கட்டுரைகள்

இருமொழி இழப்பிலும் தள்ளவில்லை மும்மொழி முன்னேற்றமும் தரவில்லை

மே.து.ரா.

1960 களின் இரு மொழிக் கொள்கை, தற்போது காலம் கடந்ததாகிப் பொருத்தமின்றிப் போய்விட்டது என்றும் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பயன்படும் மும்மொழிக் கொள்கையினை இப்போது ஏற்கவேண்டும் என்றும் பா.ச.க. தலைவர்கள் கூறிவருகின்றனர்.
அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து 75 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த நீண்ட நெடிய பயணத்தில் இந்தி பேசாத மக்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் இந்தி மொழி வளர்த்தெடுக்கப்பட்டுள்ளதா, மேன்மைப்பட்டுள்ளதா? என்றால் இல்லை என்றே கூறவேண்டியுள்ளது.

இந்தி அறிவு மொழியாகவில்லை

முதல் உலகப் போருக்கு முன்னரே சப்பானிய மொழி வளர்ச்சிப் போக்கில் காலடியெடுத்து வைத்துவிட்டது. ஆனால், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் விடுதலை பெற்ற சீனாவும் கொரியாவும் ஏறக்குறைய எழுபத்தைந்து ஆண்டுகளில், அறிவியல் மற்றும் நுட்ப அளவில் மட்டுமல்லாது, உற்பத்தியிலும் பெரும் வளர்ச்சியையும் முன்னேற்றத்தினையும் கண்டுள்ளன. இன்று உலகில் நிலவும் அறிவியல், தொழில்நுட்ப அறிவுனைத் தரக்கூடிய மொழிகளின் பட்டியலில் சீன, கொரிய மொழிகள் இடம்பெற்றுவிட்டன.

ஆனால், சீன, கொரிய மொழிகளுக்குக் கிடைத்த அதே வாய்ப்பும் சூழலும் பேணுதலும் போற்றுதலும் கிடைத்திருந்தும், ஒன்றிய அரசின் அளவு கடந்த பொருளுதவி வாய்ப்புகள் பெற்றிருந்தும், கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளில் இந்தி மொழி அத்தகையதொரு அறிவு மொழியாக மேம்படுத்தப்படவில்லை.

ஆங்கிலம், ரசியன் செர்மன், பிரெஞ்சு ஆகியவற்றைப் போல சப்பானிய, சீன, கொரிய மொழிகளும் இன்று அறிவுச் செல்வங்களைப் பெற்றுத் திகழ்கின்றன. வெவ்வேறு அறிவுத் துறைகளின் வளர்ச்சியில் சில வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அந்தந்த நாட்டு மக்களுக்கு உயர்கல்வி தருகின்ற வகையிலும் ஆய்வுகளை முன்னெடுக்கும் அளவிலும் அந்த மொழிகள் வளம் கண்டுள்ளன. இதனாலேயே, புதிய கண்டுபிடிப்புகளும் அந்த நாடுகளிலிருந்து உருவாகின்றன.

ஆயினும், அரசியல், வணிகம் படை, வலிமை, மனித வளம், உற்பத்தித் திறன், நுட்ப அறிவு, புதிய கண்டுபிடிப்புகள் போன்ற பல்வேறு காரணிகளால் ஆங்கிலம், ரசியன், சீனம் ஆகிய மொழிகள் இன்று முன்னிடம் பெற்றுள்ளன என்பதை மறுப்பாரில்லை.

இன்று உலகத் தொடர்புக்காக மட்டும் அல்லாது, உலகம் பெற்றுள்ள அறிவுத் துறைகள், நுட்ப முன்னேற்றங்கள், கண்டுபிடிப்புகள் ஆகிய அனைத்தையும் பெற, இந்திய ஒன்றியத்தில் உள்ள அனைத்து இன மக்களுக்கு அத்தகையதொரு மொழி வேண்டப்படுகிறது. எதிர்பாராமல், வரலாற்றுக் காரணிகளால், ஏற்கெனவே இந்திய ஒன்றியத்தில் அடங்கியுள்ள இன மக்களுக்கு அறிமுகமாகிவிட்ட ஆங்கிலம் இன்றைக்குத் தவிர்க்க இயலாததாக நிலைபெற்றுவிட்டது. இதற்கு மாற்றாக வேறொரு இந்திய மொழியினை முன்னிறுத்துவதற்கான சூழல் இப்போதைக்கு இல்லை என்பதையும் புறக்கணித்துவிட முடியாது.

