பேரவைத் தலைவர் முன் மொழிவை நாடு ஏற்க வேண்டும்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்
நாடு முழுவதும் உள்ள சட்டமன்றப் பேரவைத் தலைவர்கள் பங்கேற்ற 52 வது மாநாடு கடந்த 16.11.2021 முதல் 19.11.2021 முடிய இமாச்சலப் பிரதேச மாநிலத் தலைநகர் சிம்லாவில் நடைபெற்று முடிந்துள்ளது.
இம்மாநாட்டில் கலந்து கொண்ட தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் திரு.மு.அப்பாவு முன்வைத்த கருத்துக்களும் முன் மொழிவுகளும் மக்களாட்சிக்கு வலுச் சேர்க்கும் திசைவழியில் அமைந்துள்ளது.
ஆட்டுக்கு தாடி அவசியமில்லாமல் இருப்பது போல், நாட்டில் ஆளுநர் பதிவு அமைந்திருப்பதை நீண்ட காலமாக அறிஞர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
ஒன்றிய அரசின் ஆட்சியில் அமரும் கட்சிகள், தனது அரசியல் கருத்துக்களை ஏற்காத, மாநில உரிமைகளை பாதுகாக்கும் முனைப்பில் செயல்பட்டு வருகிற மாநில அரசுகளுக்கு நெருக்கடியும், நிர்பந்தமும் தருகிற முகமை அலுவலகமாக ஆளுநர் மாளிகை பயன்படுத்தப்படுகின்றது.
பாஜக ஒன்றிய அரசின் உத்தரவுகளை எந்த எதிர்ப்பும், முனுமுனுப்பும் இல்லாமல் செயல்படுத்தி வந்த அஇஅதிமுக ஆட்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அரசின் நடவடிக்கைகளில் தலையிட்டு, அத்துமீறல் ஆய்வுகளில் ஈடுபட்ட போது தமிழ்நாடு கொதித்தெழுந்து எதிர்த்தது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
டெல்லி துணை நிலை ஆளுநரின் அத்துமீறல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்த மேல் முறையீட்டு வழக்கில் “ஆளுநருக்கு தனி அதிகாரம் ஏதும் கிடையாது. அமைச்சரவை முடிவுகளுக்கு முட்டுக் கட்டை போடக்கூடாது” என உத்தரவிட்டுள்ளது.
பேரவைத் தலைவர் திரு. மு.அப்பாவு “ஒரு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பும் சட்ட மசோதா அல்லது தீர்மானம் எதுவானாலும் ஆளுநர் தனது ஒப்புதலை அல்லது மறுப்பை தெரிவிக்க கால வரம்பு நிர்ணயிக்க வேண்டும். இதேபோல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும் மசோதாக்கள் மற்றும் தீர்மானங்கள் மீது அவர் முடிவு எடுக்கவும் கால வரம்பு நிர்ணயிக்க வேண்டும். ஒரு வேளை ஒப்புதல் தர இயலாது என்று முடிவு செய்தால் அதற்கான காரணங்களை முழுமையாக விளக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பேரவைத் தலைவர் யாருடைய உரிமைகளிலும் தலையிடாமல் பேரவைக்கு அதிகாரம் கேட்டிருப்பது மக்களில் குரலாக ஒலிக்கிறது. இதனை அனைவரும் முன்னெடுக்க வேண்டும்.
தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவரின் கருத்துக்களையும், முன்மொழிவுகளையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது. ஒன்றிய அரசும், குடியரசுத் தலைவரும் தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்று, சட்டங்களில் உரிய, பொருத்தமான திருத்தங்களை செய்ய வேண்டும் என வலியுறுத்துக் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு மாநில செயற்குழு சார்பில் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.