வெள்ளை அறிக்கை வெளிச்சம்! ஒன்றிய அரசு மனம் குன்றிய அரசா?
த.லெனின்
தமிழகத்தின் நிதி நிலைமை பற்றிய வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார்.
அதிமுக அரசின் கடந்த பத்தாண்டுகால நிர்வாக திறமையின்மையால் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், இதனை சரி செய்ய வரி விதிப்பில் மாற்றங்கள் செய்வது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆந்திர, பஞ்சாப் மாநில அரசுகளின் வெள்ளை அறிக்கைகள், அதிமுக வின் கடந்த 2001ல் அப்போதைய நிதியமைச்சர் சி.பொன்னையன் வெளியிட்ட வெள்ளை அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் இவ்வறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சுமார் 12.5 லட்சம் அரசு பணியாளர்கள் பணியாற்றும் தமிழகத்தில், அரசுக்கு வருவாய் வராவிட்டாலும் கூட செலவினங்களை குறைக்க இயலாது. ஆனால் தமிழகத்தின் வருவாய் தொடர்ந்து சரிந்துள்ளது.
14–வது நிதிக்குழுவின் அறிக்கையின்படி சுமார் ரூ.75 ஆயிரம் கோடிவரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இது உற்பத்தி மதிப்பில் 3.16 சதம். கடந்த 2006&11 காலகட்டங்களில் வருவாய் உபரியாக இருந்தது-. ஆனால் 2011&16 காலகட்டத்தில் ரூ.17,000 கோடி பற்றாக்குறை ஏற்பட்டது-. இதுவே 2016&21ல் ரூ.1.50 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
எனவே, கடன் பெற்று செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் பொதுக் கடன் ரூ.5,70,189 லட்சம் கோடியாக உள்ளது-. மாநிலத்தில் மொத்தம் 2 கோடியே 16 லட்சத்து 24 ஆயிரத்து 238 குடும்பங்கள் உள்ளன.
இதில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2,64,926 கடன் உள்ளது. அதுவே தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தனி நபருக்கும் பங்கிட்டுப் பார்த்தால் ரூ.1,10,000 கடன் உள்ளது.
மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் கர்நாடக மாநிலங்கள் கடந்த 2017 &18, 2018&19 ஆகிய ஆண்டுகளில் உபரி வருவாய் எட்டிய நிலையில், தமிழ்நாடு மட்டும் தொடர்ந்து வருவாய் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது என்பதையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. ஏன் இந்தச் சரிவு?
கடந்த 10 ஆண்டுகளில் மாநில அரசின் வருவாய் வளர்ச்சி குறைந்து கொண்டே வருகிறது. 2006&2007 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.48 சதமாக இருந்த சொந்த வரி வருவாய் வரவினங்கள் தொடர்ந்து சரிவை சந்தித்து 2020&21ம் ஆண்டில் வெறும் 5.46 சதமாக அது குறைந்துள்ளது.
இந்த 3 சதவிகித சரிவு என்பது சுமார் ரூ.60,000 கோடி வருவாய் இழப்பை குறிக்கிறது. எப்போதும் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வரி வருவாய் தேசிய சராசரியைவிட அதிகமாக இருந்து வந்துள்ளது. ஆனால் 2018&2019ம் ஆண்டில் முதல் முறையாக அது குறைந்து போனது.
வசதி படைத்தவர்கள், மேல்த்தர நடுத்தர பகுதிகள் வாங்கும் வாகன வரி கர்நாடகா கேரளாவைவிட தமிழகத்தில் குறைவு.
கனிம, தனிம வளங்கள் அதிகம் உள்ள தமிழ்நாட்டில் அதன் மீதான வரி மிகக் குறைவு. விலையும் கூட சர்வதேச மதிப்பை விட மிகக் குறைவாக உள்ளது. இவற்றின் மீது புதிய அரசு செயல்பட்டு அதிக வருமானத்தை ஈட்ட முயற்சிக்க வேண்டும்.
ஒன்றிய அரசின் வரிகளில் தமிழகம் பெற்ற பங்கு தொடர்ந்து குறைந்து வருகிறது. 10வது நிதிக்குழு காலத்தின்போது 6.637% இருந்து 14வது நிதிக்குழு காலத்தில் 4.023% ஆக சரிந்தது.
