
விஜய் மக்கள் இயக்கத்தின் உட்கட்டமைப்பு பணிகள் பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த நிலையில், இப்போது அது ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் இயக்கமாக மாறியுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், யாருக்கும் ஆதரவுமில்லை என்றும் விஜய் அறிவித்தார். 2026ஆம் ஆண்டு தேர்தலுக்கு இன்னும் அதிக அவகாசம் இருக்கும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பெரும் குழப்பமாக இருக்கிறது.
பொதுக்குழுவில் பொய் தகவல்கள்
தற்போது நடைபெற்ற தவெக பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “வேங்கைவயலுக்கு விசிக தலைவர் திருமாவளவன் செல்லவில்லை” என்று பேசினார்.
ஆனால் கடந்த 2023 பிப்ரவரி 4ஆம் தேதி திருமாவளவன் வேங்கைவயல் சென்றார். அங்கு மக்களுடன் உரையாடி, மருத்துவ முகாமையும் தொடங்கி வைத்தார். அப்போது, ஆதவ் அர்ஜுனா விசிக உறுப்பினராக இல்லை. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல தலைவர்கள் அங்கே நேரில் சென்று போராட்டமே நடத்தினர். ஆனால் அவற்றை அறியாமல் இப்படிப் பேசி உள்ளார்.
கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனியாக நின்று ஜெயித்துக்காட்டினார் ஜெயலலிதா என்றும் பேசினார். ஆனால் உண்மையில் ஆறு கட்சி கூட்டணியோடுதான் போட்டியிட்டார்.
நடிகர் விஜய் பேசிய உரையில், ‘Men may come Men may go’ என்ற கவிதையோடு உரையை முடித்த விஜய், இக்கவிதையை வில்லியம் பிளேக் (Willimam Blake) எழுதியதாகக் குறிப்பிட்டார்.
ஆனால் அந்தக் கவிதையை எழுதியது டென்னிசன் (Alfred Lord Tennyson) ஆவார். மேலும், தவெக பொதுக்குழு தீர்மானங்களில், வேளாண் சட்டங்கள் மூலம் ஒன்றிய அரசு, மாநில உரிமையைப் பறிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தச் சட்டங்கள் விவசாயிகளின் வீரம் தெரிந்த போராட்டங்களால் திரும்பப் பெறப்பட்டு 4 வருடங்கள் கடந்து விட்டன என்பதையும் அறியாமல் உள்ளார் என்பது வெளிப்பட்டுள்ளதுடன் எழுதிக் கொடுப்பதை அப்படியே பேசியதும் இன்று வெளிப்பட்டுள்ளது.
பட வெளியீடுகளும் சிக்கல்களும்
ஏ.எல்.விஜய்யின் இயக்கத்தில் 2013ஆம் ஆண்டில் விஜய், சத்யராஜ் நடித்து உருவான படம் ‘தலைவா’. இந்தப் படத்தின் டைட்டிலுக்கு கீழே, “வழிநடத்திச் செல்வதற்கான நேரம்“ என்பதைக் குறிக்கும் வகையில், Time to Lead என்ற வரிகள் எழுதப்பட்டிருந்தன. அப்போதைய ஆளும் கட்சி அண்ணா திமுக, ஏ.எல். விஜய்யின் இயக்கத்தை விரும்பவில்லை எனக் கூறப்பட்டது.
ஆகஸ்ட் 9ஆம் தேதி படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தப் படம் வெளியிடும் திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகக் கூறி தமிழ்நாட்டில் படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டது. இதற்குப் பிறகு முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்திக்க படக் குழுவினர் அனுமதி கேட்டிருந்த நிலையில், அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு ஒரு வழியாக, ஆகஸ்ட் 20ஆம் தேதியே படம் வெளியானது. விஜய்க்கு அரசியலுக்கு வரும் ஆசை இருப்பதாலேயே இத்தனை தடைகள் உருவானதாகவும், அவர் இத்தனை பிரச்னைகளைத் தாண்டி அரசியலுக்கு வருவாரா என்ற விவாதமும் அப்போது எழுந்தது. பின்பு அதிமுகவுக்கு ஆதரவும் அளித்தார் என்பது செய்தி.
கத்தி திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்ததை முன்னிறுத்திப் பிரச்னைகள் கிளம்பின. இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என்று சில அமைப்புகள் போர்க்கொடி எழுப்பின. இதையெல்லாம் தாண்டி கத்தி படம் வெளியானபோது, படத்தில் இடம்பெற்ற `காற்றை வைத்து ஊழல் செய்கின்ற நாடு இது’ என்ற வசனம் அரசியல் ரீதியான அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
புலி படம் வெளியிடுவதற்கு முந்தைய நாள் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதனால், பட வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டது. புலி படத்தின் முதல் காட்சி ரத்து செய்யப்பட்டது. பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பகல் காட்சி திரையிடப்பட்டது. ஆனாலும், புலி திரைப்படம் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாமல் தோல்வியடைந்தது.
இதற்குப் பிறகு, 2017இல் வெளியான மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஆகியவற்றை விமர்சித்துக் காட்சிகள் இடம்பெற்றன. அதற்கு அப்போதைய பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் எதிர்ப்புத் தெரிவித்தார். எச்.ராஜாவும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். படம் வெளியிடுவதற்குக் குறிக்கப்பட்ட தினத்திற்கு முதல் நாள் வரை சென்சார் சான்றிதழ் கிடைக்காமல் இருந்து, பிறகு ஒரு வழியாகப் படம் வெளியானது.
