மோடி அரசை வீழ்த்திய விவசாயிகளின் போராட்டம் – விவசாயிகளின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி
டி.ராஜா
2015 ஆம் ஆண்டு நவம்பர் 26 முதல் மோடி அரசாங்கம் ஆண்டுதோறும் அரசியலமைப்பு சட்ட தினத்தைக் கொண்டாடி வருகிறது. அனைத்து வகையிலும், அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் மோடி அரசாங்கம், அரசியலமைப்பு சட்ட தினத்தை கொண்டாடுவது முரண்பாடாக உள்ளது.
கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்று வந்த விவசாயிகளின் எழுச்சிமிகு அறவழிப் போராட்டம் காரணமாக மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளது இதற்கு எடுத்துக்காட்டு ஆகும். இந்தப் போராட்டத்தில் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். விவசாயிகளுக்கு எதிராக பிரதமரின் சகாக்களும், அவரது கட்சித் தலைவர்களும், ஏன் அவரும் கூட இழிவான கருத்துக்களை கூறினர்.
பிரதமர் மோடி விவசாயிகளை “அந்தோலன் ஜீவிகள்” என்று கொச்சைப்படுத்தினார். அரசியலமைப்பு சட்டத்தின் 100வது சரத்து படி வாக்கெடுப்பு நடத்தாமல் மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள போராடுவதற்கான அடிப்படை உரிமையின் படி போராடிய விவசாயிகளை கொச்சைப்படுத்தியது அரசியலமைப்புச் சட்டத்தை பிரதமர் இழிவு படுத்தியதாக இல்லையா?
அன்னிய அழிவுகர தத்துவத்தால் (Foreign Destructive Ideology) வழிநடத்தப்படுபவர்கள் என்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை பிரதமர் மோடியும், அவர்களை காலிஸ்தான் தீவிரவாதிகள், மாவோயிஸ்டுகள் மற்றும் தேசவிரோதிகள் என்று அவரது அமைச்சரவை சகாக்களும் இழிவுபடுத்தினர். உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா விவசாயிகளை அச்சுறுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார்.
ஆணவப் போக்கும், தோரணையும் அவரது அறிக்கைகளில் வெளிப்பட்டன. விவசாயிகள் டெல்லியை சென்றடையக் கூடாது என்பதற்காக அவர்கள் பயணித்த பாதைகளில் ஆழமான மற்றும் அகலமான பள்ளங்களை தோண்டினார்கள். லக்கிம்பூர் கேரியில் நடைபெற்ற விவசாயிகள் படுகொலை தொடர்பாக அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்; அமைச்சரின் வாகனத்தை பயன்படுத்தி விவசாயிகள் கொல்லப்பட்டனர் என்பதோடு உ.பி. அரசாங்கம் இந்த விஷயத்தை சரியான முறையில் கையாளவில்லை என்று உச்ச நீதிமன்றம் அதிருப்தி அடைந்ததால் அமைச்சரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
விவசாயிகள் படுகொலை செய்யப்படுவதும், சம்பந்தப்பட்ட அமைச்சர் தண்டனை ஏதுமின்றி பதவியில் தொடரும் சூழலில் அரசியலமைப்புச் சட்ட தினம் எதை உணர்த்துகிறது? இந்த சூழலில், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ள பிரதமர், மேலோட்டமான வருத்தத்தையும் தெரிவித்துள்ளார். அண்மையில் பாஜக சந்தித்த தேர்தல் பின்னடைவுகள் பிரதமரை இதுபோன்ற அறிவிப்பை வெளியிடும் நெருக்கடிக்கு உள்ளாக்கி இருக்கக்கூடும். அடுத்த ஆண்டு பஞ்சாப், உபி, உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் நடைபெற உள்ள தேர்தலில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்ற உள்நோக்கமும் இருக்கக்கூடும்.
ஆனால், கற்பி, புரட்சி செய், ஒன்றுசேர் என்ற டாக்டர் அம்பேத்கரின் எழுச்சிமிகு முழக்கத்தை அடிநாதமாகக் கொண்ட விவசாயிகளின் போராட்டம் அரசியல் அமைப்புச் சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளை கேலி செய்தவர்களின் தேர்தல் வெற்றி வாய்ப்புகளை மங்கச் செய்துவிட்டது என்பது தான் உண்மையாகும்.