15 ஆண்டு காலத்தில் கடந்த 2007&08 ஆண்டில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிகப்பட்ச அளவான 2.20% தமிழ்நாடு பெற்றது. ஆனால் இது தொடர்ந்து குறைந்து 2019 &2020 ல் 1.43% ஆகவும், 2020&21ல் 1.28%ஆக மிகவும் குறைந்தது.
15வது நிதிக்குழு காலத்தில் இந்த பங்கு 4.079% ஆக சிறிது உயர்ந்தாலும் நிதிநிலை தொடர்ந்து மோசமடைந்தே வருகிறது. அதிமுக அரசு மாநிலத்தின் நியாயமான பங்கை பெறுவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
2019&20ஆம் ஆண்டில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளின் வாயிலாக ஒன்றிய அரசு 2,39,452 கோடி ரூபாயை வருவாயாக பெற்றது. அதில் தமிழ்நாட்டிற்கு ரூ.1,163.13 கோடியை மட்டுமே அளித்தது.
2020&21 ஆம் ஆண்டு பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் விதிக்கப்பட்ட அதிக வரிகள் மூலம் மட்டும் ஒன்றிய அரசு ரூ.3,89,000 கோடி லாபம் ஈட்டியது. இந்தியாவிலேயே அதிக வாகன போக்குவரத்து உள்ள தமிழ்நாட்டிற்கு அவர்கள் பகிர்ந்தளித்த தொகை வெறும் ரூ.837 கோடி மட்டுமே. இது முந்தைய நிதியாண்டில் ஒன்றிய அரசு பகிர்ந்தளித்த தொகையை விட 28 சதம் குறைவானதாகும். ஏன் இந்த முரண்பாடு? ஓரவஞ்சனை?
ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு நிதி பகிர்ந்தளிப்பதில் மனம் குன்றிய அரசாக ஏன் மாறிப்பபோனது?
உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த அதிமுக அரசு தேர்தல்களை நடத்தத் தவறியதால் ஒன்றிய நிதிக்குழுவிடமிருந்து உரிய மானியங்களை பெற முடியவில்லை. இதனால் அவற்றின் செயலாற்றும் திறன் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியங்களுக்கு மின்சாரம் மற்றும் குடிநீருக்கான கட்டணங்களை உள்ளாட்சி அமைப்புகள் முறையாக செலுத்த முடியவில்லை.
உள்ளாட்சி அமைப்புகளின் முக்கிய ஆதாரம் சொத்து வரி. ஆனால், அவைகளும் கூட முறையாக வசூலிக்கப்படவில்லை. பெரும் நிறுவனங்களிடம் வரி வசூலிக்காதப் போக்கே தொடர்ந்து நிலவுகிறது. எனவே, வரி வருவாயை அதிகரிக்க வராத வரியினங்களை கண்டறிந்து அவற்றை உரிய முறையில் வசூலிக்க திமுக அரசு முயற்சிக்க வேண்டும்.
மின்சாரம் மற்றும் போக்குவரத்துறையில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் ஒட்டுமொத்த கடன்கள் மட்டும் ரூ.1.99 லட்சம் கோடி. இதில் தினசரி இழப்பு ரூ.55 கோடி. மின் திருட்டு மற்றும் இழப்பின் மூலம் விரையமாகும் மின்சாரத்தை காப்பதன் மூலமும், அனைத்து பெருநகரங்கள், நகரங்கள், கிராமங்கள் வரை பூமிக்கடியில் கம்பி வடம் அமைப்பதன் மூலமும் மின்திருட்டை குறைக்கலாம், அத்துடன் தனியாரிடம் அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்ததன் மூலம் ஏற்படும் சுமையைத் தவிர்க்க, அரசின் மின் உற்பத்தி நிலையங்களின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் அதை சரி கட்டிட நடவடிக்கை எடுத்திட வேண்டும். அதானிகளை பற்றி கவலைப்பட்ட அதிமுகவால் எழுந்த இந்த இழப்பை எப்படியேனும் சரிகட்டியே மின்வெட்டு இல்லாத மின் மிகை மாநிலமாக தமிழ்நாட்டை திமுக அரசு மாற்றி அமைத்திட வேண்டும்.
