
சாதி சனாதன, வருணாசிரம எதிர்ப்பே தமிழரின் தனி நிலை.
‘‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின்…” என்றார் திருமூலர்.
‘‘சாத்திரம் பலபேசும் சழக்கர் காள்!
கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்”என வினா தொடுக்கிறார் அப்பர்.
‘‘சாதி குலம் பிறப்பென்னும் சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதமிலி நாயேனை…” என்கிறார் மாணிக்கவாசகர்.
சாதிசம யங்களிலே வீதிபல வகுத்த
சாத்திரக்குப் பைகள்எல்லாம் பாத்திரம்அன் றெனவே
ஆதியில்என் உளத்திருந்தே அறிவித்த படியே
அன்பால்இன் றுண்மைநிலை அறிவிக்க அறிந்தேன்
என்கிறார் வள்ளலார்.
‘‘சாதிகள் இல்லையடி பாப்பா – குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்..” என்கிறான் பாட்டுக்கு ஒரு புலவன் பாரதி.
கேரளாவில் அன்று இருந்த சாதி வெறியை பார்த்த சுவாமி விவேகானந்தர் இது பைத்தியக்காரர்களின் நாடு என்று குறிப்பிட்டார். இன்று எத்தனையோ மாற்றங்கள் வந்தாலும் அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் ஏற்பட்டாலும் சாதி வெறி அவ்வப்போது தலை தூக்கத் தான் செய்கிறது தமிழ்நாடு அதற்கு விதிவிலக்கு அல்ல என்பதைத்தான் சமீபகால நிகழ்ச்சிகள் தெரிவிக்கின்றன
தமிழ்நாட்டில் தலித்துகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை கடந்த 2020ல் 1274 குற்றங்கள், 2021ல் 1377 குற்றங்கள், 2022ல் 1761 குற்றங்கள் என 2022 ஆம் ஆண்டுவரை வழக்குகள் பதிவானது, 2023 ஆம் ஆண்டு 2000 வழக்குகள் என்று பதிவாகியுள்ளது. 2022 ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 57,582 குற்றச்சாட்டுகள் உள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை கூறுகிறது. இது பாஜக ஆளும் வட மாநிலங்களைக் காட்டிலும் குறைவானது தான் என்றாலும் சமூக நீதி சமத்துவம் பேணும் தமிழ்நாட்டில் இப்படி நடைபெறுவது ஏற்புடையதல்ல.
தஞ்சை
தஞ்சை மருத்துவக் கல்லூரியில் மருத்துவ பட்டப்படிப்பு படித்து வந்த பண்ருட்டி பாபுகுளம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார், மருத்துவ கல்லூரி டீன் மற்றும் பேராசிரியர்கள், விடுதிக்காப்பாளர்கள் போன்றவர்களின் ஆதிக்க சாதி வெறியாட்டங்களால் மனம் உடைந்து தற்கொலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அது பற்றிய வழக்கு பதிவு செய்து பல மாத காலமாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
வேங்கைவயல்
2022ம் ஆண்டு டிசம்பரில், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியில் கயவர்கள் மலம் கலந்தார்கள். குற்றவாளிகள் ஆதிக்க சாதி சக்திகள்தான் எனத் தெரிந்த போதும், பாஜகவின் ஐடி விங் தலித்துகள் தான் குடிநீர் தொட்டியில் மலம் கலந்தார்கள் என்று பொய்ச்செய்தி பரப்பியது. காவல்துறையும் தலித்துகளையே குற்றவாளிகள் ஆக்க முயன்றது அனைவரும் அறிந்ததே. சிறப்பு புலனாய்வு, உயர்நீதிமன்ற புலனாய்வு எல்லாம் நடந்தும் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
மதுரை காயாம்பட்டி
கடந்த 15.1.2023ல் மதுரை, ஒத்தக்கடை அருகில் உள்ள காயாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின இளைஞரான கண்ணனும் அவரது மனைவியும் பொங்கல் அன்று பக்கத்து ஊரில் இருந்த உறவினர்களைப் பார்க்க இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அவர்களை வழிமறித்த அதே ஊரைச் சேர்ந்த ஆதிக்க சாதி இளைஞர்கள், இரு சக்கர வாகனத்தை வேகமாக ஓட்டுகிறாய்? எனக் கேட்டு தாக்கியுள்ளனர். கண்ணன் அணிந்திருந்த ஆடைகளையும் அவிழ்த்துள்ளனர்; அவரது மனைவியின் சேலையைப் பிடித்து இழுத்துள்ளனர்.
