ரஷ்யப்புரட்சி
டி. ராஜா
மனித சமுதாயத்தைப் பற்றிய நமது புரிதலை ரஷ்யப் புரட்சி அளவிற்கு மாற்றியமைத்த வரலாற்று நிகழ்வுகள் என்று சிலவற்றை மட்டுமே நம்மால் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். புதிய நாள்காட்டியின் படி நவம்பர் 7-ஆம் நாள் ரஷ்ய புரட்சி தினம் கொண்டாடப்படுகிறது. பழைய நாள்காட்டியின் படி ரஷ்ய புரட்சி தினம் அக்டோபர் 25 என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
வெகுமக்களின் புரட்சிகர சிந்தனைகளைப் பிரெஞ்சுப் புரட்சி சுடர்விடச் செய்தது. ஆனால், அந்தப் புரட்சி பின்னர், போனபார்ட்டிசத்திற்குப் பலியானது. ‘தொழிலாளர்களின் அரசு’ ஒன்றை ஸ்தாபிப்பதில் ரஷ்யப் புரட்சி தான் முதல் முறையாக வெற்றி கண்டது. சுரண்டல், அநீதி மற்றும் சமத்துவமின்மை ஆகியவை இல்லாத ஒரு சமுதாயத்தைக் காண தொலைநோக்கு பார்வை கொண்ட சிந்தனையாளர்களும், தத்துவ ஞானிகளும் விழைந்தார்கள்.
ஆனால், மாமேதை லெனின் தலைமையில், மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸின் சித்தாந்தத்தைப் பின்பற்றி, ரஷ்ய உழைக்கும் மக்கள் சோவியத்துகளை ஆட்சி பீடத்தில் அமர்த்தியதை உலகமே கண்டு வியந்தது.
முக்கியத்துவம் வாய்ந்த அந்த வரலாற்று நிகழ்வை நேரில் அனுபவப்பட்ட அமெரிக்க பத்திரிக்கையாளர் ஜான் ரீட், ‘உலகை குலுக்கிய பத்து நாட்கள்’ என்ற அவரின் நூலில் அந்த காலகட்டத்தின் வரலாற்று மாற்றத்தைப் பற்றி விவரித்துள்ளார். மார்க்சிய கருத்துகளின் வீரமார்ந்த நடைமுறை மற்றும் ஆழமான சித்தாந்த விவாதங்கள் மீது ரஷ்ய புரட்சி கட்டமைக்கப்பட்டது. ஜார் மன்னனின் சர்வாதிகாரம் மற்றும் முதலாளித்துவ சுரண்டல் ஆகியவற்றின் பிடியில் இருந்து ரஷ்ய வெகுமக்களை அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க புரட்சி விடுதலை செய்தது.
மார்க்சியம் என்ற புரட்சிகர சித்தாந்தம் தான் ஏகாதிபத்திய எதிர்ப்பு, சோஷலிசம், சர்வதேசியம் ஆகிய லட்சியங்களை ரஷ்யப் புரட்சிக்குள் விதைத்தது. இந்தச் சித்தாந்த அடித்தளம்தான் ரஷ்ய புரட்சியை உலக வரலாற்றில் சகாப்தம் ஒன்றை நிறுவிய நிகழ்வாகவும், உலகம் முழுவதும் எழுச்சியுற்ற விடுதலைப் போராட்டங்களுக்கு ஆதர்ச மாகவும் முகிழ்க்கச் செய்தது.
புதியதொரு சமுதாயத்தைக் கட்டி அமைப்பதில் மார்க்சியத்தின் பங்கு பற்றிய தீவிர விவாதங்கள் ஐரோப்பா முழுவதும் நடைபெற்று வந்தது. ஆனால், மாமேதை லெனின் ரஷ்ய சூழலுக்கு இணங்க மார்க்சியத்தை நடைமுறைப்படுத்தினார். ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற அப்போதைய தொழில் வளர்ச்சி அடைந்த நாடுகளில் தான் புரட்சிக்கான சூழல் அமைந்துள்ளது என்று மார்க்சிய சிந்தனையாளர்கள் மத்தியில் ஒரு கருத்து நிலவியது.
ஆனால், அதற்கு மாறாக, பின்தங்கிய நாடான ரஷ்யாவில் உலகின் முதல் சோசலிச புரட்சி எழுந்தது. எதேச்சதிகாரத்தைத் தூக்கியெறிவதில் ஒன்றுபட்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் சங்கமத்திற்கு மாமேதை லெனின் வழங்கிய தனித்துவமிக்க தலைமையும், ஒத்திசைவான தத்துவார்த்த வழிகாட்டுதலும் தான் அந்தப் புரட்சியைச் சாத்தியப்படுத்தியது.
அனைத்து வகையான, வடிவிலான சுரண்டல், படிநிலை மற்றும் அநீதி ஆகியவற்றை திறம்பட எதிர்த்து முறியடித்திட ஒரு தேர்ந்த சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டு, அதனை சூழலுக்கு உகந்த முறையில் நடைமுறைப் படுத்துவது அவசியமாகும். இதுவே ரஷ்ய புரட்சி மற்றும் இதர விடுதலைப் போராட்டங்களின் அனுபவத்தில் இருந்து நாம் பெறவேண்டிய படிப்பினை ஆகும்.