அதிகார பீடத்தில் உள்ளவர்களின் வஞ்சக சூழ்ச்சிகளை முறியடித்து மண்டியிடச் செய்ய முடியும் என்பதை விவசாயிகள் தங்களின் போராடும் உரிமை மூலம் உலகிற்கு உணர்த்தி விட்டார்கள். இதுவே நாம் கொண்டாடும் அரசியலமைப்பு சட்ட தினத்தின் முக்கியத்துவம் ஆகும்.
மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக தொலைக்காட்சியில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை நிறைவேற்றியதற்காக வருத்தம் தெரிவிக்கவில்லை. அதற்கு மாறாக, இந்த சட்டங்களின் பயனுறு தன்மையை எடுத்துரைத்து விவசாயிகளை சமாதானப்படுத்த முடியவில்லை என்பதற்காக வருத்தம் தெரிவித்தார். இந்த மூன்று சட்டங்களை திரும்பப் பெறுவது குறித்து அவர் தனது கார்ப்பரேட் நண்பர்களிடம் வருத்தம் தெரிவிப்பது போலவே தோன்றுகிறது. தனது உரையில் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாதம் பற்றி குறிப்பிடவில்லை.
வேளாண் துறையை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்கிட நிபுணர்கள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கொண்ட குழு ஒன்றை அமைக்க உள்ளதாக பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். அரசாங்கத்தால் நியமிக்கப் பெறும் நிபுணர்கள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளுக்கு அதிருப்தி அளிக்கக்கூடிய, கார்ப்பரேட் ஆதரவு சீர்திருத்தங்களையே வலியுறுத்துவதற்கான சாத்தியப்பாடு உள்ளது. உலக வங்கி, சர்வதேச நிதியம், உலக வர்த்தக அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளின் உத்தரவுக்கு இணங்க வேளாண் துறையில் புதிய தாராளமயக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் தீவிரமாக இருப்பதால், விவசாயிகள் பிரச்சினை தொடரும் என்றே தெரிகிறது.
75வது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் சுய ராஜ்ஜியத்தின் முக்கியமான பரிமாணம் குறித்த மகாத்மா காந்தியடிகள் கூறியுள்ளதை நினைவு கூருவது மிகப் பொருத்தமாக இருக்கும். ‘யங் இந்தியா’ பத்திரிகையில் 1925 ஜனவரி 29 அன்று மகாத்மா காந்தி எழுதியது பின்வருமாறு: “அதிகாரத்தை ஒரு சிலர் கைப்பற்றுவதன் மூலம் உண்மையான சுயராஜ்யம் கிடைப்பதில்லை. ஆனால் அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படும் போது அதனை எதிர்த்து நிற்கும் ஆற்றலை அனைவரும் பெறும் போது உண்மையான சுயராஜ்யம் கிடைக்கிறது. வேறுவிதமாக சொல்வதானால் அதிகாரத்தை முறைப்படுத்தவும், கட்டுப்படுத்துவதற்குமான ஆற்றலை வெகுமக்கள் உணரும் அளவிற்கு அவர்களை பயிற்றுவிப்பதன் மூலம் சுயராஜ்யம் கிடைக்கிறது.” சுயராஜ்யம் என்ற கருத்து அரசியலமைப்புச் சட்டத்தின் பல கூறுகளில் இடம்பெற்றுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பாக நாடாளுமன்ற ஜனநாயகம் திகழ்கிறது. அதன்படி மக்களின் இறையாண்மையை பிரதிநிதித்துவம் செய்யும் சட்டமன்றங்களிடம் பொறுப்புடைத் தன்மை கொண்டவையாக அரசாங்கம் நெறிப்படுத்தப்படுகிறது.
மாநிலங்களின் ஒன்றியமாகத் திகழும் இந்தியாவை கூட்டாட்சி முறையின் மூலமாகவே சிறப்புடன் நிர்வகிக்க முடிகிறது. ஆனால், மோடி அரசாங்கம் கூட்டாட்சி நெறிமுறைகளை பின்பற்றுவது இல்லை; அதிகாரத்தைக் குவிமையப்படுத்தும் முயற்சியிலேயே ஈடுபட்டு வருகிறது.
