மாநில அரசு கேட்டுள்ள நிவாரண நிதியை உடனே வழங்கு!
வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் காரணமாக தமிழ்நாட்டில் பெய்த தொடர் கனமழை காரணமாக கடுமையான பாதிப்புகளும், சேதாரங்களும் ஏற்பட்டுள்ளன. வடகிழக்கு பருவ கால இயற்கை பேரிடரை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், நிவாரணப் பணிகளையும் முனைப்போடு மேற்கொண்டு வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் வெள்ள பாதிப்புக்கான நிவாரணம் வழங்கவும், நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்கவும் ஒன்றிய அரசு ரூ.6 ஆயிரத்து, 629 கோடி முதல் கட்ட நிதியாக வழங்க வேண்டும் என கேட்டுள்ளது. கோரிக்கையின் முக்கியத்துவம் கருதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்திரு.டி.ஆர்.பாலு 17.11.2021 ஆம் தேதி ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷாவை நேரில் சந்தித்து விரிவான விண்ணப்பம் கொடுத்துள்ளார். வெள்ள நிவாரணப் பணிக்கு தமிழ்நாடு அரசு கோரியுள்ள முதல்கட்ட நிதியை முழுமையாக ஒன்றிய அரசு விரைந்து வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வலியுறுத்துவதுடன், மத்தியக் குழுவை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறது.