திருச்செந்தூர் அருகே உள்ள கோயிலுக்கு சொந்தமான 100 பவுன் நகைகளை ஒப்படைக்க மறுப்பதாக புகார்: பாஜக நிர்வாகி உள்ளிட்ட 14 பேர் மீது வழக்கு
திருச்செந்தூர் அருகே கோயிலுக்கு சொந்தமான சுமார் 100 பவுன் நகைகளை ஒப்படைக்க மறுப்பதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பாஜக நிர்வாகி உள்ளிட்ட 14 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள வீரமாணிக்கம் கிராமத்தில் ஒரே வளாகத்தில் வீரபத்ரகாளியம்மன், சந்தி அம்மன், சுடலைமாடன் ஆகிய மூன்று கோயில்கள் உள்ளன. இந்த கோயில்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டன. தக்காராக அ.காந்திமதி என்பவர் நியமிக்கப்பட்டு, பணியாற்றி வருகிறார்.
கடந்த மாதம் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு பிரிவினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கரோனா தடுப்பு நடைமுறைகள் காரணமாக விழா நடத்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் அனுமதி மறுத்துவிட்டனர்.
ஆனால், கடந்த மாதம் 5-ம் தேதி இரவு ஒரு தரப்பைச் சேர்ந்த சிலர் கோயிலுக்கு முன்பு தடையை மீறி திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். இதுதொடர்பாக கோயில் தக்கார் குரும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் “சட்டம் ஒழுங்கு பிரச்சினை மற்றும் கரோனா காரணமாக வீரமாணிக்கம் வீரபத்ரகாளியம்மன் கோயில் திருவிழா நடத்த அனுமதி அளிக்கவில்லை. ஆனால், தடையை மீறி எஸ்.பி. பட்டுராமசுந்தரம் உள்ளிட்டோர் திருவிழா கால்நாட்டு விழா நடத்தினர். இதனை கண்டித்த போது என்னை பணி செய்ய விடாமல் தடுத்தனர். திருவிழாவுக்காக பட்டுராமசுந்தரம் மக்களிடம் பணம் வசூல் செய்ததாக புகார் வந்துள்ளது. கோயிலுக்கு சொந்தமான சுமார் 100 பவுன் நகைகளை பட்டுராமசுந்தரம் தன்வசம் வைத்துக் கொண்டு, கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்காமல் இருந்து வருகிறார்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் எஸ்.பி. பட்டுராமசுந்தரம், அவரது சகோதரர்கள் எஸ்.பி.கார்த்திகேயன், எஸ்.பி.முத்து, அதே ஊரைச் சேர்ந்த எஸ்.முருகேசன், எஸ்.திருமால், வி.கந்தசாமி பாண்டியன் மற்றும் 8 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் குரும்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
எஸ்.பி. பட்டுராமசுந்தரம் பாஜக வர்த்தக அணியில் மாநில நிர்வாகியாக உள்ளார். இந்த வழக்கில் தூத்துக்குடி நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.