அஜாய் குமார் கோஷ் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஐந்தாவது பொதுச் செயலாளர் (1951- 62)
டி.எம்.மூர்த்தி

1948இல் கட்சி எடுத்த நிலைப்பாட்டின் காரணமாக காங்கிரஸ் அரசாங்கம் பெரும் அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டது. நான்காவது பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பி.டி.ரணதிவே, பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, நடக்க இருக்கிற அடுத்த கட்சி காங்கிரஸ் வரை சி.ராஜேஸ்வரராவ் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு 1950-51 ஆண்டுகளில் குறுகிய காலம் செயல்படுகிறார்.
1951ல் அஜய் குமார் கோஷ் கட்சியின் ஆறாவது பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுகிறார்.
அஜய் குமார் கோஷ், 1909 பிப்ரவரி 20ஆம் தேதி உத்திரபிரதேசத்தின் மிகிஜம் என்ற கிராமத்தில் பிறந்தவர். அந்த ஊர் ‘அஜாய்’ எனும் நதிக்கரையில் உள்ளது. அதுவே அவர் பெயரானது.
அவரது தந்தை, சச்சீந்திரநாத் கோஷ் ஒரு டாக்டர். அஜய் கோஷ் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் வேதியல் பாடத்தில் முதுநிலை பட்டம் பெறுகிறார்.
ஆனால் அவரது 14 வயதிலேயே, பகத்சிங்கின் நெருங்கிய நண்பர் ஆகிறார். அவரது இந்துஸ்தான் சோசியலிஸ்ட் குடியரசு சங்கத்தில் அங்கம் வகிக்கிறார். நாட்டின் விடுதலைக்கும் சோசியலிசத்துக்கும் ஆயுதம் ஏந்திய போராட்டமே சரியான வழி என்பது அதன் திண்மையான முடிவு.
பிரிட்டிஷ் இந்தியா நாடாளுமன்றத்தில், தொழிலாளர்களை ஒடுக்குவதற்கான தொழிற் தகராறு மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட அன்று, பகத்சிங்கும், பட்டுகேஸ்வர தத்தும் பேராபத்தை விளைவிக்காத வெடிகுண்டை எறிகிறார்கள். லாகூர் சதி வழக்கில் 1929ல் பகத்சிங்கும் அஜாய் கோஷ் உள்ளிட்ட அவரது தோழர்களும் கைது செய்யப்படுகிறார்கள்.
ஐந்து ஆண்டுகள் சிறைவாசத்தில் நூல்களை வாசித்து, கம்யூனிசத்தின் மீது அஜாய்க்கு பற்று ஏற்படுகிறது. சந்திரசேகர ஆசாத் முன்னதாகவே சுட்டுக் கொல்லப்பட்டு விடுகிறார். வழக்கின் இறுதியில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவுக்கு தூக்கு தண்டனை, மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனை உள்ளிட்ட இதர தண்டனைகளும் வழங்கப்பட்ட போது, குறைந்த வயது காரணமாகவும், தக்க சாட்சியம் இல்லாததாலும் அஜாய் விடுதலை செய்யப்படுகிறார்.
வெளியே வந்ததும் பிரபலமான கம்யூனிஸ்ட் தலைவர் எஸ்.ஜி.சர்வதேசாயுடன் சேர்ந்து கான்பூரில் தொழிற்சங்க பணிகளில் ஈடுபடுகிறார். மார்க்சிய லெனினியத்தை ஏற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகிறார்.
அவருக்கு முதலில் கான்பூர் மாவட்டத்திலும், பின்னர் உத்தரபிரதேச (அன்றைய ஐக்கிய மாகாணம்) மாநிலத்திலும் கட்சிப் பொறுப்புகள் வழங்கப்படுகின்றன. பிரபல கம்யூனிஸ்ட் தலைவர் டாக்டர் ஜி அதிகாரி சிறையில் இருந்து வெற்றிகரமாக தப்பிக்க, தக்கவற்றை செய்கிறார். 1936 இல் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினராக தேர்வு செய்யப்படுகிறார்.
1940 இல் கைது செய்யப்பட்டு கொடுமைக்கு பெயர்பெற்ற தியோலி சிறையில் அடைக்கப்படுகிறார்.
