
அரசமைப்புச் சட்டத்தில் இந்தித் திணிப்புக்கான எத்தகைய வாய்ப்புகளும் வழங்கப்படவில்லை என்றாலும், இந்தியை நேரிடையாகவும் மறைமுகமாகவும் புகுத்துவது ஏதோவொரு வகையில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
பள்ளிக் கல்வியில் மூன்றாவது மொழியாக இந்தியைப் பயிலவேண்டும் எனப் பரிந்துரைத்த பின், இந்திய மொழிகளில் ஏதாவதொரு மொழியினைக் கற்றுக்கொண்டால் போதும் என்று இப்போது கூறுவது, இந்தியுடன் மும்மொழிக் கல்வி என்பதற்கு இதுவரை கூறப்பட்ட அனைத்து அடிப்படைகளையும் முழுமையாகத் தகர்த்து விடுகிறது.
ஒப்புக்காக மூன்றாவது மொழியாக இந்தியல்லாமல் வேறு எந்தவோர் இந்திய மொழியினை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம் என்று கூறினாலும், இந்தியைப் படித்தாகவேண்டும் என்பதை வெவ்வேறு முறைகளில் பலரும் வற்புறுத்தி வருவதைக் குறைத்து மதிப்பிட முடியாது.
பாரதிய சனதாக் கட்சியினரும் அவர்களது ஒன்றிய அரசும் இந்தியைப் புகுத்தவில்லை, ஏதாவதொரு மொழியைத்தானே படிக்கச் சொல்கிறோம் என்று கூறிக்கொண்டே, ஒன்றிய மக்களை இணைக்கும் தகுதி பெற்றது இந்தி மொழி மட்டும்தான் என்று அவ்வப்போது கூறுவது மேலும் சிக்கலை மிகுவிக்கிறது.
அதாவது, பள்ளியில் மூன்றாவது மொழியாக இந்தியைத் தேர்ந்தெடுக்காமல் வேறு ஓர் இந்திய மொழியினைக் கற்றுக்கொண்டாலும், ஒன்றிய அரசின் ஆட்சி மொழியாக இருப்பதாலும், ஒன்றிய மாநிலங்களை இணைக்கும் – பிணைக்கும் மொழியாக இருப்பதாலும், பெரும்பான்மையினர் பேசுவதாலும் இந்தியைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்பது தொடர்ந்து முன்னிறுத்தப்படுகிறது. இப்படித் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருப்பதால், தமிழ்நாடு போன்ற இந்தி பேசாத மாநிலங்கள் எப்படியும் இந்தியைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற நிலைக்கு மறைமுகமாகத் தள்ளப்படுகின்றன.
பள்ளிகளில் மூன்றாவது மொழியாக இந்தியைத் தேர்ந்தெடுக்காகவிட்டாலும், நான்காவது மொழியாக இந்தியைப் பயிலவேண்டும் என்ற அடுத்த கட்ட நகர்வுக்குக் கொண்டு செல்ல பா.ச.க.வும் ஒன்றிய அரசும் திட்டமிடுகின்றனவோ என்ற அச்சம் இப்போது ஏற்படுகிறது.
நாளடைவில், நான்கு மொழிகளைப் பள்ளிகளில் கற்பிப்பது மாணவர்களுக்குச் சுமையாக மாறும் என்றும், அதற்கு ஆசிரியர்களைப் பணியமர்த்துவது நடைமுறையில் இயலாமல் போகும் என்றும் கூறி, மூன்றாவது மொழியாக இந்தியையே படித்துவிடலாம் என்ற நிலையினைத் தோற்றுவிக்கும் முயற்சியாகவும் இது அமையலாம்.
எந்த மொழியாக இருந்தாலும், பயிலும் மூன்றாவது மொழியினால் எத்தகைய பயனும் இல்லை என்பது உறுதிப்பட்டிருந்த போதிலும், இந்தி மொழியின் வேண்டலுக்கான அடிப்படைகளாகக் கூறப்படுவன யாவும் பொருந்துவனவாக இல்லை என்பதை நாம் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
ஒன்றியத்தில் உள்ள மாநில இன மக்களை இணைக்கிறது, நாட்டை ஒன்றுபடுத்திப் பிணைக்கிறது என்றெல்லாம் கூறுவதுடன் நின்றுவிடாமல், இந்தி மொழி புகுத்தப்படுவதை எதிர்ப்பது இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது என்ற குரல்கள் அவ்வப்போது எழுவதையும் காணலாம்.
