Uncategorized

நாகையில் சந்திப்போம்!-3

கட்சிக் கடிதம்

போர்க்குணமிக்க தோழர்களே!

இந்தியா எனும் நம் பெருநாடு கிராமப்புறங்களை அடிப்படையாகக் கொண்ட நாடாகும். அன்று முதல் இன்று வரையில் நாட்டில் வாழும் மொத்த மக்கள் தொகையில், பெரும்பாலான மக்கள் ஈடுபடும் தொழில் வேளாண்மையே ஆகும்.

சிறு குறு, நடுத்தர விவசாயிகளும், நிலமற்ற கூலித் தொழிலாளர்களும் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

அகில இந்திய அளவில் விவசாயிகள் சங்கம் என்று தொடங்கிச் செயல்பட்ட போது, நிலம் வைத்திருப்பவர்கள் மட்டுமின்றி, விவசாயத் தொழிலாளர்களையும் இணைத்தே அகில இந்திய அளவிலும், மாநில அளவிலும் விவசாயிகள் சங்கமென ஒரே அமைப்பாகத் தொடங்கப்பட்டது.

பின்னர் தேவை கருதி, விவசாயத் தொழிலாளர்கள் பிரச்சனைக்குத் தீர்வுகாணும் வகையில் விவசாயத் தொழிலாளர்களுக்கு என்று தனிச் சங்கம் அமைக்கப்பட்டது.

தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் (பதிவு செய்யப்பட்ட சங்கம்) தோழர்கள் எம்.காத்தமுத்து, இரா.நல்லகண்ணு, மன்னார்குடி டி.ஆறுமுகம் போன்ற தலைவர்கள் இவ்வமைப்பிற்குத் தலைமை தாங்கி வழி நடத்தினர். இது தொழிற்சங்கச் சட்டப்படி பதிவு செய்யப்பட்ட ஒரே விவசாயத் தொழிலாளர் சங்கமாகும்.

அகில இந்திய அளவில் முதன்முதலாக தொடங்கப்பட்ட சங்கம், நமது சங்கமே (பி.கே.எம். யூ)
சங்கம் தொடங்கப்பட்ட 1936 முதல் இன்று 2025 வரை 89 ஆண்டுகள் ஆகின்றன.
இக்காலகட்டத்தில் சங்கம் சாதித்தது என்ன?

சாதனைப் பட்டியல் மிக நீண்டது, நெடியது! அனைத்தையும் தொகுத்துக் கட்சியின் நூற்றாண்டு விழாவையொட்டி தனி நூலாக வெளியிட, தனிக்குழு அமைக்கப்பெற்று, அக்குழு தனது பணிகளை மேற்கொண்டுள்ளது.

அந்நூலின் மூலம் நமது சங்கத்தின் முழுச் சாதனைகளையும் அறிய முடியும். சில குறிப்பிட்ட சாதனைகள் குறித்து இங்கே நாம் பார்ப்போம்!

நிலச் சீர்திருத்தம், உழுபவனுக்கு நிலம் சொந்தம் என்பதற்கு இன்று பலரும் உரிமை கொண்டாடுவதைப் பார்த்து வருகின்றோம். ஆனால் உண்மை என்ன?
நாடு விவசாயத்தைச் சார்ந்திருந்த போதும், நாடு முழுவதும் நிலங்கள் குவியல், குவியலாக சில தனி நபர்கள் வசம் அகப்பட்டுக் கொண்டன.

1. நிலப்பிரபுகள்
2. ஜமீன்தார்கள்
3. மடாதிபதிகள்
4. கோவில்கள்

இவர்களுக்குச் சொந்தமாக நிலம் இருந்து வந்தன.

ஒரு பகுதி நிலங்களைக் குத்தகை விவசாயிகள் சாகுபடி செய்து வந்தனர். நிலக் குவியல் என்பது, அவர்களுக்கு நிலங்கள் மட்டும் சொந்தமானது மட்டுமல்ல, அப்பகுதியில் வாழும் மக்கள் அனைவரும் அவர்களின் ஆளுகைக்கு உட்பட்டே இருக்க வேண்டியதாயிற்று.
கொடிய அடக்குமுறைகளுக்கு அவர்கள் உள்ளாக்கப்பட்டனர். இதிலிருந்து விடுதலை பெற வேண்டுமெனில், நிலக்குவியல் முறை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். நில உச்சவரம்புச் சட்டம் நாடு முழுவதும் நிறைவேற்றப்பட்டு, உழுபவனுக்கு நிலம் சொந்தமாக்கப்பட வேண்டும் என்ற முழக்கத்தை சங்கம் முன் வைத்தது.

இதற்காக இடைவிடாத போராட்டத்தை மேற்கொண்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் போராட்டங்கள் தீவிரமடைந்தன.

தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தின் உச்சமாக, இரு பெரும் வரலாற்றுச் சிறப்புமிக்கப் போராட்டங்கள் நினைவு கூறத்தக்கன.

1961 ஆம் ஆண்டு நிலச் சீர்திருத்த சட்டத்தை வலியுறுத்தி, இரு பெரும் பாதயாத்திரைகள் மேற்கொள்ளப்பட்டன.

மதுரையில் இருந்து தமிழ்நாடு விவசாயச் சங்கத்தின் தலைவர் மணலி சி.கந்தசாமி தலைமையில் ஒரு குழு தென் மாவட்டங்கள், வட மாவட்டங்கள் வழியாக தலைநகர் சென்னைக்கு வந்தடைந்தது.

மற்றொரு குழு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.சீனிவாசராவ் தலைமையில் கோவையில் தொடங்கி, மேற்கு மாவட்டங்கள் அனைத்தையும் வலம் வந்து தலைநகர் சென்னை வந்தடைந்தது.

இவ்விரு குழுக்களும் பலநூறு மைல்களை கடந்து வந்த போது, வழி நெடுகிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்த்தி வரவேற்றனர்.

இத்தகைய இயக்கம் மக்களிடத்தில் நிலச் சீர்திருத்தத்தின் தேவை குறித்து நல்லதொரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

சென்னை மாநகரம் வந்தடைந்த போது, மாநகர மக்களின், தொழிலாளர்களின் அன்பான வரவேற்பைப் பெற்றதுடன் திமுக, தமிழரசு கழகம் போன்ற அமைப்புகள் தங்களின் ஆதரவைத் தெரிவித்து, வரவேற்புப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார்கள். தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அறப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட, கோட்ட, வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு தொடர் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.

அவற்றில் 16 ஆயிரம் பேர் பங்கு பெற்று, மறியல் செய்து கைதாகி அனைவரும் மூன்று மாத காலம் வரை தண்டிக்கப்பட்டனர்.

தமிழ்நாட்டுச் சிறைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. திருச்சி மத்திய சிறையில் இரு தோழர்கள் மரணமடைந்தனர்.

இப்போராட்டம் நடைபெற்ற போது, “உழுபவனுக்கு நிலம் சொந்தம் என்றால், சிரைப்பவனுக்குத் தலை சொந்தமா? வெளுப்பவனுக்கு வேட்டி சொந்தமா?” எனப் பலர் கேலி பேசியது உண்டு. ஆனால் அவர்கள் கேலிகளும், கிண்டல்களும் நகைப்பிற்குரியதாயின.
அரசு நிலச் சீர்திருத்த சட்டத்தைக் கொண்டுவர வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானது.
தமிழ்நாடு அரசால் பெயரளவுக்கு ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. சட்டமும் கொண்டு வரப்பட வேண்டும். அதே நேரத்தில் நிலப்பிரபுகளும் காப்பாற்றப்பட வேண்டும் என்கிற நோக்கில் அது இருந்தது.

அதில் கோவில், கல்வி நிலையங்கள் என ஏராளமான விதிவிலக்குகள் நிறைந்திருந்தன.
சட்டம் ஏட்டில் இருந்தது. நிலம் பண்ணையார்கள், ஜமீன்தார்களிடம் பாதுகாப்பாக இருந்தது. இத்தகைய போலித்தனமான நில உச்சவரம்புச் சட்டத்தை எதிர்த்து, தொடர் போராட்டங்கள் தொடர்ந்தன.

மீண்டும் ஒரு மாபெரும் நிலப் போராட்டத்திற்கு 1970 இல் அறைகூவல் விடப்பட்டது.
இப்போராட்டம் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. நிலச் சீர்திருத்த சட்டம் கொண்டு வந்த பின்னரும், யாரிடத்தில் எத்தனை ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இருக்கின்றன என்பதனை வெளிப்படுத்தும் விதமாக, அத்தகைய நபர்களின் பெயர்கள், அவர்களுக்கு எத்தனை ஆயிரம் ஏக்கர் நிலம், எந்தெந்த கிராமங்களில் உள்ளது என்பதை ஆதாரப்பூர்வமாக அறிவித்து, அத்தகைய பண்ணை நிலங்களில் நேரடியாக இறங்கிக் களம் காண்பது என்றும், களம் காணும் தலைவர்கள் பட்டியலும் வெளியிடப்பெற்று, அந்நிலங்களில் 1970 ஆகஸ்ட் 15 முதல் போராட்டத்தை மேற்கொள்ள முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 15 என்பது நாடு விடுதலை பெற்ற நன்னாளாகும். அதற்கு முன்னர் ஆகஸ்ட் 9 வெள்ளையனே வெளியேறு என முழக்கமிட்ட நாளில், அனைத்து வட்டத் தலைநகரங்களிலும், பேரணி பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் போராட்டம் நடைபெறுவதற்கு முன்பாகவே, ஆகஸ்ட் 8 நள்ளிரவு முதல், தமிழ்நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரால் தலைவர்களும், தோழர்களும் கைது செய்யப்பட்டார்கள். சிவப்புத் துண்டணிந்த அனைவரும் கைது செய்யப்பட்டார்கள்.
தமிழ்நாடு முழுவதும் கைதுகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. 144 தடை உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன. கடுமையான அடக்குமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அடக்குமுறைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து, திட்டமிட்ட அடிப்படையில் தமிழ்நாடு முழுதும் போராட்டம் நடைபெற்றது.

அனைத்துப் பண்ணை நிலங்களிலும், செங்கொடிகள் பறந்தன. தமிழ்நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை மற்றும் போராட்டக் களத்தில் 16 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு, மத்திய சிறைச்சாலைகளில் ஒரு மாத காலம் அடைத்து வைத்து, பின்னர் அரசு விடுதலை செய்தது.
இத்தகைய போராட்டங்களால்தான் நில உச்சரம்பு என்பது உறுதி செய்யப்பட்டது. உழுபவர்களுக்கு நிலம் சொந்தமாக்கப்பட்டது. இத்தகைய சாதனைக்குச் சொந்தக்கார சங்கத்தின், அகில இந்திய மாநாடுதான் நாகையில் ஏப்ரல் 15, 16, 17 ஆகிய மூன்று தினங்கள் நடைபெறுகின்றது.

குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகள், இவர்கள் பண்ணையார்களின் நிலங்கள், ஜமீன்தார்களின் நிலங்கள், மடாதிபதிகளின் நிலங்கள் மற்றும் கோவிலுக்குரிய நிலங்களில் குத்தகை சாகுபடி செய்து வந்தனர்.

கோவில் நிலங்கள் என்பது கோவிலுக்குச் சொந்தம் என்றாலும் கூட, இவை அனைத்தும் பண்ணையார்கள் கட்டுப்பட்டில்தான் இருந்தன.

குத்தகை சாகுபடி செய்து வந்த விவசாயிகள், ஆண்டுதோறும் செலுத்திட வேண்டிய குத்தகை என்பது அளவற்றிருந்தது. பண்ணையார்களும், மடங்களும், ஜமீன்தார்களும் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப, குத்தகை அளவைத் தீர்மானித்தனர்.