மக்களை அடிமைப்படுத்திய மொழி என்று ஆங்கிலத்தை மறுக்க முயன்றாலும், ரசியன், சீனம் போன்ற வேற்று நாட்டு மொழியொன்றினைத்தான் தேர்ந்தெடுக்கவேண்டியிருக்கும். இந்தி உள்ளிட்ட, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி ஏதாவதொன்று ஆங்கிலத்தின் இடத்தை இட்டுநிரப்பக்கூடிய அளவுக்கு இன்று மேம்படவில்லை – மேம்படுத்தப்படவில்லை என்பதையும் ஒதுக்கிவிட இயலாது.

வாய்ப்பிருந்தும் இந்தி வளரவில்லை

அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 351, இந்தி மொழியின் பரப்பலுக்கான பணிகளை மேற்கொள்ளும் கடமையை ஒன்றிய அரசுக்குத்தான் தந்திருக்கிறது. இந்திய ஒன்றியத்தின் பல்வேறுபட்ட கூட்டுப் பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்தும் ஊடகமாகச் செயல்படவும் வாய்ப்பளித்திருக்கிறது. இவ்வாறு முழு உரிமை தரப்பட்டிருந்தும், எத்தகைய முன்னேற்றத்தையும் ஒன்றிய அரசால் செயல்படுத்த முடியவில்லை. இந்தியைத் திணிக்க எடுத்துக்கொண்ட அனைத்து முயற்சிகளும் வீணாயின என்றுதான் சொல்லவேண்டும்.

இந்தி பேசாத மாநிலங்களில் இருக்கும் ஒன்றிய அரசு சார்ந்த நிறுவனங்களின் அலுவலகங்களில் இந்தியைப் பயன்படுத்த முயல்வது, ஒன்றிய அரசு நிறுவனங்களின் விண்ணப்பங்களை இந்தியில் அச்சிடுவது, தேர்வுகளை ஆங்கிலத்துடன் இந்தியிலும் நடத்துவது, நாடாளுமன்றத்தில் பேசுவது, வானொலி-தொலைக்காட்சி ஊடகங்களில் பயன்படுத்துவது, சட்டங்கள், திட்டங்கள், தொடர்வண்டிப் பெயர்கள் என்பன போன்ற இன்னும் பல வழிகளில் ஊடுருவல் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

இத்தகைய மேலோட்டமான செயல்பாடுகள் பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளுக்குக்கூடப் பொருத்தமில்லாதவை. அறிவியல் நுட்ப வளர்ச்சியின் உயர்நிலைப் பயன்பாடுகளால் இயங்கிக்கொண்டிருக்கும் இன்றைய உலகில், ஒவ்வொரு அசைவும் நுட்பத்தினைத் தன்னுள் அடக்கிக்கொண்டுள்ளது. அதற்கேற்ற அறிவையும் ஆற்றலையும் ஆக்கத்தையும் திறனையும் கற்றலையும் தரக்கூடிய மொழியொன்று ஒவ்வொருவருக்கும் வேண்டப்படுகிறது. அத்தகைய அறிவு மொழியின் இடத்தை அலுவல் மொழியாக மட்டும் இருப்பதாக நம்பப்படும் இந்தியால் பெறமுடியவில்லை; பெறமுடியாது என்பதுதான் நடைமுறை உண்மை.

குறுகிய காலத்தில் அறிவு மொழியாக மேம்பட்ட சீனம் அல்லது கொரிய மொழியினைப் போல ஏன் இந்தி செழுமைப்படுத்தப்படவில்லை என்பது வியப்பாகவே இருக்கிறது. அதற்கான தொடக்க முயற்சிகள்கூட மேற்கொள்ளப்படவில்லை.

இந்தி ஏன் பல்லாண்டுகளாக மேம்படுத்தப்படவில்லை என்பதற்கான பின்புலத்தை அறிவது, இந்த இடத்தில் முழுமையான தெளிவைத் தரும்.