31.03.2021 நிலவரப்படி குடிநீர் வழங்களுக்கான இரண்டு வாரியங்களின் ஒட்டுமொத்த கடன் ரூ.5,282 கோடி.
தமிழ்நாட்டில் போக்குவரத்துக் கழகங்களின் தினசரி இழப்பு ரூ.15 கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரூ.9 கோடியாக இருந்த அந்த இழப்பு இப்போது டீசல் விலை உயர்வு காரணமாகவும், கொரோனா பெருந்தொற்றில் பேருந்துகள் சரிவர இயக்கப்படாததாலும் அதிகரித்துள்ளது.
மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட இலவச பேருந்து பயண அட்டைதாரர்கள் சுமார் 46 லட்சம் பேர் தினசரி பயணிக்கின்றனர். இதற்கு உரிய தொகையை கடந்த அதிமுக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அளிக்காததும், சுங்கச் சாலை கட்டணங்கள் மட்டுமே ஆண்டுதோறும் ரூ.1000 கோடிக்கு மேல் போக்குவரத்துத்துறை கட்டுவதாலும் இந்த இழப்பு ஏற்படுகிறது. சுங்கக் கட்டணத்தை அரசு போக்குவரத்து கழகங்களுக்கு முற்றாக நீக்கிட ஒன்றிய அரசை வலியுறுத்தவும் அந்நிறுவனங்களிடம் விலக்கு கேட்டு பெற்றும் இச்சுமையினை குறைக்க வேண்டும்.
முன்பு புதிய பேருந்துகளின் கூண்டு (பாடி) கட்டுவதற்கு முன்பு நமது பணிமனைகளையே நம்பியிருந்தது. ஆனால் கடந்த காலங்களில் முழுக்க முழுக்க அவற்றை தனியாருக்கு அளித்து கமிஷன் பார்ப்பதில் மட்டும் கண்ணாயிருந்தது அதிமுக அரசு. அதிலிருந்த நிரந்த வேலை வாய்ப்புகளும் பறிபோயின.
திமுக அரசு அந்த பணிமனைகளை மீண்டும் சீர்திருத்துவதோடு எல்லா நகரங்களிலும், மாநகரங்களிலும் உள்ள அவ்விடங்களில் கேரள அரசைப் போல நவீன வணிக வளாகங்களைக் கட்டி, வாடகை வசூலிப்பதன் மூலம் ஒரு நிரந்தர வருமானத்தை பெற இயலும்.
கிராமப்புற வேலை வாய்ப்பை வளர்த்தெடுக்கும் விதத்தில் வட்டார அளவிலான சிறு குறுந் தொழில்களை அரசே ஏற்படுத்தித்தர வேண்டும். அத்தோடு விவசாயத்தை மேம்படுத்தவும் நவீன முறையில் விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றி அமைக்கவும் அதன் மூலம் பெரும் நகரங்களுக்கு வேலை தேடி நிகழும் இடப்பெயர்ச்சியை குறைக்க வேண்டும்.
ஒட்டு மொத்தத்தில் தமிழ்நாட்டின் நிதி நிலையை வெளிச்சம் போட்டு காட்டிய இவ் வெள்ளை அறிக்கை ஒன்றிய அரசின் ஓரவஞ்சனைகளையும் மாற்றான் தாய் மனப்பான்மையையும் தோலுரித்து உள்ளது.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
ஒரு செயலைச் செய்து முடிக்கும் வழியை அறிந்து தொடங்குக. தொடங்கியபின் அது பற்றி எண்ணிக் கொள்வோம் என்பது குற்றம். என்பதற்கு இணங்க திமுக அரசு தமிழகத்தின் சீரழிந்த நிதி நிலையை சீரமைத்து செம்மை படுத்த வேண்டும்.
பா.ஜ.க.வின் பாதம் தாங்கியாக மாறிவிட்ட அதிமுகவின் அடுக்கடுக்கான ஊழல்கள், ஊதாரிச் செலவினங்களால் ஏற்பட்ட இந்நிதிப் பேரிடரை நம்பிக்கையோடு எதிர்கொண்டு வெற்றிபெற்றே ஆக வேண்டும்.