சிரியாவில் ராணுவ பேருந்தில் குண்டு வெடிப்பு – 14 பேர் பலி
சிரியாவில் நின்று கொண்டிருந்த ராணுவ பேருந்தில் குண்டு வெடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தனர். லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் ஐஎஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன. ஆனால் அமெரிக்க ஆதரவு கலவரக்காரர்கள் பிடியில் உள்ள சில இடங்களில் சண்டை அவ்வப்போது நடந்து வருகிறது. இந்நிலையில் சிரியாவில் ராணுவ பேருந்தில் குண்டு வெடித்ததில் பலர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து பிரிட்டனில் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் போர் கண்காணிப்புக் குழு தரப்பில், “ சிரியாவின் டமாஸ்கஸ் பகுதியில் நின்றுக் கொண்டிருந்த ராணுவ பேருந்தில் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 14 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. சிரியாவில் இந்த ஆண்டு நடத்தப்பட்ட மிகப் பெரிய குண்டு வெடிப்பு இதுவாகும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கோழைதனமான தாக்குதல் என்று டமாஸ்கஸ் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். இத்தாக்குதலுக்கு உடனடியாக எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்காத சூழலில் விசாரணை தொடங்கப்பட இருந்தது. தற்போது ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.