பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைப்பது சாத்தியமில்லை: தமிழக நிதியமைச்சர் தகவல்
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 7 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு தனது வரியை பலமுறை உயர்த்தி, மக்களின் மீது பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், வரியைக் குறைக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். இதற்கு மத்திய அரசு செவிசாய்க்காத நிலையில், ஆகஸ்ட் 13-ல் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் பெட்ரோல் மீதான மாநில வரியை லிட்டருக்கு ரூ.3 குறைத்து அறிவித்தோம். இதனால், ஆண்டுக்கு ஏற்படும் ரூ.1,160 கோடி இழப்பையும் அரசு ஏற்றது.
மத்திய அரசும் கடந்த நவ.3-ம் தேதி பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு ரூ.5-ம், டீசலுக்கு ரூ.10-ம் குறைத்துள்ளது. மத்திய வரிவிதிப்புக்குப் பின் தமிழக அரசும் வரி விதிப்பதால், பெட்ரோலின் சில்லறை விற்பனை விலையில் ரூ.5.65-ம், டீசல் விலையில் ரூ.11.10-ம் குறையும். இதனால் மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,050 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும்.
மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுள்ளது, ஏற்க இயலாத கோரிக்கையாகும்.
கடந்த 2014-ம் ஆண்டை ஒப்பிடும்போது, தற்போது வரி குறைக்கப்பட்டபோதும், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.18.42-ம், டீசலுக்கு ரூ.18.23-ம் மத்திய அரசு கூடுதலாக விதித்து வருகிறது. மத்திய அரசு கடந்த 7 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் மீதான வரியை தொடர்ந்து அதிகரித்தது. இதை மீண்டும் 2014-ல் இருந்த அளவுக்கு குறைத்துக்கொண்டால், மாநில அரசின் வரி விதிப்பு தானாகவே குறைந்து விடும்.
எனவே, மத்திய அரசின் வரி தொடர்ந்து அதிகம் உள்ள நிலையில், மாநில அரசின் வரியை மேலும் குறைப்பது நியாயமும் அல்ல, சாத்தியமும் அல்ல.இதைக் கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும். இந்த நடவடிக்கை தானாகவே மாநிலங்களின் வரியை குறைத்து விடும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.