பாஜகவினர் தொடர்ந்து மெர்சல் படத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இடதுசாரி தலைவர்கள் உட்பட பல அரசியல் தலைவர்களும் ஆதரவுக் குரல் எழுப்பினர். சில தினங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தப் பிரச்னை ஒருவழியாய் முடிவுக்கு வந்தது, எல்லோருக்கும் நன்றி தெரிவித்தார் விஜய்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி 2018இல் வெளியான சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், “இந்தப் படத்தில் நான் முதலமைச்சர் வேடத்தில் நடிக்கவில்லை. நிஜத்தில் நான் முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன். தலைவன் நல்லவனாக இருந்தால் எல்லாமே நல்லதாக மாறும். நெருக்கடியான நேரத்தில் ஒரு நல்ல தலைவன் வருவார். அவர் நல்ல சர்கார் அமைப்பார் என்று குறிப்பிட்டார்.
அவரது இந்தப் பேச்சுதான் விஜய் அரசியல் குறித்து நேரடியாகப் பேசிய முதல் பேச்சாக அமைந்தது. சர்கார் படத்தில் அரசு தரும் இலவசங்கள் குறித்து அவர் விமர்சித்திருந்ததும் பேசுபொருள் ஆனது.
இதற்கு அடுத்து வந்த பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், ‘‘எவனை எங்கே உட்கார வைக்க வேண்டுமோ, அவனை அங்கே கரெக்டா உட்கார வைத்தீர்கள் எனில், இந்த கோல்டு மெடல் தானாக வந்து சேரும்,’’ என்றார். அவருடைய இந்தப் பேச்சுக்கு அ.தி.மு.கவினரும் பா.ஜ.கவினரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.
மக்கள் இயக்கமான ரசிகர் மன்றம்
தனது ரசிகர் மன்ற இயக்கத்தை 2009ஆம் ஆண்டு மக்கள் இயக்கமாக மாற்றினார் விஜய். காவலன் திரைப்பட பிரச்னைக்குப் பிறகான காலகட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் பணிகளில் தீவிரம் காட்டத் தொடங்கினார். அந்த வகையில், அடிக்கடி இயக்க நிர்வாகிகளைச் சந்தித்தார். அவர்தம் குடும்பத்தினரையும் வரவழைத்து அன்பைப் பகிர்ந்தார். இது அவர்களின் உற்சாகத்தை இன்னும் கூட்ட மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது.
அதனால்தான், 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு விஜய் ஆதரவு கொடுத்ததும், வெற்றிக்குப் பிறகு ‘இந்த வெற்றியில் ஒரு அணிலைப் போல் உதவினோம்‘ என்று சொன்ன சம்பவங்களும் நடந்தேறின. அப்படிப்பட்டவர் தான் இன்றைக்கு ஊழல் எதிர்ப்பில் உச்சாணிக்கொம்பில் இருப்பதாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
தனது மக்கள் இயக்கப் பணிகளை முன்னெடுத்த விஜய், அதன் உட்கட்டமைப்பையும் கிட்டத்தட்ட ஓர் அரசியல் கட்சிக்கு நிகராக மகளிரணி, மாணவரணி தொடங்கி கிளைக் கழகங்கள் வரை திட்டமிட்டு வடிவமைத்தார் எனத் தகவல்கள் கூறுகின்றன.
விஜய் மக்கள் இயக்கம் சார்பில், கடந்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதிவாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ் மற்றும் ஊக்கப் பரிசு வழங்கும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. அவரது அரசியல் பிரவேசத்திற்கு வலுசேர்த்தது.
அப்போது மாணவர்களிடையே பேசிய விஜய், “நீங்கள்தான் நாளைய வாக்காளர்கள். அடுத்தடுத்து புதிய நல்ல நல்ல தலைவர்களை நீங்கள்தான் தேர்ந்தெடுக்க உள்ளீர்கள். பணம் வாங்கிவிட்டு வாக்களிப்பது என்பது, நமது கண்களை நாமே குத்திக் கொள்வது போன்றுதான். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாணவரும் தங்களது பெற்றோரிடத்தில், இனி பணம் வாங்கிக்கொண்டு வாக்கு அளிக்காதீர்கள் எனக் கூறிப் பாருங்கள். நீங்கள் சொன்னால் அது நிச்சயமாக நடைபெறும்,” என்று பேசியிருந்தார்.
பிற கட்சி பொறுப்புகளில் இருந்து விலக வலியுறுத்தல்
அதற்கு முன்பாக, அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் தேதி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று விஜய் தரப்பில் அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும், விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
விஜய் மக்கள் இயக்கத்தினர் பிற கட்சிகளில் பொறுப்புகளில் இருந்தால் ராஜினாமா செய்ய அறிவுறுத்தப்பட்டது.
இன்று கட்சியாகத் தொடங்கப்பட்டு இரண்டாம் ஆண்டில் காலடி எடுத்து வைத்தாயிற்று. ஆனால் அதன் கொள்கைகள் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. பாசிசத்திற்கும் பாயாசத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் திரைப்பட பாணி வசனங்களிலும் பஞ்ச் டயலாக்குகளிலும் அரசியல் நடத்தி விடலாம் என்று நினைக்கின்றார் விஜய். புலியைப் பார்த்து பூனை சூடு போட்ட கதையாகக் காலம் சென்ற எம்ஜிஆர் செல்வி ஜெயலலிதா போன்றவர்களைப் பின்பற்றி அரசியலில் தானும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து விட முடியும் என்று நினைக்கிறார். ஆனால், தமிழ்நாட்டில் மிகப்பெரும் நடிகர்கள் தனிக் கட்சியை துவக்கியும் அதற்கான வாய்ப்பு பெற முடியவில்லை என்பதே உண்மை.
கொள்கைவாதிகளுக்கும் குழப்பவாதிகளுக்கும் இடையிலான வேறுபாட்டை நன்கு உணர்ந்தவர்கள் தமிழ்நாட்டு மக்கள்!