மார்க்சியவாதிகளுக்கும், சமூக ஜனநாயகவாதிகளுக்கும் இடையேயான விவாதம் உச்சகட்டத்தை அடைந்தபோது லெனின் 1902 ஆம் ஆண்டு கூறியது பின்வருமாறு:
“புரட்சிகர தத்துவமின்றி புரட்சிகர இயக்கம் இருக்க முடியாது. ஆனால், சூழலுக்கு ஏற்றவாறு செயல்படுவது என்ற எழிலார்ந்த போதனையும், நடைமுறை செயல்பாட்டின் மிகக் குறுகிய வடிவங்கள் மீதான கண்மூடித்தனமான ஈர்ப்பும் ஒன்றோடு ஒன்று இணைந்து செல்லும் போது இந்தக் கருத்தை மிக அழுத்தமாக வலியுறுத்தி சொல்ல இயலாது.”
புரட்சியின் தத்துவம், நடைமுறை, சுரண்டலை ஒழித்து கட்டிய போராட்டம் என்று இவை அனைத்தும் ரஷ்யப் புரட்சியை காலத்துக்கு ஏற்புடைய ஒன்றாகவும், வருங்கால தலைமுறைகளுக்கு உத்வேகம் ஊட்டக்கூடிய ஒன்றாகவும் உருப்பெறச் செய்து விட்டது. புரட்சியின் செய்தி மிகத் தெளிவானது: தீர்க்கமான, குறிப்பிட்ட சூழலுக்கு ஏற்ப தத்துவத்தை நடைமுறைப்படுத்துவது.
இந்தியாவில் ரஷ்யப் புரட்சி பேரார்வத்துடன் வாழ்த்தி வரவேற்கப்பட்டது. இந்திய விடுதலைப் போராட்ட இயக்கத்திற்கு புதிய நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சியது; புதிய செயல் திட்டங்களை உருவாக்கிட வித்திட்டது. வர்க்கம், சாதி, மதம் மற்றும் பாலினம் என்று சமத்துவமின்மையால் பீடிக்கப்பட்டு, அந்நியர் ஆட்சியில் கட்டுண்டு கிடந்த நமது தேசத்தில், அனைத்துவித சுரண்டலையும் ஒழிப்போம் என்ற செங்கொடி இயக்கத்தின் முழக்கம் மக்களை வெகுவிரைவில் தன்னகத்தே ஈர்த்தது. சோஷலிச இந்தியாவை உருவாக்குவோம் என்ற லட்சியத்துடன் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்களை இணைத்துக் கொண்டார்கள்; விடுதலைப் போராட்ட இயக்கத்திற்கு முற்போக்கான பங்களிப்பை உறுதிப்பாட்டுடன் ஈந்தார்கள்.
அரசியல் நிர்ணய சபை, பூரண சுதந்திரம், தொழிலாளர் உரிமைகள், ஜமீன்தார் முறை ஒழிப்பு, அடிப்படை உரிமைகள் போன்ற கோரிக்கைகள், தன்னலமற்ற களப்பணிகள், தோன்றிய காலத்தின் போதே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செய்த மாபெரும் தியாகங்கள், ரஷ்ய புரட்சியின் லட்சியங்களால் உத்வேகம் பெற்ற பகத்சிங் உள்ளிட்ட இளைஞர்கள் என்று இவை அனைத்திற்கும் அந்த புரட்சி கருவியாகப் பயன்பட்டது உண்மையானது.
இந்தியாவின் சிக்கலான எதார்த்த நிலையை நன்கு உணர்ந்த நமது தலைவர்கள் 1925ஆம் ஆண்டில் நடைபெற்ற கட்சியின் முதல் மாநாட்டிலேயே தீண்டாமை ஒழிப்பு பற்றிய கருத்துக்களை முன்வைத்தார்கள். புரட்சிகர தத்துவத்தின் வழிகாட்டுதல்படி, தொழிலாளர்களை அமைப்பு ரீதியாகத் திரட்ட, ஏஐடியுசி (1920), மாணவர்களுக்காக ஏ.ஐ.எஸ்.எஃப் (1936), விவசாயிகளுக்காக ஏ.ஐ.கே.எஸ் (1936), எழுத்தாளர்களுக்காக பி.டபிள்யூ.ஏ. (1936) மற்றும் கலைஞர்களுக்காக இப்டா (1943) ஆகிய அமைப்புகளை இடதுசாரிகள் உருவாக்கினார்கள்.
இந்த அமைப்புகள் சோதனையான காலகட்டங்களை வெற்றிகரமாகச் சமாளித்து சமுதாயத்தின் முற்போக்கான பிரிவுகளின் பிரதிநிதிகளாகத் திகழ்கின்றன.