கோடிக் கணக்கான மக்கள் திரளைக் கொண்ட வெவ்வேறு இனங்களை உள்ளடக்கியிருக்கும் ஓர் ஒன்றியத்தின் தொடர்புக்கான மொழியின் வேண்டல் என்பது பெரிதும் வணிகம், போக்குவரவு ஆகியவற்றை மட்டுமே நடுவப்படுத்தி இருக்கிறது. கல்வியில் உயர்நிலை பெற்ற அனைவரும் அறிவு மொழியாக அவர்கள் அறிந்திருக்கும் ஆங்கிலத்தின் துணையோடுதான் பணிகளை மேற்கொள்கின்றனர்.
வேலை வாய்ப்பு என்பது இந்தி பேசும் மாநிலங்களில் மட்டும் அமைந்து விடுவதில்லை. இன்றைய நிலையில், உடல் உழைப்புப் பணிகளுக்கான வேலைவாய்ப்புகளுக்காக இந்தி பேசாத மாநிலங்களில் இருந்து இந்தி பேசும் மாநிலங்களுக்குப் பெயர்ந்து செல்வோர் பெரிதும் இல்லையென்றே கூறிவிட முடியும். ஆனால், இந்தி பேசும் மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு போன்ற தென்னக மாநிலங்களுக்கு வருவோர் நாள்தோறும் பெருகி வருகின்றனர். இவர்கள் தாங்கள் பணியாற்றும் மாநில மொழிகளைத் தாங்களாகவே கற்றுக்கொண்டு அந்தந்த மாநில மக்களோடு கலந்துவிடுகின்றனர் என்பதுதான் நடைமுறையில் நடந்துகொண்டிருக்கிறது.
இதுவே வணிகம், போக்குவரவு ஆகியவற்றுக்கும் ஏற்றதாக அமைந்து விடுகிறது. இந்தி பேசாத இன மக்களின் வணிகத் தொடர்புகள், இந்தி பேசும் மாநிலங்களோடு சுருங்கிவிடவில்லை. இருபத்தைந்துக்கும் மேலாக இருக்கின்ற இந்தி பேசாத மாநிலங்களோடும் வணிகர்களின் தொடர்பு நீள்கிறது. அவரவர் வேண்டல்களுக்கு ஏற்றதான மொழி அல்லது மொழிகளைத் தெரிந்துகொள்கின்றனர்.
போக்குவரவு என்பது சுற்றுலாவின் ஒரு பகுதியாகும். வாழ்வில் ஒரு முறை அல்லது என்றாவது ஒரு முறை சுற்றுலாச் செல்வோர் தங்களுக்குத் தெரிந்திருக்கும் மொழியினை வைத்துக்கொண்டு அனைத்தையும் முடித்துக்கொள்கின்றனர்.
இன்றைய இந்திய ஒன்றிய இனங்களுக்கிடையே 2000 ஆண்டுகளுக்கும் மேலாக வணிகத் தொடர்புகள் நீடித்து வருகின்றன. மேலும் விவரங்களைக் கூறவேண்டுமெனில், பண்டைத் தமிழகம், 2000 ஆண்டுகளுக்கு முன்னரே கிரேக்க, ரோமானிய நாடுகளுடன் கடல் வணிகத்தினை மேற்கொண்டிருந்தது. சீனப் பயணி யுவான் சுவாங் போன்றோர் இன்றைய ஒன்றியத்தின் பல பகுதிகளில் பயணம் செய்துதான் தாங்கள் கண்டவற்றைப் பதிவு செய்திருக்கின்றனர். இத்தகைய வணிகத் தொடர்புகளுக்கும் பிற தொடர்புகளுக்கும் எவரும் இணைப்பு மொழியென ஒன்றினைப் படித்துக்கொள்ளவில்லை. மாறாக, தங்களுக்குத் தெரிந்த மொழி அல்லது மொழிகளையே பயன்படுத்திக்கொண்டனர்.
