மாநில செயலாளர்

படமெடுத்து ஆடும் பாசிசம்

கட்சிக் கடிதம்

போர்க்குணமிக்க தோழர்களே!

அரசாங்கத்து கோழி முட்டை அம்மியை உடைக்கும் என்பது பழைய பழமொழி! அது பழையது அல்ல, நிஜத்தில் நம் வாழ்க்கையில் அன்றாடம் நீக்கமற நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

அதிகார பலம், மிரட்டல் பலம், பணபலம் எனப் பல பலன்களைக் கொண்ட மிருக பலத்தோடு, நாட்டு மக்களிடையே பெரும் மோதலை, பயங்கரமான போரை நிகழ்த்தி கொண்டுள்ளது ஒன்றிய மோடியாரின் அரசு.

ஜனநாயகப் போர்வையை மிக பலமாகப் போர்த்திக் கொண்டு, நாக்பூர் எஜமானர்களின் உத்தரவுகளை ஒவ்வொன்றாகப் பிசிறின்றி நிறைவேற்றி வருகின்றது மோடியாரின் அரசு.
நிறைவேற்றும் ஒவ்வொன்றும் சட்ட பூர்வமாக நிறைவேற்றி வருகிறது.

கருமேகங்கள் சூழ்ந்து வருவதைப் போன்று, நாட்டிற்கான பேராபத்து ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே வருகின்ற ஆபத்தை, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுடையோர் அனைவரும் ஆழ்ந்து பரிசீலிப்பார்கள் என்றே கருதுகின்றோம்.

தெருக்கோடியில் உள்ள ஒரு குடிசை வீடு தீப்பற்றி, பெரும் சுவாலையோடு எரிவது கண்டு, அடுத்தடுத்த வீட்டுக்காரன் மட்டுமல்ல, கடைசி வீட்டுக்காரனும் கவலைப்படவில்லை எனில், அவனது வீடும் தீக்கரையாகும் என்கின்ற எதார்த்தத்தை உணராமல், நமக்கு ஒன்றும் ஆபத்து இல்லை என்று கடைக்கோடி வீட்டுக்காரன் கருதினால், அவன் தனக்கு ஏற்பட உள்ள ஆபத்தை உணரவில்லையா? அல்லது உணர முடியவில்லையா? அல்லது உணர்ந்தும், உணராதவன் போன்று நடிக்கிறானா? எனப் பல பல கேள்விகள் எழுகின்றன.

நம் நாட்டில் வாழும் குடிமக்களில் இஸ்லாமியர்களும் உண்டு. அவர்கள் நம் மக்கள். நம் சகோதரர்கள்.

வெள்ளை ஏகாதிபத்தியத்தை நாட்டை விட்டு வெளியேற்ற அவர்களின் பங்களிப்பும் மகத்தானது.

இந்தியா, பாகிஸ்தான் என நாடு இரண்டாகப் பிளவுண்ட போது, இஸ்லாமியர்கள் அனைவரும் பாகிஸ்தானுக்கு வாருங்கள் என அழைத்த போது, அதனை நிராகரித்து, எங்களது தாய் நாட்டை விட்டு வரமாட்டோம் என உறுதிபட தாயகத்தை நேசித்தவர்கள் நம் இஸ்லாமியப் பெருமக்கள்.

அவர்களை எப்பாடு பட்டாவது நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று இன்று, நேற்றல்ல கடந்த 100 ஆண்டு காலமாக வெறித்தனத்தோடு செயல்பட்டு வருகின்ற அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ் என்ற பத்தாம் பசலிக் கொள்கையுடைய அமைப்பு.

இந்தியக் காலாச்சாரத்தைக் காக்கும் மாபெரும் அமைப்பு என்றும், மாபெரும் ஆலமரம் என்றும், உலகினில் ஆகப்பெரிய சேவை அமைப்பு என்றும், அவ்வமைப்பில் பயின்ற மாணவன் என்றும் இன்றைய பிரதமர் மோடியார் அண்மையில் வானளாவப் புகழ்ந்து, போற்றியதை அறிவோம்.

ஆர்.எஸ்.எஸ் ஓர் கலாச்சார ஆலமரமல்ல, மாறாக மரத்தில் முளைத்துள்ள, மரத்தையே அழிக்கக் கூடிய புல்லுருவியாகும்!

புல்லுருவி மரத்தில்தான் முளைக்கும். மரத்தினில் உள்ள சத்தைத்தான் உறிஞ்சி வளரும். எந்த மரத்தைக் கொண்டு வளர்ந்ததோ, அம்மரத்தையே சாகடித்து விடும். அத்தகைய புல்லுருவி போன்றதுதான் ஆர்.எஸ்.எஸ்.

நாட்டைப் பற்றி, தேசபக்தியைப் பற்றி, தியாகத்தைப் பற்றிப் போற்றிப் புகழும். ஜனநாயகம் குறித்து நாளெல்லாம் பேசும். ஆனால் உண்மை என்ன?

மரத்தின் பசுமை நிறைந்த இலைகளுக்கிடையே புல்லுருவி மறைந்திருப்பதை யாரும் எளிதில் அடையாளம் காண இயலாது! ஏனெனில் மரத்தின் இலைகள் பச்சையாக பசுமையாக இருக்கும். புல்லுருவி இலைகளும் பசுமை நிறைந்ததே.

அடையாளம் காண்பது எளிதல்ல, காணவில்லை எனில், மரத்தைப் புல்லுருவி கொன்றழிக்கும் சக்தி வாய்ந்தது.