நாங்குநேரி
தான் படிக்கும் பள்ளியில் தனக்கு இழைக்கப்படும் சாதியாதிக்கக் கொடுமை குறித்து புகார் அளித்ததற்காக நாங்குநேரியைச் சேர்ந்த தலித் – சமூகத்தைச் சேர்ந்த சின்னதுரை வீட்டிற்குள் புகுந்து ஆதிக்க சாதியைச் சேர்ந்த சக மாணவர்களால் கொலை வெறியுடன் வெட்டப்பட்டார். தடுக்க வந்த அவரது தங்கை சந்திரா செல்வியையும் வெட்டினார்கள். பள்ளிகளிலேயே சாதியாதிக்க நச்சு விதைக்கப்படுகிறது என்பதற்கு இது சான்று.. தென்மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி பள்ளிகளில் சாதி அடையாள வண்ணக் கயிறுகளும், ரிப்பன்களும் மிகவும் பிரபலமாக உள்ளது.
தச்சநல்லூர்
திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதி தச்சநல்லூரை அடுத்த மணிமூர்த்தீஸ்வரம் அருகே 31.10.23ல், பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் மனோஜ்குமார், மாரியப்பன் ஆகியோரை இடைநிலை ஆதிக்க சாதி வெறியர்கள் சாதியைச் சொல்லித் திட்டி, அசிங்கமாகப் பேசி கொடூரமாகத் தாக்கியது மட்டுமல்லாமல், அவர்களை நிர்வாணப்படுத்தி அவர்கள் மீது சிறுநீர் கழித்து, மாலை முதல் நள்ளிரவு வரை ஆறு மணி நேரத்திற்கும் மேலாக அவர்களைச் சித்தரவதைக்கும், அவமானத்திற்கும் உள்ளாக்கியுள்ளனர். அந்த சாதி வெறியர்கள் தலித் இளைஞர்களின் செல்போன்கள், டெபிட் கார்டுகள், நகைகள் மற்றும் 5000 ரூபாய் பணத்தை இ-வாலட் மூலம் கொள்ளையடித்துள்ளனர். ஆடைகளைப் பறித்துக் கொண்டனர். அவமானப்பட்ட இளைஞர்கள் இருவரும் நிர்வாணமாக இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்தே வீடு சென்று சேர்ந்துள்ளனர்.
விழுப்புரம்
தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வி. அகரம் அரசுப் பள்ளியைச் சேர்ந்த 11 வயது தலித் சிறுவன் மார்ச் 14 அன்று அவனது பள்ளி ஆசிரியரால் மூங்கில் குச்சியால் தாக்கப்பட்டான். தாக்குதலுக்குப் பிறகு, சிறுவனின் பார்வை மங்கலாக இருப்பதாக புகார் அளித்து, புதுச்சேரியில் உள்ள ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் நரம்பு பாதிப்புக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் காவல்துறை முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்தது.
மாணவரது தலை மற்றும் வயிற்றில் இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்ட பின்னர் அவர் குணமடைந்து வருவதைக் காட்டுகிறது.
மேலும், தாக்கிய ஆசிரியர் செங்கென்னி பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் மீது பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்றும், இருப்பினும், மருத்துவர்களின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் எஃப்ஐஆர் மாற்றப்படும் என்றும் காவல்துறையின் கூறினர்.
தூத்துக்குடி மாணவன் தேவேந்திர ராஜா
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம், அரியநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு தலித் மாணவன் தேவேந்திர ராஜா ஆதிக்க சாதிவெறியர்களால் கொடூரமாக வெட்டப்பட்ட செய்தி தமிழ்நாட்டையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது.கடந்த மார்ச் 27 ஆம் தேதி தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் சார்பில் நெல்லை மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்ட மாணவனையும் அவரது பெற்றோரையும் சந்தித்தோம் பெற்றோர் இருவரும் செங்கல் சூளையில் வேலை பார்க்கும் மிகச் சாதாரண உழைப்பாளி மக்கள் ஆவர்.
