அறிக்கைகள்

குடியரசுத் துணைத் தலைவரின் வரம்பு மீறிய பேச்சுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

குடியரசுத் துணைத் தலைவரின் வரம்பு மீறிய பேச்சுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்கள் மீது அரசியலமைப்புச் சட்டத்தின் படி, முடிவு எடுக்காமல், அவை கிடப்பில் போடப்பட்டு, மக்கள் நலன்களை அவர் புறக்கணித்து வந்தார்.

தமிழ்நாடு ஆளுநரின் அத்துமீறிய செயல்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு, நியாயம் வழங்க கோரியது.
தமிழ்நாடு அரசின் மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு ஆளுநர், சட்டப் பேரவை நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை கால எல்லையில்லாமல் கிடப்பில் போட்டது சட்ட விரோதம் என மிகத் தெளிவாக கூறியுள்ளது. ஆளுநர், சில மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்து விட்டு, அவரது கைகளை சானிடைசர் போட்டு துடைத்துக் கொண்டார்.

தமிழ்நாடு ஆளுநரின் அதிகார அத்துமீறல் குறித்து குடியரசுத் தலைவரிடம் நேரில் விரிவான புகார் மனு வழங்கப்பட்டது. ஆர்.என் ரவி, ஆளுநர் பொறுப்புக்கு தகுதியற்றவர் (Unfit) என்பதற்கான ஆதாரங்களும், தரவுகளும் வழங்கப்பட்டன. இதன் மீது குடியரசுத் தலைவர் போதுமான அக்கறை காட்டி, நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை குடியரசுத் துணைத் தலைவர், தனக்கு வசதியாக மறந்து விட்டார். குடியரசுத் தலைவர் அமைதி காத்து வந்ததால், தமிழ்நாடு அரசு உச்சநீதி மன்றத்தில் முறையிட வேண்டிய நிலை ஏற்பட்டது என்பதே உண்மையாகும்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றிய ஆரம்ப நிலையில் இருந்து, உச்ச நீதிமன்றம் உத்தரவு வழங்கும் வரை மசோதாக்களின் உயிர் நிலை தொடர்ந்து நீடித்து வரும் என்பதை கற்றறிந்த கனவான் குடியரசுத் துணைத் தலைவர் நன்கறிவார்.

எனினும், அவர், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனநாயக சக்திகள் மீதான “அணு ஏவுகணையாக” பிரயோகித்துள்ளது என கூறியிருப்பது சரியல்ல. ஆளுநரின் சட்டவிரோத செயல்களுக்கு, குடியரசுத் தலைவர் மௌன சாட்சியாக இருந்து விடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் குடியரசுத் தலைவரின் அரசியல் சாசன கடமைகளை நினைவூட்டி, அவைகளை நிறைவேற்ற கால வரம்பு நிர்ணயித்திருப்பது அரசியலமைப்பு பாதுகாப்புக்கான அரணாகவே அமைந்திருக்கிறது என்பதை குடியரசுத் துணைத் தலைவர் பிடிவாதமாக நிராகரித்து விட்டு, உச்ச நீதிமன்றத்துக்கும், நீதித்துறைக்கும் எதிராகப் பேசியிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button