மத்திய அரசாங்கத்தின் ஒற்றைப் பரிமாண அதிகாரப் பாய்ச்சல், சில சட்டமன்றங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்ற வித்திட்டது. சம்பந்தப்பட்ட அனைவரையும் கலந்து ஆலோசித்து சட்டம் இயற்றும் வழிமுறையை பின்பற்றாமல் வேளாண் சட்டங்களை நிறைவேற்றியதற்கு முக்கியமான காரணமாக திகழ்வது மோடி அரசாங்கத்தின் எண்ணிக்கை பெரும்பான்மையாகும். அத்தகைய பெரும்பான்மை ஆணவப் போக்கை கட்டுப்படுத்தும் மக்களின் ஆற்றலுக்கு ஒளிரும் எடுத்துக்காட்டாக விவசாயிகளின் அறவழிப் போராட்டம் உருவாகியுள்ளது.
அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், விவசாயத் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் என்று அனைத்து தரப்பினர் ஆதரவையும் பெற்று விவசாயிகள் இயக்கம் ஒற்றுமை உணர்வுடன் எழுச்சி பெற்றது. உழவர் பெருமக்களும், உழைக்கும் மக்களும் ஒன்று திரண்டதை நாடு கண்ணுற்றது.
அண்மையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சிவில் சமூகம் பற்றி வெளியிட்டுள்ள கருத்துக்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உயர் பதவியில் இருப்பவர்களால் உண்டாகி உள்ள ஆபத்தை அம்பலப்படுத்துவதாக உள்ளது. சிவில் சமூகத்தை குறிவைத்து தாக்குவதன் மூலம் ‘மக்களாகிய நாம்‘ தாக்கப்படுகிறோம். சிவில் சமூகம் மீதான தாக்குதல் மக்கள் மீதான போர் ஆகும். இந்தப் போர் 2014 ஆம் ஆண்டிலிருந்து நடந்து வருகிறது.
விவசாயிகளின் போராட்டம் அவர்களின் நலன்களை மட்டுமே முன்வைப்பதாக மட்டுமின்றி அரசியல் அமைப்புச் சட்டம், ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றை பாதுகாப்பது என்னும் உயர்ந்த நோக்கத்தையும் கொண்டதாக விளங்கியது. விவசாயிகளின் இந்த அமைதியான அறவழிப் போராட்டம் வேளாண் சட்டங்களை எதிர்த்தும், அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்பது என்பதோடு மட்டுமின்றி, மோடிக்கு தேர்தல் பின்னடைவையும் உண்டாக்கியுள்ளது. தேர்தல் ஆதாயத்தை அதிகரித்துக் கொள்வதற்காகவே வேளாண் சட்டங்களை மோடி அரசாங்கம் திரும்பப் பெற்றது. விவசாயிகள் பெற்றுள்ள மாபெரும் வெற்றியை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களின் வெற்றி “கற்பி புரட்சிசெய் ஒன்றுசேர்” என்னும் அம்பேத்கரின் லட்சிய முழக்கத்திற்கு கிடைத்த வெற்றி! அரசியலமைப்புச் சட்டத்திற்கும் அதன் அடிப்படை கட்டமைப்பு மற்றும் விழுமியங்களுக்கு கிடைத்த வெற்றியாகும். அரசியலமைப்பு சட்ட தினத்தை கொண்டாடும் இந்த தருணத்தில், விவசாயிகளின் மாபெரும் வெற்றியை நினைவுகூர்ந்து போற்றுவோம்.
வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் விவசாயிகள் உறுதிப்பாட்டுடன் திகழ்ந்தார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விவசாயிகள் இயக்கத்தை பாராட்டுகிறது. இந்த போராட்டத்தில் உயிரிழந்தோருக்கு கட்சி அதன் அஞ்சலியை தெரிவிப்பதோடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட்டத்தில் இருந்து அனைத்து அரசியல் கட்சிகளும், உரிய படிப்பினைகளைப் பெற்று, தொழிலாளர் தொகுப்பு சட்டங்கள், மின்சாரம் மசோதா 2021, குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றுக்கு எதிரான ஒன்றுபட்ட போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும். குடியரசு மற்றும் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாத்திடுவதற்கான பிரச்சார இயக்கத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தீவிரப்படுத்தும்
தமிழில்: அருண் அசோகன்