நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி திருப்பூரில் பந்த் – உண்ணாவிரதம்
திருப்பூர், நவ.26- வரலாறு காணாத நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி திருப்பூர் பின்னலாடை தொழில் கூட்டமைப்பினர் கவனயீர்ப்பு பொது வேலைநிறுத்தம், உண்ணாவிரதப் போராட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பின்னலாடை உற்பத்தி நிறு வனங்களும் மூடப்பட்டதால், ரூ.150 கோடி அளவிலான பின்னலாடை உற்பத்தி பாதிக்கப்பட்டது.
பின்னலாடை, விசைத்தறி, கைத்தறி ஜவுளி உற்பத்திக்கு மூலப்பொருளான பருத்தி நூல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த நவம்பர் 1ஆம் தேதி வரலாறு காணாத அளவுக்கு ஒரே அறிவிப்பில் கிலோவுக்கு ரூ.50 உயர்த்தப் பட்டது. இது ஒட்டுமொத்த ஜவுளி உற்பத்தி துறையினரை அதிர்ச்சி அடையச் செய்தது. குறிப்பாக சிறு, குறு உற்பத்தி யாளர்கள் தாக்குப் பிடிக்க முடியாத நிலையில் தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இத்துடன் ஆயிரக்கணக் கான தொழிலாளர் வேலைவாய்ப்பும் பறி போகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே நூல் விலை உயர்வுக்கு எதிராக அனைத்து தொழில் அமைப்பினர், தொழிற்சங்கங்கள், வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் அர சியல் இயக்கத்தினர் பங்கேற்று நூல் விலை உயர்வு பிரச்சனையில் ஒன்றிய அரசு தலையிட்டு விலை உயர்வை கட்டுப்படுத்த வும், ஜவுளி தொழிலைப் பாதுகாக்கவும் வலி யுறுத்தி வெள்ளியன்று ஒருநாள் கவனயீர்ப்பு வேலைநிறுத்தம், உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுது. இதனால், திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி தொழில் முற்றாக முடங்கியது.
இப்போராட்டத்துக்கு ஆதரவாக நகரின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக வணிக நிறுவனங்கள் கடையடைப்பு செய்து இருந்தனர். திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக தொழில் கூட்ட மைப்பினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்துக்கு கூட்ட மைப்பின் ஒருங்கிணைப்பாளரும், டீமா சங்கத் தலைவருமான எம்.பி. முத்துரத்தினம் தலைமை வகித்தார். இதில், சைமா தலைவர் வைகிங் ஏ.சி.ஈஸ்வரன், ஏற்று மதியாளர் சங்கத் துணைத் தலைவர் மைக்கோ வேலுச்சாமி, நிட்மா தலைவர் அகில் சு.ரத்தினசாமி, சாயஆலை உரிமை யாளர் சங்கத் தலைவர் காந்திராஜன் உள்பட அனைத்து உற்பத்தியாளர் அமைப்பின் நிர்வாகிகள் உரையாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், அதிமுக சார்பில் பல்லடம் எம்எல்ஏ எம்.எஸ்.எம்.ஆனந்தன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.ரவி உள்பட பலர் போராட்டத்தை ஆதரித்து உரையாற்றினர்.
சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப், எம்எல்எப், ஐஎன்டியுசி, எச்எம்எஸ், ஏடிபி உள்பட தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளும் பங்கேற்று ஒன்றிய அரசு, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்துவதுடன், தொழி லைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதன் மூலம் தொழிலாளர் வாழ்வுரிமையை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும், இப்போராட்டத்துடன் முடிந்துவிடப் போவதில்லை. பின்னலாடைத் தொழிலைப் பாதுகாக்க ஒன்றிய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று முழங்கினர்.