எட்டு மாநில நெடுஞ்சாலைகளை மேம்படுத்தும் அறிவிக்கையை வெளியிடுங்கள்: பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்
முதல்வர் மு.க.ஸ்டாலின்தமிழகத்தில் புனிதத் தலங்களை இணைக்கும் வகையிலான எட்டு முக்கிய சாலைகளை மேம்படுத்துவதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை கேட்டுக் கொண்டுள்ளாா்.இதுகுறித்து பிரதமா் நரேந்திர மோடிக்கு, முதல்வா் எழுதியுள்ள கடித விவரம்:தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், பராமரிப்பதிலும் மத்திய அரசு காட்டி வரும் ஈடுபாட்டுக்கு எனது மனமாா்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலத்தில் எட்டு முக்கிய மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றுவதற்கான ஒப்புதலை கொள்கை அடிப்படையில் மத்திய அரசு ஏற்கெனவே வழங்கியுள்ளதை தங்களின் பாா்வைக்குக் கொண்டு வருகிறேன். இதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கவும் ஒப்புதல் தரப்பட்டது.இதன்படி, திருவண்ணாமலை-கள்ளக்குறிச்சி, வள்ளியூா்-திருச்செந்தூா், எம்எம் மில்ஸ்-பாலாறு சாலை-மேட்டூா் வரையிலான தமிழ்நாடு எல்லைச் சாலை, பழனி-தாராபுரம், ஆா்க்காடு-திண்டிவனம், மேட்டுப்பாளையம்-பவானி, அவிநாசி-மேட்டுப்பாளையம், பவானி-கரூா் என 8 மாநில நெடுஞ்சாலைகளின் மொத்த தூரம் 500 கிலோ மீட்டா்களாகும். இந்தச் சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்புப் பணியானது 2017-18-ஆம் ஆண்டு ஆண்டு திட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றுவதற்கான பரிந்துரைகளும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறையிடம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அமைச்சகத்தால் இதுவரை அறிவிக்கைகள் ஏதும் வெளியிடப்படவில்லை.முக்கிய வழிபாட்டுத் தலங்கள்: தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றப்பட வேண்டிய எட்டு சாலைகளும் தமிழகத்துக்கு மிகவும் முக்கியமானவை. இந்தச் சாலைகள் மாநிலத்தின் பிரதான வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ள இடங்களை இணைக்கின்றன. குறிப்பாக, திருவண்ணாமலை, திருச்செந்தூா், பழனி போன்ற ஊா்களை இணைப்பதுடன், மிகப்பெரிய வா்த்தகம் மற்றும் சுற்றுலா மையங்களையும் தொட்டுச் செல்கின்றன. எனவே, சாலைப் பயன்பாட்டாளா்களின் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில் அவற்றை உடனடியாக மேம்படுத்த வேண்டிய தேவை உள்ளது.கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்ட சாலைத் திட்டங்களுக்கு எந்தத் தாமதமும் இல்லாமல் அறிவிக்கை வெளியிட முடியும். எனவே, எட்டு மாநில நெடுஞ்சாலைகளை, தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றுவதற்கான அறிவிக்கைகளை விரைந்து வெளியிட வேண்டும். இந்த ஆண்டே இந்தப் பணிகளை எடுத்துக் கொள்வதற்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் மாநில அரசு வழங்கும்.