கபடிப் போட்டியில் தேவேந்திர ராஜா பங்கேற்ற அணி வெற்றிபெற்றுள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் அந்த அணியில் அனைத்து சாதியினரும் இருக்கிறார்கள் என்பதுதான். கபடிப் போட்டியில் தோற்றவர்கள் அவரை தங்கள் அணிக்கு ஆட வரும்படி அழைத்ததாகவும் சொல்கின்றனர். ஆனால் அவர் மறுத்து தொடர்ந்து தான் விளையாடிய அணிக்காகவே விளையாடி வெற்றியும் பெற காரணமாக இருந்துள்ளார். எனவே ஆதிக்கச் சாதிவெறியர்கள் கடந்த 10.3.2025 வழக்கம் போல் பள்ளிக்கு பேருந்தில் சென்ற மாணவன் தேவேந்திர ராஜாவை பேருந்தை நிறுத்தி வெளியே அழைத்துச் சென்று ஒரு புதர் அருகே கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். தேவேந்திர ராஜாவுக்கு தலையில் கொடுங்காயமும் இரண்டு கைகளிலும் வெட்டுக்காயமும் ஏற்பட்டுள்ளது.சில விரல்கள் துண்டிக்கப்பட்டும் விட்டன.
நாங்குனேரி :
மாணவன் சின்னத்துரை நன்றாக படித்ததற்காகவும் சிவகங்கை மாணவன் புல்லட் ஓட்டியதற்காகவும் வெட்டப்பட்டனர். இப்போது தேவேந்திர ராஜா கபடியில் வென்றதற்காக வேட்டையாடப்பட்டுள்ளானர்.
தென்காசி :
புளியங்குடியைச் சேர்ந்த தலித் தங்கசாமி பாளையங்கோட்டை சிறையில் மர்ம மரணம், தென்காசி தலித் போலீஸ்காரர் தினேஷ், ஆதிக்க சாதியினரால் தாக்குதல், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் அருந்ததியர் சமூக மக்கள் ஆண்டாண்டு காலமாக குடியிருக்கும் இடத்திற்கு பட்டா கேட்டு போராடினார்கள் என்பதற்காக அவர்களை சாதியாதிக்க மனோபாவத்துடன் தாக்கிய காவல்துறை 5 பொய் வழக்குகள் போட்டு கைது செய்து சிறையில் அடைத்தது. தூத்துக்குடி மாவட்டம் மணக்கரையில் 13.11.2023 அன்று பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மணி என்பவர் ஆதிக்க சாதியினரால் படுகொலை செய்யப்பட்டார். அன்றாடம் தலித்துகள் மீதான தாக்குதல்கள், வன்கொடுமை செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.
படிக்கும் போது நண்பர்களாக விளங்கிய ஒரு பிற்படுத்தப்பட்ட மாணவர் தலித் காலனி பகுதிக்குச் சென்று தனது நண்பரை மச்சான் என்று அழைத்து மகிழ்கிறார் இதை கண்ட அங்குள்ள பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள் அவர்களை எப்படி நீ மச்சான் என்று கூப்பிடலாம் என தாக்கியுள்ளனர் இப்படி பொது பண்பாட்டுக்கு எதிரான ஒன்றாக சாதிய வன்மம் மாறி இருக்கிறது.
தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை மட்டுமல்ல, காலங்காலமாக பொதுப் புத்தியில் நிலவும் சாதி வெறி மனப்பான்மையை பிரதிபலிக்கும்,அப்பட்டமான தலித் விரோத,வெறுப்பு அரசியலின் விளைபொருளாகும்.
கல்வியில் மற்றும் உயர்கல்வியில் முன்னேறிய மாநிலமாக உள்ள தமிழ்நாட்டில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ஒரு அரசியல் கலாச்சாரமாக மாறியுள்ளது.
இதற்கு முடிவு கட்டுவதே தந்தை பெரியார்,சிந்தனை சிற்பி சிங்காரவேலர், அறிவாசான் அம்பேத்கர் வழியில் ஒரு சமத்துவ சமூகத்தை படைக்க முனையும் முதல் படி!