அவர்களது தீர்மானத்தை எவரும் மீறிட முடியாது. பெரும் நட்டத்திற்கு விவசாயிகள் உள்ளாகினர். அவை மட்டுமன்றி, தொடர்ந்து சாகுபடி செய்திட எவ்விதப் பாதுகாப்பும் அற்ற நிலையும் தொடர்ந்தது. நிலத்திலிருந்து எப்போது வேண்டுமானாலும் விவசாயிகள் வெளியேற்றப்பட்டு வந்தனர்.

குத்தகை குறைக்கப்பட வேண்டும் என்பதும், பாதுகாப்பு வேண்டியும் சங்கம் தொடர் போராட்டங்கள் மேற்கொண்டது.

இதன் விளைவாக குத்தகை குறைப்பும், குத்தகைப் பாதுகாப்புச் சட்டத்தையும் சங்கம் பெற்றுத் தந்து சாதனை படைத்து, குத்தகை விவசாயிகளைப் பாதுகாத்தது.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல் உள்ளிட்ட தானியங்களைத் தனியார் கொள்முதல் செய்தனர். விலையை நிர்ணயிப்பவர்கள் இடைத்தரகர்கள்(வியாபாரிகள்) வசம் இருந்தது. குறைந்தபட்ச விலையைக் கூட விவசாயிகள் பெற முடியாத நெருக்குதலுக்கு உள்ளானார்கள்.
இவற்றிற்குத் தீர்வு காணும் விதமாகக் கொள்முதல் விநியோகப் பொறுப்பை அரசே ஏற்க வேண்டுமெனக் கோரி, இடைவிடாப் போராட்டத்தின் விளைவாக இந்தியா அளவில் உணவுக் கழகம் (புட் கார்ப்பரேஷன் இந்தியா) மாநில அளவில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் உருவாக்கப்பட்டன.

இன்று விவசாயிகள் நேரிடைக் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்து, அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதார விலையைப் பெற முடிகின்றது. இடைத்தரர்களின் பிடியிலிருந்து விடுதலை பெற்றுள்ளனர்.

நியாய விலைக் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்களைப் பெற முடிகின்றது. இத்தகைய சாதனைகளை நிகழ்த்தியது நமது சங்கம்.

  • உழுபவனுக்கு நிலம் சொந்தம்!
  • குத்தகை விவசாயிகளுக்குக் குத்தகை குறைப்பு.
  • நிலத்திலிருந்து வெளியேற்றாமல் குத்தகை பாதுகாப்புச் சட்டம்.
  • நெல் கொள்முதல்
  • அனைத்து மக்களுக்கும் நியாய விலைக் கடைகள் மூலம் உணவுப் பொருள்கள் கிடைத்திட உத்தரவாதம்.

நமது விவசாயிகள் சங்கத்தின் சாதனை என்பதனை நெஞ்சை நிமிர்த்தி நம்மால் உரக்கக் கூற முடியும்!

விவசாயிகளின் வாழ்வோடு பின்னிப் பிணைந்து வாழ்ந்த மக்கள், நிலமற்ற கூலி விவசாயத் தொழிலாளர்கள்!

இவர்களில் பெரும் பகுதியினர் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்கள், இவர்கள் உழவுப் பணிகளுக்குச் செல்ல வேண்டும். எப்போது? சூரியன் உதயத்திற்கு முன்பாக, எப்போது வீடு திரும்ப வேண்டும். சூரியன் மறைவிற்குப் பின்! இவை எழுதப்படாத சட்டம்?
இவர்கள் கடும் பொருளாதாரச் சுரண்டலுக்கு ஆளானவர்கள் மட்டுமல்ல, கடும் சமூக அடக்குமுறைக் கொடுமைகளுக்கு உள்ளானவர்கள்.

ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் கடும் அடக்க முறைகளுக்கு உள்ளானார்கள்.
தஞ்சை தரணியில் சாட்டையடி, சாணிப் பால் கொடுமைகள் நீக்க மற நிறைந்திருந்தன.
மாட்டை விட மனிதர்கள் கேவலமான முறையில் நடத்தப்பட்டார்கள். தெருக்களில் நடப்பது, குளத்தில் குளிப்பது உட்பட பல்வேறு சமூகக் கொடுமைகள் நிகழ்ந்தன.

