அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம் – கண்டிக்கிறோம் -இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
பாஜக ஒன்றிய அரசு அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளை தகர்த்தும், சிறுமைப்படுத்தியும் வருகிறது. இதன் தொடர்ச்சியாக அணைகள் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் மாநில உரிமைகளை பறிக்கும் தாக்குதலை நடத்தும் அபாயம் உருவாகியுள்ளது.
மிகுந்த நிதானத்துடனும், பொறுப்புணர்வோடும் அணுக வேண்டிய பிரச்சினையில் அவசரம் காட்டத் தேவையில்லை. நாடாளுமன்றத்தின் பொறுப்புக்குக் குழு , தேர்வுக் குழு ஆகியவற்றின் ஆலோசனைக்கு மசோதாவை அனுப்பி வையுங்கள் என்ற வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்ததையும் அலட்சியப்படுத்தி அணைகள் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்த ஒரு மாநிலத்திலும் ஒன்றிய அரசு நேரடியாக தலையிட்டு, மாநில மக்களுக்கு எதிராக செயல்படும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.
ஒன்றிய அரசின் அதிகார அத்துமீறலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், கூட்டாட்சி கோட்பாடுகளின் மீது தாக்குதல் நடத்தி வரும் பாஜக ஒன்றிய அரசின் அதிகார அத்துமீறலை தடுத்து நிறுத்தவும், அணைகள் பாதுகாப்பு மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தியும் ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்த எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ள முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது.