ஆளுநரின் துணைவேந்தர்கள் மாநாடு அறிவிப்பு அதிகார அத்துமீறலின் உச்சம்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்

ஆளுநரின் துணைவேந்தர்கள் மாநாடு அறிவிப்பு அதிகார அத்துமீறலின் உச்ச கட்டம் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாடு ஆளுநர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி, ஆரம்ப நாளில் இருந்தே மக்களால் தேர்வு செய்து, அமைக்கப்பட்ட மாநில அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.
அரசியலமைப்பு சட்டம் ஆளுநருக்கு வழங்கியுள்ள கடமைப் பொறுப்புகளை நிறைவேற்றாமல், மக்கள் நலனுக்கு எதிராகவும், மாநில அரசுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்தும் மலிவான அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் மாண்புக்கும், மரபுக்கும் தீராக்களங்கம் ஏற்படுத்தும் தரம் தாழ்ந்து செயல்பட்டு வருகிறார்.
தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் எதிர்த்து வரும் தேசியக் கல்விக் கொள்கையை ஆளுநர் மாளிகை வழியாக செயல்படுத்த முயன்று வருகிறார்.
அரசியலமைப்பு சட்டரீதியாக இணை வேந்தர் பொறுப்பில் உள்ள மாநில அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் பங்கேற்காத துணை வேந்தர்கள் கூட்டத்தை நடத்தி, மாநில அரசின் கொள்கைகளுக்கு எதிரான தாக்குதல் தளமாக பல்கலைக் கழகங்களை ஆயத்தப்படுத்தி வருகின்றார்.
இந்த நிலையில் ஆளுநரின் அதிகார அத்துமீறல்களை பட்டியலிட்டு, அரசியலமைப்பு அதிகாரம் பெற்ற பொறுப்புக்கு ஆர்.என்.ரவி தகுதியற்றவர் (Unfit) என்பதற்கான ஆதாரங்கள் மற்றும் தரவுகளுடன் விரிவான புகார் மனு குடியரசுத் தலைவரின் கவனத்துக்கு நேரில் சமர்பித்து, அதன் மீது நடவடிக்கை கோரப்பட்டது.
குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து எந்த விதமான தகவலும் கிடைக்கப் பெறாத நிலையில் மாநில அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. தமிழ்நாடு அரசின் முறையீடுகளை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு கடந்த 08.04.2025 ஆம் நாள் விரிவான தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி, ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட சட்டத் திருத்த மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவு எடுக்காமல் இருந்தது சட்டவிரோதமானது என திட்டவட்டமாக கூறியுள்ளது. அரசியலமைப்பு சட்டம் பிரிவு 142 வழங்கியுள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 200ன்படி ஆளுநர், அரசியலமைப்பு சட்டப்படி, ஆற்ற வேண்டிய கடமைப் பொறுப்புகளை நினைவூட்டி, அதற்கான கால எல்லைகளையும் வரையறுத்து சுட்டிக் காட்டியுள்ளது.
ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட சட்டத்திருத்த மசோதாக்கள் அனைத்தும், அனுப்பி வைக்கப்பட்ட தேதியில் ஒப்புதல் பெறப்பட்டதாகும். அவை அனைத்தும் உடனடியாக நடைமுறைக்கு வருகின்றன என்று அறிவித்துள்ளது.
உச்சநீதிமன்றம் வழியாக ஒப்புதல் பெறப்பட்ட சட்டத்திருத்த மசோதாக்களில், பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை நீக்கிவிட்டு, அந்தப் பொறுப்பில் மாநில முதலமைச்சரை நியமிக்க வழிவகை செய்யும் சட்டத்திருத்த மசோதாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முறையில், பல்கலைக் கழகங்களின் வேந்தர் பொறுப்பில் நியமிக்கப்பட்ட முதலமைச்சர், கடந்த 16.04.2025 ஆம் தேதி பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் கூட்டத்தை நடத்தி, அரசின் கொள்கைகளை செயல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த சூழலில் நாட்டின் குடியரசுத் துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும், நடவடிக்கைகளையும் கடுமையாக விமர்சித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
இப்போது, சட்டப்படி வேந்தர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட ஆளுநர், ஏப்ரல் 25, 26, 27 தேதிகளில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மூன்று நாள் மாநாடு, நீலகிரி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் எனவும், இந்த மாநாட்டில் குடியரசுத் துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்பார் என்று அறிவித்திருப்பதும் ஒரு அசாதாரண நிலையை, நெருக்கடியை உருவாக்கும் திட்டமாகத் தெரிகிறது.
ஆளுநரின் அதிகார அத்துமீறல்களை தடுக்க வேண்டிய குடியரசுத் துணைத்தலைவர், அவருடன் இணைந்து செயலாற்றுவது அரசியலமைப்பு சட்ட நெருக்கடியை உருவாக்கும் அரசியல் சதியா? என ஆழ்ந்த சந்தேகம் எழுகிறது.
தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் கால் ஊன்ற வேண்டும் என்ற நாக்பூர் குருபீடத்தின் சேவகர்களாக செயல்படும் ஆளுநர், குடியரசுத் துணைத்தலைவர் ஆகியோர் பங்கேற்கும் துணைவேந்தர்கள் மாநாட்டை பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் புறக்கணிக்க வேண்டும். ஆர்.என்.ரவியின் தொடரும் அதிகார அத்துமீறல்களை தடுத்து நிறுத்த, ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரண்டு நேரடி நடவடிக்கையில் ஈடுபட முன்வர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது என்று கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.