ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் வன்கொடுமை இல்லை என்ற தீர்ப்பை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்
புதுதில்லி,நவ.18- பெண்ணின் ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் வன்கொடுமை இல்லை; ஆடைக்கு மேல் தொடுவது போக்சோ சட்டத்திற்குள் வராது என்ற மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளை தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. கடந்த 2016-ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த 12 வயது சிறுமி யிடம் அதேபகுதியைச் சேர்ந்த 35 வயதான சதீஷ் என்பவர் பாலியல் அத்துமீறலில் ஈடு பட்டார். இதையடுத்து, அந்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் அவருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து குற்றவாளி சதீஷ் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை நீதிபதி புஷ்பா கனேடிவாலா கடந்த 19-ஆம் தேதி தீர்ப்பு ஒன்றை வழங்கினார். குற்றம்சாட்டப்பட்ட நபர் சிறுமியின் ஆடைக்கு மேலே உடலை சீண்டினால், அது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையைத் தடுக்கும் போக்சோ சட்டத்தின்கீழ் குற்றமாகாது என தீர்ப்பளித்தார்.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த தீர்ப்பை எதிர்த்து தேசிய உரிமைகள் குழந்தைகள் பாதுகாப்பு, தேசிய மகளிர் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்கின் விசாரணையில், ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இந்த விவகாரம் குறித்து முறையிட்டார். மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையின் தீர்ப்பு அதிர்ச்சி தருவதாகவும், எதிர்காலத்தில் பல்வேறு எதிர்விளைவுகளை ஏற்படுத்திடும் அபாயம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, இதுபற்றி தனியாக வழக்குப் பதிவு செய்ய அனுமதித்தார். இந்த வழக்கில் குற்ற வாளிக்கு தண்டனையைக் குறைத்த மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையின் தீர்ப்புக்கு, இடைக்கால தடை விதித்து உத்தர விட்டிருந்தார். இந்நிலையில் சிறுமிகளை ஆடைக்கு மேல் தொட்டு பாலியல் தொல்லை தந்தால் போக்சோ போட முடியாது; பாலியல் வன்கொடுமை இல்லை என்ற மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளையின் தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரத்து செய்து, உத்தரவிட்டுள்ளனர். மேலும் நீதிபதிகள் கவனமுடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.