சமக்கிருதத்தைப் புகுத்தும் முயற்சி

அலுவல் மொழிக்கு வேண்டிய வளத்தினை இந்தி பெற, சமக்கிருதத்தில் முதன்மையாகவும் பிற மொழிகளில் அடுத்ததாகவும் சொற்களை எடுத்துக் கொள்ளலாம் என்று அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 351 மேலும் வற்புறுத்துகிறது. இந்த இடத்தில் சமக்கிருதத்தைத் தனித்துச் சுட்டிக்காட்டியிருப்பதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகவே தெரிகிறது.

சமக்கிருதத்தைத் தேசிய மொழியாக ஏற்கவேண்டுமென்ற வலியுறுத்தல் அன்று அரசமைப்பு அவையிலிருந்த சில பண்டிதர்களிடமிருந்து வந்திருந்தாலும், வலுத்த எதிர்ப்புகளால் இது நடக்கவில்லை. இருப்பினும், சமக்கிருதத்துக்குத் தனித்துவம் இருப்பதாக காட்டிக் கொள்வதற்காக, 351ஆவது பிரிவில் சமக்கிருதத்தை எப்படியோ நுழைத்துவிட்டனர்.

அவர்களது நோக்கம் வெளிப்படையானதுதான். நாளடைவில், இந்திக்கு அலுவல் மொழியாகும் தகுதியில்லை என்பதை உறுதிப்படுத்தி, சமக்கிருதத்தை அந்த இடத்தில் முன்னிறுத்தி, அமர்த்திவிடலாம் என்று கனவு கண்டனர்.

இதனால்தானோ என்னவோ, அப்பொழுதெல்லாம் அமைச்சரவையிலும் ஆட்சி மேலாண்மையிலும் செல்வாக்குப் பெற்றிருந்த சமக்கிருதப் பற்றாளர்களான சனாதனப் பார்ப்பனர்கள், இந்தி மொழி வளர்ச்சிக்கான முழுமையான முன்னெடுப்புகளை மேற்கொள்ளவில்லையோ என்ற அய்யம் எழுகிறது. இது பிற மொழிகளைப் புறக்கணித்துத் தேக்கத்தில் நிறுத்தியதற்கும் பொருந்தலாம்.

ஆனால், தேர்தல் அரசியலில், இந்தி வெறியர்களின் எண்ணிக்கையும் எண்ணங்களும் முன்னின்றதால், மிகச் சிறியளவினரான சனாதனிகளின் நோக்கம் நிறைவேறவில்லை. ஆயினும், அவர்களது முயற்சிகள் முடிவுக்கு வரவில்லை. அழுத்தம் தரும் இடத்தில் இருந்துகொண்டு, ராட்ரிய சுயம் சேவக் சங்கத்தினரின் தலைமையில் நாட்டைச் சமக்கிருதவயமாக்கத் திட்டங்களை வகுத்து வருகின்றனர். இதில் இந்தி மொழியும் பலியாகிவருகிறது. இதனைக்கூட இந்தியைத் தாய் மொழியாகக் கொண்ட மக்கள் புரிந்துகொள்ளவில்லை.

இதோடு சனாதனிகள் நிற்கவில்லை. அலுவல் மொழி என்பதனையடுத்து, பொது மொழி, தேசிய மொழி, தொடர்பு மொழி, இணைப்பு மொழி, பயிற்சி மொழி, அறிவு மொழி என அனைத்துக்குமான மொழி என்று ஏற்றிவைத்துத் திணித்துவிட முடியும் என எதிர்பார்க்கின்றனர்.

தேசியக் கல்விக் கொள்கையில், காரணியின்றிப் பொருந்தாத இடத்தில், கல்வியமைப்பின் நடுவப்புள்ளியாகச் சமக்கிருதம் செயல்படுமென்று வலியுறுத்தப்படுகிறது. இதனை அப்படியே ஒதுக்கிவிட்டுச் சென்றுவிட முடியாது. ஏறக்குறைய 138 கோடி மக்கள்தொகை உள்ள இந்திய ஒன்றியத்தில், 24,821 எண்ணிக்கையினர், அதாவது 0.002% மக்கள் மட்டுமே பேசுவதாகக் கூறப்படும் சமக்கிருத மொழிக்கு ரூ. 2345 கோடிகள் கொட்டிக் கொடுக்கப்படுகின்றன. ஆனால், ஏறக்குறைய ஏழு கோடி மக்கள் பேசும் தமிழ் மொழிக்கு ரூ. 167 கோடிகள் மட்டுமே பெயரளவுக்குத் தரப்படுகிறது.

