கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்

கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கிட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசின் வருவாய் துறையில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான கிராம உதவியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். வருவாய்துறையில் பணியாற்றக் கூடிய அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், இந்த கிராம உதவியாளர்கள் மட்டும் சிறப்பு காலமுறை ஊதியத்திலேயே பணியாற்றிவருகின்றனர். இதனால் அவர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மிகுந்த மன வேதனையில் உள்ளனர்.
இவர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கப்படாததால், கடந்த 23 ஆண்டுகளாக பெற்று வந்த கருணை அடிப்படையிலான வாரிசு வேலை முழுமையாக நிறுத்தப்பட்டு விட்டது. இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்படுள்ளன.
எனவே, அவர்களது கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்று, அவர்களுக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியத்தை வழங்கிட வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்வதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.