இப்போது இடதுசாரிகளின் முன் இருக்கும் கடமை, சுதந்திரப் போராட்டத்தின் போது நாம் எதிர்கொண்ட சிக்கலான கடமையைப் போன்றதாகும். ஆர்எஸ்எஸ் & பாஜக ஆட்சியில் சாதிய பாகுபாடுகள், வகுப்புவாத மையப்படுத்துதல் மற்றும் பாலின பாகுபாடுகள் ஆகியவை புது வீரியத்துடன் நம்மோடு மூர்க்கத்தனமாக மோதிக் கொண்டிருக்கும் ஒரு நெருக்கடியான காலத்தில் நாம் வாழ்கிறோம்.
இந்தப் போக்கு நாம் போராடிப் பெற்ற சுதந்திரத்தையும், விடுதலைப் போராட்டத்தின் ‘அனைவரையும் உள்ளடக்கிய’ பெருமைமிகு மரபையும் விழுங்கி வருகிறது. பணவீக்கம், பசி, சமத்துவமின்மை ஆகியவற்றால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். புதிய தாராளமய முதலாளித்துவ தாக்குதல் நமது தேசத்தின் சொத்துக்களையும் சூறையாடி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளில் ஆர்எஸ்எஸ்&சின் பிரிவினைவாத கட்டுக்கதைகள் விண்ணை முட்டும் அளவிற்கு அதிகரித்து வருகிறது. அதன் பிரச்சார சாதனங்கள் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளில் இருந்து நமது கவனத்தை திசை திருப்பிடவும், மாற்றுக் கருத்துடையவர்களை தேச விரோதிகள் என்று முத்திரை குத்துவதற்கும் முயன்று வருகின்றன.
நெருக்கடியால் சூழப்பட்டுள்ள நிலையில், சித்தாந்தம் மற்றும் சித்தாந்த போராட்டத்தின் முக்கியத்துவம் மிகத் துல்லியமாகத் தெளிவாகி இருக்கிறது. மதச்சார்பற்ற, ஜனநாயக மற்றும் முற்போக்கு எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு பாஜகவை முறியடிக்க வேண்டும் என்பதே நமது திட்டத்தின் முக்கியமான அங்கமாகும்.
மனுஸ்மிருதியை உயர்த்திப்பிடிக்கும் ஆர்எஸ்எஸ், பிரிவினைவாத மற்றும் வன்முறையைத் தூண்டும் கருத்துகளையும், அரசியலையும் வேராகக் கொண்டிருக்கிறது. அவர்கள் நமது அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிப்பதோடு சாதி, மதம், பாலினம் மற்றும் ஆணாதிக்க அடிப்படையில் ஒரு மதவாத படிநிலைகள் கொண்ட சமுதாயத்தைப் பற்றிய தீவிரமான நோக்குநிலை உடையவர்கள் ஆவர்.
தேசத்தின் இன்றைய சூழல் பாஜக ஆர்எஸ்எஸ்க்கு எதிரான ஒரு சமரசமற்ற சித்தாந்த போராட்டத்தை முன்வைக்கிறது. இந்தப் போராட்டத்தில் இடதுசாரிகள் ஒரு தீர்மானகரமான பாத்திரத்தை வகிக்க வேண்டும். அதுவே மக்களோடு நம்மை இணைக்கும்; அரசியல் மற்றும் தேர்தல் போராட்டங்களில் அதன் மூலமே நாம் வெற்றி பெற முடியும். இதர மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள், சித்தாந்த பிரச்சனைகள் குறித்த தெளிவைப் பெறுவதில் இடதுசாரிகளின் பாத்திரம் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தும்.
உழைக்கும் வர்க்கத்தின் மீதும், நமது மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசின் மீதும் தாக்குதல்கள் தொடுக்கப்படும் இந்தக் காலச் சூழலில் ரஷ்யப் புரட்சியை நாம் நினைவுகூர்ந்து கொண்டாடுவதும், அதன் நீட்சியாக உழைக்கும் வர்க்கத்தினர் ஓரணியாக திரளுவதற்கு ரஷ்யப் புரட்சியின் அறைகூவலும் முக்கியத்துவம் பெறுகிறது.
வரலாற்றின் ஒப்பற்ற நிகழ்வான ரஷ்ய புரட்சியின் தினத்தை நாம் நினைவுகூர்ந்து கொண்டாடுவதும், அதற்கென நாம் ஒன்றிணைவதும் ஒட்டுமொத்த நவீன தாராளமய, முதலாளித்துவ அமைப்பையே நடுக்கமுறச் செய்கிறது.
சோவியத் யூனியன் தகர்ந்து போய் இருந்தாலும், நூற்றாண்டு கடந்த நிலையிலும் ரஷ்ய புரட்சி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. இனிவரும் காலங்களிலும் நீதிக்காக களம் காணும் புரட்சியாளர்களுக்கும், போராளிகளுக்கும் ரஷ்ய புரட்சி தொடர்ந்து உத்வேகமூட்டும்.
டி. ராஜா
தமிழில்: அருண் அசோகன்