இவ்வளவு தொகை ஒதுக்கியும், சமக்கிருதத்தை அறிவு மொழியாக வளர்த்தெடுக்க முடியவில்லை. இதற்கும் அடிப்படைகள் இல்லாமல் இல்லை.

ஆன்மீகத்தில் இருந்து அறிவியல் வரை, அறத்திலிருந்து அரசியல் வரை உலகில் உள்ள அனைத்தும் சமக்கிருதத்தில் இருப்பதாக சனாதனிகள் நம்புகின்றனர் அல்லது நம்பவைக்க நினைக்கின்றனர். அதனால், மேற்கொண்டு மேம்படுத்த ஏதும் இல்லையென்ற எண்ணத்தில் இருக்கலாம். பண்பாட்டு மொழியெனக் கற்பித்துக்கொண்டிருப்பதும், வழிபாட்டு மொழியெனக் காட்டிக்கொண்டிருப்பதும் போதுமானது எனவும் துணிந்திருக்கலாம்.

ஆனால், உண்மை வேறானது. பேசும் மொழியாக, பயன்பாட்டு மொழியாக, இல்லாத சமக்கிருதத்தை அறிவு மொழியாக்குவது என்பது, உயிரற்ற உடலுக்கு உணர்வூட்ட முயற்சிப்பதுதான். மெத்தப் படித்தோராகத் தங்களைக் கருதிக்கொள்ளும் சனாதனிகளுக்கு இவையெல்லாம் தெரியாதா அல்லது தெரிந்தும் நடத்தும் நாடகமா? இன உணர்வுகளை முன்வைத்துத் தங்களது மேனிலையை மொழி வழியாக உறுதிப்படுத்திக்கொள்ளும் முனைப்பில் இத்தகைய முன்மொழிவுகளை மேற்கொள்கின்றனர்.

ஆனால், களமும் காலமும் மாறிவிட்டதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. இதனால் ஏற்படும் இழப்புகளும் பின்னடைவுகளும் தேக்கத்தை ஏற்படுத்தி, நீண்ட கால முடக்கத்துக்கு வித்திடுகின்றன என்பதால்தான் தமிழகம் பொங்கி எழுகிறது.

படிப்பதால் பயனில்லாத இந்தி

உலகில் உள்ள எல்லா நாடுகளுக்கும், அறிவு மொழி ஒன்றினை ஏற்றுக்கொள்ளவேண்டிய அழுத்தம் இப்போது இருக்கிறது. அலுவல் மற்றும் தொடர்புக்கு அந்தந்த நாடுகளின் தேசிய மொழிகள் அல்லது தாய்மொழிகளாக விளங்குவன பயன்படுத்தப்பட்டாலும், அத்தகைய மொழிகள், அறிவு மொழிகளில் ஒன்றாக அமையாது போனால், அறிவுச் செல்வங்களைப் பெற வேறொரு மேம்பட்ட அறிவு மொழி இன்றியமையாததாகிறது. இதனை அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டுதான் பின்பற்றிவருகின்றன. இந்தி அல்லது சமக்கிருதத்தைத் திணிக்க நினைப்போருக்கு மட்டும்தான் இதில் குழப்பம்.

இந்தி பேசும் மாநிலங்களுடன் இந்தியில் தொடர்புகொள்ளும், ஒன்றிய அரசு, இந்தி பேசாத மாநிலங்களுடன் ஆங்கிலத்தில் தொடர்புகொள்ளும் நடைமுறை இன்னும் நீடிக்கிறது. அதாவது, அலுவல் மொழியாக ஆங்கிலம் இன்று வரை தொடர்கிறது.

இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழியாகச் சொல்லப்பட்டிருந்தாலும், அலுவல் மொழி என்ற அளவிலும் இந்தியால் முழுமையாக நடைமுறைக்கு வர முடியவில்லை என்பதையே இது காட்டுகிறது. ஆங்கிலமே பெரிதும் அலுவல் மொழியாக மட்டுமல்லாது இணைப்பு மொழியாகவும் வேறு மாற்றின்றித் தொடர்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.

