பணிநிரந்தரம், ஊதிய உயர்வு கோரி தூய்மைப் பணியாளர்கள் நவ.28ல் சென்னையில் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆர்.சி.எச் (R.C.H) ஒப்பந்த சுகாதார துப்புரவு பணியாளர்கள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2005 ஆம் ஆண்டு முதல் ஆர்.சி.எச். திட்டத்தின் கீழ், தற்காலிக அடிப்படையில் 3140 க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
அவர்களுக்கு மாதம் தோறும், மிகக் குறைவாக ரூ.1000 மட்டுமே தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது.
ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் பணி புரிபவர்களுக்கு இந்த தொகுப்பூதியம் ரூ. 1500 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது.
அவர்கள் தொடர்ந்து நாள்தோறும் 12 மணி நேரம் பணி செய்ய வைக்கப்படுகின்றனர். வார விடுமுறை மற்றும் அரசு விடுமுறை கூட வழங்கப்படுவதில்லை.
இது கடுமையான உழைப்புச் சுரண்டலாகும். இதனால் அவர்கள் உள ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பணியாளர்களில் பெரும்பாலானோர், பட்டியலின சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும், பெண்கள் என்பதும், பொருளாதார ரீதியில் வறுமைக் கோட்டிற்கும் கீழ் உள்ளவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு மாதத்திற்கு வெறும் ரூ.1000 முதல் 1500 வரை தொகுப்பூதியத்தைப் பெற்றுக் கொண்டு எவ்வாறு, இவர்கள் வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்து கொள்ள முடியும்? கவுரமாக, சுயமரியாதையுடன் வாழ முடியும்?
இவர்களின் தொகுப்பூதியம் , ”குறைந்த பட்ச ஊதிய நிர்ணயத்திற்கே” எதிராக உள்ளது.
எனவே,
இவர்களுக்கு பணிநிரந்தரம் வழங்கிட வேண்டும்.
இவர்களின் ஊதியத்தை மாநில அரசின் நிரந்தர தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்திற்கு நிகராக உயர்த்திட வேண்டும்.
தமிழ்நாடு அரசின் நிரந்தரப் பணியாளர்களுக்
குரிய, மருத்துவ சிகிச்சை வசதிகள் உள்ளிட்ட, அனைத்து உரிமைகளையும், சலுகைகளையும் வழங்கிட வேண்டும்.
அவர்களுக்கு வார விடுமுறை, மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு போன்ற எந்த விடுப்புகளும் வழங்கப்படுவதில்லை. அவற்றையும் வழங்கிட வேண்டும்.
12.00 மணி நேர வேலை என்பதை ரத்து செய்து, எட்டு மணி நேரம் மட்டுமே வேலை என்பதை நடைமுறைப் படுத்த வேண்டும்.
பணியிடங்களில் உரிய பாதுகாப்பை உத்தரவாதப் படுத்துவதோடு, கௌரவமான முறையில் பணியாற்றும் வகையில் பணியிடச் சூழலை உருவாக்கிட வேண்டும்.
இலவச சீருடை, இலவச பேருந்து பயண அடையாள அட்டை வழங்கிட வேண்டும்.
வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட அனுமதிக்க வேண்டும். அவர்களின் கவுரவமும், சுயமரியாதையும் காக்கப்பட வேண்டும்.
கொரோனாப் பணிக்கான சிறப்பு ஊதியம் வழங்கிட வேண்டும்.
ஆர்.சி.எச். திட்டத்தின் கீழ் பணிபுரியும், இந்தத் தூய்மைப் பணியாளர்களின் சேவை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட அவசியமானது. அங்கு பிரசவங்களை பார்ப்பதற்கு அத்தியாவசிமானது.
பிரசவத்திற்கு வரும் தாய்மார்களுக்கு உற்ற துணையாக இருந்து அனைத்து பணிவிடைகளையும் இவர்கள் செய்கின்றனர்.
எனவே, பல்வேறு மக்கள் நலன் சார்ந்த மருத்துவத் திட்டங்களை சிறப்பாக நடைமுறைப் படுத்திவரும் தமிழ்நாடு அரசு, இந்தத் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளையும் உடனடியாக ஏற்க வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஞாயிறு (28/11/2021 ) காலை 10.30 மணிக்கு, சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் என்.எஸ்.செல்வராஜ் தலைமை தாங்குகிறார்.
எஸ்.இராஜலட்சுமி, எஸ்.கலைச்செல்வி, எஸ்.திருமாத்தாள் முன்னிலை வகிக்கின்றனர்.
தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி பொதுச் செயலாளர் டி.எம்.மூர்த்தி தொடக்க உரையாற்றுகிறார்.
பொதுச் செயலாளர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி கோரிக்கை விளக்க உரையாற்றுகிறார்.
ஜனநாயக அரசு மருத்துவர்கள் சங்கத்தின் ( ஞிஜிழிநிஞிகி) தலைவர் டாக்டர் பி.பாலகிருஷ்ணன், அரசு மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் ( ஷிஞிறிநிகி) மாநிலச் செயலாளர் டாக்டர். ஏ.இராமலிங்கம், தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் (ஜிழிவிளிகி) பொதுச் செயலாளர் டாக்டர் மு.அகிலன், அரசு அனைத்து டாக்டர்கள் சங்கத்தின் (நிகிஞிகி) மாநிலத் தலைவர் டாக்டர்.சி.சுந்தரேசன், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் (ஞிகிஷிணி) மாநிலப் பொருளாளர் டாக்டர் ஜி.ரமேஷ், தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மு.பொன்னிவளவன், பாராமெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கத்தின் மாநில துணைத்தலைவர் எஸ்.தனவந்தன், தமிழ்நாடு அரசு எம்.ஆர்.பி செவிலியர்கள் நலச்சங்கத்தின் நிர்வாகி ஏ.நிரோஷா ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
இச்சங்கத்தின் கவுரவத் தலைவரும், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளருமான டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து உரையாற்றுகிறார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து, ஏராளமான ஆர்.சி.எச் தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
இவ்வாறு பொதுச் செயலாளர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.