குத்துச்சண்டை, பளு தூக்குதல் பயிற்சிகளால் உறுதியான உடல் பெற்ற அஜாய், சிறைவாசத்தால் எலும்புருக்கி நோய்க்கு ஆட்படுகிறார். காஷ்மீருக்கும், பஞ்சாப்புக்கும் அனுப்பப்பட்டு அங்கு கட்சியை கட்டுகிறார்.
1947-இல் லிட்டோ ராயை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். சில மாதங்களிலேயே, கைதாகி சிறை செல்கிறார். இன்னல் மிக்க வாழ்க்கையில் இருவரும் ஒருவருக்கு துணையாய் மற்றவர் இருக்கிறார்கள்.
கட்சி எடுத்த நாட்டின் அகநிலை, புறநிலை எதார்த்தத்தைப் பின்தள்ளி ஆயுதமேந்திய போராட்டம் எனும் சாகசவாத ‘ரணதிவே பாதை’ சரியல்ல என்று விமர்சித்து டாங்கே, காட்டே ஆகியோரோடு சேர்ந்து அவர் எழுதிய கடிதம் (three Ps document) புகழ்பெற்றது.
அவர் பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்தது ஒரு மிகக் கடினமான காலம். கிட்டத்தட்ட நொறுங்கிப் போன நிலையிலிருந்து மீண்டு, நாட்டில் இரண்டாவது பெரிய அரசியல் கட்சியாகவும், செல்வாக்கு மிக்க அரசியல் சக்தியாகவும் மாறுவதற்கு அவரது வழி நடத்தல் முக்கிய காரணியாகும். அவர் ஒரு ஆய்வாளர், கோட்பாட்டாளர், களப்பணியாளர், மிகுந்த பொறுமைசாலி என்பதால் இது சாத்தியமானது. 1954இல் அவர் முதல் இதய தாக்குதலுக்கு ஆளாகிறார்.
உலக கம்யூனிஸ்ட் இயக்கத்திலும் அவர் பெரும் தலைவராக மதிக்கப்பட்டார். உலக இயக்கத்தில் அப்போதுதான் சீன வழி தலை எடுக்கிறது. அது இந்தியாவிலும் கட்சிக்குள் பெரும் விவாதத்தை துவக்குகிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சி, உலக கம்யூனிச இயக்கத்தோடு முரண்பாடாக செல்லாமல் இருக்க, அக்கட்சியை ஆற்றுப்படுத்த முனைந்தார்.
அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, “இந்திய அரசு மற்றும் இந்திய சூழலைப் பற்றி சீன கம்யூனிஸ்ட் தலைமையின் மதிப்பீடு தவறானது. எது எப்படி இருந்தாலும் இந்தியச் சூழலை மதிப்பிட வேண்டியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பணியே தவிர, வேறு எந்த கட்சியின் வேலையும் அல்ல, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட” என்று பேசினார்.
சீனப் பாதை தவறு என்று அஜாய் விமர்சித்ததால், கட்சியின் ஒரு பகுதியினரின் கொடூரமான தனிநபர் தாக்குதலுக்கு ஆட்பட்டார். ஒரு வில்லன் போல சித்தரிக்கப்பட்டார். ஆனாலும் கட்சிக்குள் ஒற்றுமையை கட்டுவதற்கு தன்னாலான அனைத்தையும் செய்தார். மதுரையில் 1953 ஆம் ஆண்டிலும், பாலக்காட்டில் 1956ம் ஆண்டிலும், அமிர்தசரஸில் 1958 ஆம் ஆண்டிலும், 1961இல் விஜயவாடாவிலும் நடந்த மூன்று, நான்கு, ஐந்து. ஆறு கட்சிப்பேராயங்களில் அவர் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.
கட்சியில் விவாதிக்கப்பட்ட ஆவணங்களில், தேசிய சுதந்திரத்தை வென்றதை அங்கீகரிப்பது, இந்திய அரசின் முதலாளித்துவ தன்மை, முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையின் முரண்பாடுகள், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் முற்போக்கான தன்மை, மதச்சார்பற்ற ஜனநாயக அமைப்பின் சாத்தியக்கூறுகள், ஆளும் காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் மற்றும் அதன் பின்னால் உள்ள பரந்த மக்கள் உட்பட அனைத்து தேசிய-ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையின் தேவை மற்றும் சாத்தியக்கூறு, இந்தியப் புரட்சியின் தேசிய-ஜனநாயக மற்றும் முதலாளித்துவமற்ற பாதையை முன்னெடுத்தல் உள்ளிட்டவை அனைத்தும், அவர் முன்வைத்த வரைவுகளில் இருந்து உருவாக்கப்பட்டவை.