பலரும் பலமுறை சுட்டிக்காட்டியிருப்பது போன்று, இன்றைய இந்திய ஒன்றிய இன மக்களை ஒன்றுபடுத்தியது ஆங்கில மொழிதான் என்பதை மறந்துவிடக்கூடாது. விடுதலைப் போரினை முன்னின்று நடத்தியோர் ஆங்கிலத்தையே பயன்படுத்த வேண்டியிருந்தது. இந்தி தெரியாத தலைவர்கள் இந்தி மொழியினைக் கற்றுக்கொள்ளவுமில்லை; இந்தி மொழி சார்ந்த தலைவர்கள் ஆங்கிலத்தைப் பயன்படுத்திக் கொள்ள மறுக்கவுமில்லை.
இன்றும்கூடத் தேசிய தலைவர்களாகக் கருதப்படுவோர் அனைவரும் இந்தி பேசாத மாநில மக்களிடம் உரையாற்றும்போது பெரிதும் ஆங்கிலத்தையே நாடுகின்றனர். அவர்கள் ஆங்கிலம் அல்லது இந்தி எனத் தங்களுக்குத் தெரிந்த எந்த மொழியில் பேசினாலும், உள்ளூர் மொழி மக்கள் புரிந்துகொள்ள உரியவாறான மொழிபெயர்ப்பினைச் செய்யவேண்டியுள்ளது.
இவற்றைக் கொண்டு பார்க்கும்போது, பொதுமக்கள் என்ற வகையில் ஒன்றிய இன மக்களை இந்தி இணைத்துவிடவுமில்லை; ஒன்றியத்தில் உள்ள இனங்களை இந்தி ஒன்றுபடுத்தி வைத்திருக்கவுமில்லை. இத்தகைய உண்மை நிலைமைகளைப் புரிந்துகொண்டால், இந்தி புகுத்தப்படுவதை எதிர்ப்பது இந்திய ஒருமைப்பாட்டுக்கு மாறானது என்பது பொய்யாகிவிடுகிறது.
பா.ச.க.வினர் கூறுவது போன்று, இந்தி படிக்கும் உரிமையை மறுப்பது புதிய தீண்டாமையாக அமையவில்லை. இந்தி படித்தாகவேண்டும் என்ற சுமையை ஏற்றி முன்னேற்றத்தைத் தடுப்பதுதான் புதிய தீண்டாமையாக மாறிவிடுகிறது. இந்தி படிக்காவிட்டால் நிதி நல்கையும் இல்லை, வேறு வாய்ப்புகளும் இல்லை என்று ஒதுக்கிவைப்பதுதான் புதிய தீண்டாமையாகும்.
இன்போசிசு நிறுவனத்தின் சுதா மூர்த்தி ஏழு அல்லது எட்டு மொழிகளைத் தெரிந்திருக்கலாம்.
ஆனால் அந்த மொழிகளை அவர் பள்ளியில் படிக்கவில்லை. பள்ளியில் பல மொழிகளைப் படிக்காமல், வாழ்முறையில் ஏழு அல்லது எட்டு மொழிகளைப் பள்ளிக் கல்விக்குப் பின்னர் தெரிந்துகொள்ள முடியும் என்பதுதான் இங்கு உறுதியாகிறது. அப்படியிருக்க, மூன்றாவது ஏதாவது ஒரு மொழியினைப் பள்ளியில் படிக்காமல், வாழ்வுக்கு எந்த மொழி அல்லது மொழிகளை எப்போது வேண்டுமோ அப்பொழுது தெரிந்துகொள்வதுதான் போதுமானதாக இருக்கும்.
இன்றைய தமிழ்நாட்டின் எதிர்ப்பும் எதிர்பார்ப்பும் இதுதான். இந்திய ஒன்றியத்தில் இந்தி தெரிந்தோர், இந்தி தெரியாதோர் என்ற இரு பிரிவுகளை, இரு வகையான குடிமக்களை உருவாக்கிவிட வேண்டாம். இணைக்கும் மொழியாக முன்னிறுத்தப்படும் இந்தி என்ற கருவி மக்களை இரு பகுதியினராகப் பிரித்துவிடும் மொழியாக மாறிவிடக்கூடாது.