சமூகக் கொடுமைகளுக்கும், சுரண்டலுக்கும் எதிரான போராட்டங்கள் நீடித்தன. அடித்தால் திருப்பி அடிப்போம் என்கின்ற முழக்கம் மேலோங்கியது, இதற்குப் பின்னரே இக்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

‘குடியிருப்பு மனைகளிலிருந்து காலி செய்யாதே! குடியிருப்பு மனையைச் சொந்தமாக்கு! குடியிருக்க மனை கொடு! வீடு கட்ட பணம் கொடு என்கிற தீர்மானம், மன்னார்குடியில் நடைபெற்ற விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய இரண்டாவது மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுவே இன்று தொகுப்பு வீடுகள் என உறுதி செய்யப்பட்டது.
நாடு முழுவதும் நிறைந்துள்ள விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களை அமைப்பு ரீதியாக, அரசியல் ரீதியாக ஒன்றுபடுத்திச் செயல்பட வைத்து, அவர்களின் சமூக, பொருளாதாரப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

கடந்த கால சாதனைகளை, வெற்றிப் பெருமிதங்களோடு நமது பணிகள் நிறைவடைந்து விடவில்லை.

இன்று ஒன்றியத்தில் அமைந்துள்ள ஆட்சி என்பது ஓர் மூர்க்கத்தனமான அரசு.
ஏழை, எளிய மக்களைப் பற்றியோ, தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் பற்றியோ, கிஞ்சிற்றும் கவலைப்படாத ஆட்சி என்பதும், கார்ப்பரேட் பெரு முதலாளிகளின், சில தனிநபர்களின் நலன்களைப் பாதுகாப்பதிலும், அவர்களின் செல்வங்கள் மேன்மேலும் பெருகிட, பெரும் பங்காற்றி வரும் அரசு என்பதனை அனைவரும் நன்கு அறிவார்கள்.

ஒன்றிய அரசு மூர்கத்தனமான முறையில், கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு எதிராக மூன்று வேளாண் சட்டங்களை, தனக்கு நாடாளுமன்றத்தில் உள்ள மிருகத்தனமான பெரும்பான்மையைப் பயன்படுத்தி நிறைவேற்றியது.

நமது சங்கம் உட்பட, அனைத்து விவசாயிகள் சங்கங்கள் மட்டுமின்றி பாஜகவைத் தவிர்த்து, அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்த்தன. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாகத் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

ஆனால் ஒன்றிய அரசு தான் நிறைவேற்றிய தீர்மானங்களில் கமா, புல்ஸ்டாப்பைக் கூட திருத்த முடியாது என்று பிடிவாதம் காட்டியது.

‘விவசாயிகள் ஒன்று திரண்டார்கள். தலைநகர் டெல்லியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், 13 மாத காலம் இடைவிடாது போராடினார்கள்.

இரவு பகல் பாராது போராடினார்கள். கடும் குளிர் அவர்களைக் கண்டு நடுங்கியது. இடைவிடாது பெய்த பெரு மழை அவர்களை கண்டு அஞ்சியது. சுட்டெரிக்கும் வெய்யில் அவர்களின் உறுதிமிக்கப் போராட்டத்தைக் கண்டு அஞ்சியது.

கொடுமையான கொரோனா உலக மக்களை முடக்கியது. வீட்டை விட்டு எவரும் வெளியில் வர இயலவில்லை. ஆனால், விவசாயிகள் கொரோனாவைக் கண்டு அஞ்சவில்லை. ஒருவர் அல்ல, இருவர் அல்ல, 700 விவசாயிகள் போராட்டக் களத்தில் வீர மரணமடைந்தார்கள்.
இதற்குப் பின்னரே ஒன்றிய அரசு தான் நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றது.