அதே நேரத்தில், திருத்தல்வாதத்திற்கும் வலதுசாரி சீர்திருத்தவாதத்திற்கும் அஜாய் இடம் கொடுக்கவில்லை. அவர் மார்க்சிய-லெனினிசத்தின் அடிப்படைகளை உறுதியாகப் பாதுகாத்தார், புரட்சிகர முன்னோக்கை முன்வைத்தார், தொழிலாள வர்க்கத்தின் சிறப்புப் பணியையும் கட்சியின் தனித்தன்மையான பங்களிப்பையும் வலியுறுத்தினார், ஐக்கிய முன்னணியின் பெயரில் முதலாளித்துவத்திற்குப் பின்னால் சாய்வதை எதிர்த்தார்.
1957ல் கேரளாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசை, அன்றைய காங்கிரஸ் தலைவர் இந்திரா காந்தியும், பிரதமர் நேருவும் 1959ல் கவிழ்ப்பதற்கு முயன்றதற்கு எதிராக, முதல் கம்யூனிஸ்ட் தலைமையிலான அமைச்சரவையைப் பாதுகாக்க கட்சியின் மகத்தான அரசியல் பிரச்சாரத்தை அஜாய் வழிநடத்தினார்.
நமது நாட்டின் ஜனநாயக அமைப்பு மற்றும் அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகள் ஆபத்தில் உள்ளன என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.
1961ல் விஜயவாடாவில் நடைபெற்ற ஆறாவது கட்சி பேராயத்தில் வைத்த அரசியல் மற்றும் அமைப்பு நிலை வரைவு தீர்மானங்களளை நிறைவேற்ற முடியாத அளவுக்கு கருத்து வேற்றுமை ஏற்பட்டது. நிறைவாக பொதுச் செயலாளர் அஜாய் கோஷ் ஆற்றிய தொகுப்புரையையே மாநாட்டில் ஆவணமாக ஏற்பது என்று தீர்மானிக்கப்பட்டது, அஜாய் கோஷின் செல்வாக்குமிக்க பங்கை அடிக்கோடிட்டுக் காட்டியது.
இந்தியா விடுதலை அடைந்த போதும், போர்ச்சுகல் ஆதிக்கத்தில் கோவா இருந்தது. நாடெங்கும் மதச்சார்பற்ற. முற்போக்கு, ஜனநாயக சக்திகளை அணிதிரட்டி கம்யூனிஸ்ட் கட்சி கோவா விடுதலைக்காக போராடியது. அதில் அஜாய் கோஷுக்கு முக்கிய பங்கு இருந்தது. இந்த விடுதலைப் போராட்டத்தை போர்ச்சுகல் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்தது. டிசம்பர் 18, 1961ல் கோவா விடுவிக்கப்பட்டது.
உடல் நலிவு காரணமாக மாஸ்கோவுக்கு சென்று இதே சிகிச்சை மேற்கொள்வதற்காக விடுப்பு கோரி கட்சியிடம் 1962ல் விண்ணப்பித்தார் அஜாய். ஆனால் இந்த நேரத்தில் சோவியத் யூனியன் செல்வது நல்லதல்ல என்று மறுக்கப்பட்டது.
1962ல் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை வழிநடத்தியதுதான், அவர் தலைமை தாங்கிய கடைசி அரசியல் நடவடிக்கை.
அந்தப் பரப்புரை இயக்கத்தின் ஊடாகவே, 1962 ஜனவரி 13ஆம் தேதி கடுமையான இதய தாக்குதலின் காரணமாக, செயல்பாட்டை அவரது உடல் நிறுத்திவிட்டது.
தன்னல மறுப்பு உச்சத்தில் நின்ற இவரைப் போன்றவர்கள் தான், மற்றவர்களாலும், கட்சியினராலும், லட்சக்கணக்கான மக்களாலும், அழியாத வரலாற்றாலும் நினைவுகூரப்படுகிறார்கள்.
புதுடெல்லியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகம் அவரது பெயரில் ‘அஜாய் பவன்’ ஓங்கி உயர்ந்து நிற்கிறது.