அத்தகைய புல்லுருவிக்கும், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கும் வேறுபாடு கிடையாது.
நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் பாஜக இல்லை. கடந்த 2024 நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
கடந்த 2019 நடைபெற்ற தேர்தலில் 303 இடங்களில் வெற்றி பெற்ற பாஜகவை, மக்கள் தோற்கடித்துள்ளார்கள் என்பதனை பாஜக உணர்ந்தபாடில்லை.

மைனாரிட்டி அரசாக இருந்த போதும், கொள்கையற்ற கட்சிகளின் ஆதரவோடு, அதிகார பீடத்தில் அமர்ந்துள்ளது.

மைனாரிட்டி அரசு என்ற போதும், தனது எஜமானர் ஆர்எஸ்எஸ்சின் அடாவடித்தனமான கொள்கைகளை, மிக மூர்க்கத்தனமாக நிறைவேற்றி வருகின்றது.

அதில் ஒன்றுதான் வஃக்பு திருத்த சட்டம். இச்சட்டத்தின் மூலமாக, நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இஸ்லாமியப் பெருமக்களுக்கு எதிரான ஒரு யுத்தத்தை மேற்கொண்டுள்ளது.

அது போன்றுதான் தேசியக் கல்விக் கொள்கை என்பதையும், வலுக்கட்டாயமாகத் திணிக்க முயல்கின்றது.

தேசியக் கல்விக் கொள்கை என்பது ஆர்.எஸ்.எஸ்சின் நான்கு வர்ணக் கொள்கையின் படி, பெரும்பாலான மாணவர்களைக் கல்வியில் இருந்து வெளியேற்றும், மிக அபாயகரமான கொள்கையாகும்.

இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மாநிலங்களில், மும்மொழித் திட்டம் செயல்படுத்தப்படுகின்றதா எனில் இல்லை என்பதே பதில்.
ஒன்றிய அரசால் தமிழகத்தில் நடத்தப்படும் பள்ளிகளில், தமிழ் ஆசிரியர்கள் உண்டா எனில் இல்லை.

இவ்வாறு இருக்க, மாநில அரசு நடத்தும் பள்ளிகளில் கட்டாயமாக மூன்றாவது ஒரு மொழி, கற்க வேண்டும் என்று அடம் பிடிப்பதன் நோக்கமென்ன?

தமிழக மாணவர்கள் தலையில் மேலும் கல்விச் சுமையை அதிகரித்து, 10, 12 ம் வகுப்பு போல 3, 5, 8 ஆம் வகுப்புகளிலும் பொதுத் தேர்வு நடத்தி அதன் விளைவாக அவர்கள் கல்வி நிலையத்திலிருந்து வெளியேற வேண்டும் என்ற உள்நோக்கமின்றி, வேறு என்னவாக இருக்க முடியும்?

ஒன்றிய அரசின் உத்தரவை ஏற்கவில்லை எனில், உனக்கு நிதி கொடுக்க முடியாது என்று வீராப்பு பேசுவதுதான் ஜனநாயகமா?

மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்க மறுப்பது ஏன்?

4000 கோடி ரூபாய் கொடுக்காத காரணத்தால் பல மாதங்களாக, தமிழகத்தைச் சேர்ந்த ஏழை, எளிய மக்கள், பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள், முதியோர்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒன்றிய அரசு இரக்கமற்ற முறையில் பழி தீர்க்கும் வஞ்சகச் செயலோடு செயல்பட்டு வருவது கவலைக்கும், கண்டனத்திற்கும் உரியது.

தன் கட்சி அல்லது தன் தோழமைக் கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களை வஞ்சிப்பதும், ஆளுநர்களைக் கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப் பெற்ற அரசுக்கு எதிராகச் செயல்படுவது என்ற அப்பட்டமான ஜனநாயக விரோதச் செயலில் ஈடுபடுவது அநாகா¤கத்தின் உச்சம் என்பதனை, உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு உறுதி செய்கின்றது.

தமிழக ஆளுநரின் செயல்பாடு சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்துள்ளது. தனக்குத் தனி அதிகாரம் இருப்பதாக ஆளுநர் கருதக் கூடாது. முதலமைச்சரின் ஆலோசனை ஏற்றுச் செயல்பட வேண்டும் என்றெல்லாம் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம், ஆளுநரின் அத்துமீறிய ஜனநாயக விரோதப் போக்கைத் தோலுரித்துக் காட்டியள்ளது.

என்ன செய்யப் போகின்றார் ஆளுநர்? நீதிமன்றத் தீர்ப்பிற்கு மதிப்பளித்து குடியரசுத் தலைவர் ஆளுநரைப் பதவி நீக்கம் செய்வாரா?

மொத்தத்தில் பாசிசப் பாம்பு படமெடுத்து ஆடிக் கொண்டுள்ளது. அதனை தடி கொண்டு தான் அரசியல் ரீதியாக எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும்.

கம்யூனிஸ்டுகளின் ஒற்றுமை தேவை! இடதுசாரிகளின் ஒற்றுமை தேவை, ஜனநாயக சக்திகளின் ஒற்றுமை தேவை, முன்னைக் காட்டிலும் மிக அதிகத் தேவை!

நாடு காக்கப்பட வேண்டும். நாட்டின் சுதந்திரம் காக்கப்பட வேண்டும். அதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை.

மீண்டும் சந்திப்போம்,

வணக்கம்,

தோழமைமிக்க,
(இரா.முத்தரசன்)
மாநிலச் செயலாளர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button