ஆனால், இன்று வரை விவசாயிகளுக்குக் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றான, விவசாய விளை பொருள்களுக்கு, நாடாளுமன்றத்தில் விலை நிர்ணயச் சட்டம் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. விவசாயிகள் மீண்டும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அமைதியான முறையில் போராடும் விவசாயிகள் மீது, ஒன்றிய அரசு துணை ராணுவம் கொண்டு அடக்குமுறைகளை ஏவி வருகின்றது. போராட்டம் தொய்வின்றித் தொடர்கிறது.

விவசாய விளைப் பொருட்களுக்கான, விலை நிர்ணயச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.
விவசாயிகள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.

குத்தகை விவசாயம் செய்து வரும் நிலங்களை, விவசாயிகளுக்குச் சொந்தமாக்கப்பட வேண்டும்.

வேளாண்மைத் தொழில் முற்றிலும் இயந்திரம் மயமாக்கப்பட்ட நிலையில், விவசாயத் தொழிலாளர்களுக்கு, பெண்களுக்கு ஓரளவு பாதுகாப்பாக இருந்து வரும், மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்புச் சட்டத்தை, மோடியின் அரசு சீர்குலைத்து வருகின்றது. வேலை நாட்களை 200 ஆக அதிகரிக்கவும், நாள் ஊதியத்தை ரூபாய் 700 ஆக உயர்த்தவும் போராட வேண்டும்.

குடியிருப்பு மனை சொந்தமாக்கப்பட வேண்டும். மனையில்லாதவர்களுக்கு மனை வழங்கிட வேண்டும்.

அனைவருக்கும் பாதுகாப்பான வீடுகள் கட்டித் தரப்பட வேண்டும்.

இவையெல்லாம் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் முன்பு உள்ள பிரச்சனைகளாகும்.
ஏப்ரல் திங்களில் கூடவுள்ள விவசாயச் சங்கத்தின் 30 வது தேசிய மாநாடு உரிய தீர்மானங்களை உருவாக்கும் என்று நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் எதிர்பார்க்கின்றார்கள்.

மாநாட்டில் நமது அகில இந்தியத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். அவர்கள் மட்டுமின்றி, தமிழ்நாடு வேளாண்மைத் துறை அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துத் தெரிவிக்க உள்ளனர்.

தோழமை அமைப்புகளின் சங்கத் தலைவர்களும் பங்கேற்று வாழ்த்து கூற உள்ளார்கள். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மாநிலங்களின் சார்பில், நமது சங்கப் பிரதிநிதிகள் வருகை தர உள்ளனர்.

மாநாட்டின் தொடக்க நாள் அன்று தியாகிகளை நினைவுகூறும் தியாகச்சுடர்கள் திருவாரூர், தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இருந்து வருகின்றன.

ஏப்ரல் 15 காலை தியாகச் சுடர்களின் அணிவகுப்போடு மாநாடு தொடங்குகின்றது.
மாநாட்டின் நிறைவு நாளான ஏப்ரல் 17ஆம் நாள், நாகை நகர் கண்டிராத மாபெரும் அணிவகுப்பும், நிறைவாகப் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளன.
பேரணி, பொதுக்கூட்டத்தில் பங்கேற்கத் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் அணி திரள உள்ளனர்.

விடுதலைப் போர்க்களத்தில் உதயமான விவசாயிகள் சங்கம், தனது நீண்ட நெடிய போராட்டத்தால், பெருமைக்குரிய தியாகத்தால், அரிய பல சாதனைகளைச் சாதித்திட்ட பெருமையோடும், கம்பீரத்தோடும் நாகை நகரில் தனது முப்பதாவது மாநாட்டை நடத்தவுள்ளது.

மாநாடு வெற்றி பெற, ஆகச் சிறந்த தீர்மானங்கள் உருவாக, அவற்றைச் செயல்படுத்திட, உறுதுணையாக நம் பங்களிப்பைச் செய்திடுவோம்.

நிறைவு நாளில் நடைபெறும் மகத்தான பேரணியில், மாபெரும் பேரணியில், பொதுக்கூட்டத்தில் பங்கேற்போம்.

நிறைவு பெற்றது.

தோழமைமிக்க,
(இரா.முத்தரசன்)
மாநிலச் செயலாளர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button