
ஆட்டம் போட்டு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் தலையில், உச்ச நீதிமன்றம் ஓங்கி இன்னொரு குட்டு வைத்திருக்கிறது.
வந்ததிலிருந்து அட்டகாசம் தாங்கவில்லை. பேரறிவாளன் விடுதலையை ஏற்க முடியாது எனத் தடுத்து, நீதிமன்றத்தில் முதல் குட்டு வாங்கியது. தூத்துக்குடி ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி, மீண்டும் நீதிமன்றத்தில் அடுத்த குட்டு வாங்கியது.
நீட் எதிர்ப்பு மசோதாவுக்கு ஒப்புதல் தராவிட்டால் அது செத்துப் போனதாக அர்த்தம் என்று கூறியது!
பாரதிதாசன் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில், தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் படித்ததே இல்லை என்று குற்றம் சாட்டியது, மும்மொழி திட்டத்தை ஏற்குமாறு ஆசிரியர்களுக்குப் பரிந்துரைத்தது.
நாடு முழுக்க, தலித் பெண்கள் மீது இழைக்கப்படும் பாலியல் குற்றங்களில் சரி பாதி தமிழ்நாட்டில் நடப்பதாகவும், மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் குற்றங்கள் 40% அதிகரித்ததாகவும், சட்டம் ஒழுங்கு முழுமையாகச் சீர்குலைந்து விட்டதாகவும் பொய்த் தகவல் பரப்பியது.
சட்டப்பேரவையில் அரசு தந்த உரையில் சில சொற்களைச் சேர்த்து, சில சொற்களைத் தவிர்த்து படித்தது, தமிழ்நாட்டை தமிழகம் என்று பெயர் மாற்றியது, திராவிட மாடல் செத்துப்போன சித்தாந்தம் என்றது.
தமிழ் தாய் வாழ்த்தில் ‘திராவிட நல் திருநாடு, என்று சொல்லை நீக்கிப் பாட வைத்தது, காரல் மார்க்ஸால் இந்தியாவின் தேசிய வளர்ச்சி சேதப்பட்டு விட்டதாகப் பேசியது…
என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
அரசியல் சாசனத்தைக் காலில் போட்டு மிதிக்கும், ஆளுநர் ரவியைத் திரும்பப் பெறக்கோரி, பல்லாயிரக்கணக்கான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் 2022 டிசம்பர் 29ம்தேதி அன்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டார்கள்.
ஆளுநர் ரவி, கிடப்பில் போட்டுள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி, தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கில், ஏப்ரல் 8ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தேர்ந்தெடுத்த சொற்களில் அந்தத் தீர்ப்பு உள்ளது.
“நிறைவேற்றப்பட்ட 12 முக்கிய மசோதாக்களை 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து எந்த முடிவும் சொல்லாமல் கிடப்பில் போட்டு வைத்திருப்பது மாநில அரசின் செயல்பாட்டுக்கு ஊறு விளைவிப்பதாகும். இது தீவிர கவலைக்குரிய விஷயமாகும்.
அரசியல் சாசனத்தில் 200 வது பிரிவின்படி, தனக்கு அனுப்பப்பட்ட மசோதா மீது முடிந்த அளவு விரைவாக ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்.
அவர் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கலாம், அல்லது ஏதேனும் ஆட்சேபனை இருக்குமெனில் அது குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு கோரி பேரவைக்கே திருப்பி அனுப்பலாம், அல்லது தமிழ்நாட்டு எல்லைகளைத் தாண்டி வேறு மாநிலங்களையும் உள்ளடக்கியதாக மசோதா இருக்குமானால், அதனைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம்.
ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாவை, திருத்தங்கள் செய்தோ அல்லது செய்யாமலோ இரண்டாம் முறையாகப் பேரவை நிறைவேற்றி அனுப்பினால், அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தே தீர வேண்டும். அதை மறுப்பதற்கு அவருக்கு அரசியல் சாசனத்தின் படி அதிகாரமோ, வேறு விருப்புரிமையோ இல்லை.
எந்தத் தகவலும் சொல்லாமல், காரணமும் இல்லாமல் மசோதாவைக் கிடப்பில் போட்டு வைப்பது மாநில அரசை இயங்க விடாமல் தடுக்க முட்டுக்கட்டை போடுவதாகும்.
நாடாளுமன்ற ஜனநாயக மரபுகளுக்கு இசைவாக ஆளுநர் நடந்து கொள்ள வேண்டும். இதற்கு மாறாக முடிவெடுக்கவோ, தன்னிச்சையாக ஒப்புதல் தர மறுக்கவோ ஆளுநருக்கு ‘வீட்டோ’ அதிகாரத்தை அரசியல் சாசனம் வழங்கவில்லை.
மசோதாக்களைக் கிடப்பில் போடுவது மாநில அரசின் செயல்பாட்டுக்கு ஊறு விளைவிப்பதாகும்.
நிறைவாக “ஆளுநரின் செயல் சட்ட விரோதமானது, எதேச்சதிகாரமானது” என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது, அரசியல் சாசனப் பதவியை வகிக்க அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை என்பதை வெளிப்படையாக அறிவிக்கிறது.
வழக்கமாக, ஆளுநர் பதவிக்கு மதிப்பளிக்கும் வகையில், ஒரு வாரம் பத்து நாட்களுக்குள் ஒப்புதலை அளியுங்கள் என்று நீதிமன்றம் சொல்லும்.
ஆனால் இந்த வழக்கில், ஆளுநரிடம் நிலுவையில் உள்ள மனுக்கள் அனைத்தும் ஒப்புதல் தரப்பட்டதாகக் கருதி, அவற்றைச் சட்டமாகச் செயல்படுத்தலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இத்தகைய கண்டனங்களைப் பெற்றிருக்கும் ஆர்.என்.ரவி, ஆளுநர் பதவியில் இருந்து விலகி வெளியேற வேண்டும் அல்லது அவரை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்.
சட்டம், ஜனநாயக மரபுகளில் நம்பிக்கை உள்ளவர்களால் மட்டுமே அப்படிச் செய்ய இயலும்!