களை வேட்டையாட வந்தனர். நான் எதுவும் பேசவில்லை. ஏனெனில், நான் ஒரு யூதன் அல்ல.
இறுதியாக, அவர்கள் என்னை வேட்டையாட வந்தனர். அப்போது, எனக்காகப் பரிந்து பேச ஒருவருமே இல்லை.


தமிழில்: அருண் அசோகன் 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button