பல தேசிய இனங்கள் வாழும் மொழிவழி மாநிலங்களின் ஒன்றியமாகத் திகழும் இந்தியாவை இணைக்க, அலுவல் மொழி ஒன்றினால் மட்டும் இயலாது என்னும் அடிப்படையை இன்று வரை இந்தியை முன்னிறுத்துவோர் எவரும் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை. அந்த அலுவல் மொழி, அறிவு மொழியாகவும் இருந்தால்தான் அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். ஏற்றுக்கொள்வது ஒருபுறம் இருக்கட்டும், அது பயன் தருவதாகவும் இருக்கவேண்டும். எதற்கும் பயனில்லாத இந்தி அல்லது வேறொரு இந்திய மொழியினைத் தாய் மொழி அல்லாதார் ஏன் படிக்கவேண்டும்? இந்த ஒரு வினாவுக்குத் தரும் காரணிகள் எதுவுமே பொருத்தமானதாகத் தெரியவில்லை.

இந்த நிலையில், அறிவு மொழியாக வளத்திலும், அலுவல் மொழியாகப் பயன்பாட்டிலும் ஆங்கிலம் தொடரும்போது, தாய் மொழிக்கு அப்பால், இந்தி என்ற மூன்றாவது மொழிக்கான வேண்டல் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்தி பேசாத மக்களின் அன்றாட வாழ்வில் இந்தி எத்தகையதொரு பங்களிப்பையும் எப்போதும் வழங்கவில்லை.

இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமென்றால், ஆங்கிலேயரது காலத்தில் அலுவல் மொழியாக ஆட்சியிலும், இணைப்பு மொழியாகப் பகிர்தலிலும், தொடர்பு மொழியாக ஊடகங்களிலும், வழக்காடு மொழியாக நீதிமன்றங்களிலும், அறிவு மொழியாகக் கல்வியிலும், முழுமையாக ஆங்கிலம் குடியேறிவிட்டது என்பதை மறுப்பார் எவரும் இல்லை.
அடிமைப்படுத்தியிருந்த நாட்டின் மொழியாக ஆங்கிலம் பார்க்கப்பட்டாலும், அடிமை நீக்கத்துக்கான பல்வேறு இன மக்களின் பகிர்தல்களுக்கும் புரிதல்களுக்கும் கலந்துரையாடல்களுக்கும் போராட்டங்களுக்கும் ஆங்கிலமே துணை நின்றது என்பதையும் மறைப்பதற்கில்லை.

இந்தப் பின்புலத்தில்தான் இந்தி அலுவல் மொழியாக அமைந்ததை நோக்கவேண்டும். அலுவல் மொழி என்ற அளவில் மட்டுமே ஆங்கிலத்துக்கு முழு மாற்றாக இந்தி அமைந்துவிட முடியாது என்பதில் இந்தி பேசும் மக்களுக்குத் தெளிவான புரிதல் இருக்கவில்லை.
தமிழ்நாடு மட்டுமல்லாது, இந்தி பேசாத பிற அனைத்து மாநிலங்களுக்கும் இது முற்றிலுமாகப் பொருந்தும்.

இருமொழிகளின் காலம் மாறவில்லை

அறிவுக்கு ஆங்கிலம், அலுவலுக்கு இந்தி என வேறுபடுத்திப் பயன்படுத்தும் வளர்ச்சி அல்லது சூழல் ஏற்படாதபோது, எதற்காக இந்த இரண்டு மொழிகளையும் பிறர் படிக்கவேண்டும் என்ற வினா எழுகிறது. அறிவு, அலுவல், தொடர்பு போன்ற அனைத்துக்கும் இப்போது ஆங்கிலமே பெரிதும் பயன்படுகிறது என்பதால்தான் இந்தி வேண்டியதில்லை என்ற முடிவு வருகிறது. இதன் விளைவுதான், தமிழ்நாட்டில் தாய்மொழியான தமிழுடன் ஆங்கிலம் மட்டும் போதும் என்னும் இயல்பான இரு மொழிக் கொள்கையின் தேர்வு அமைந்தது.

இந்தி பேசாத பிற மாநிலங்களுக்கு இத்தகைய நடைமுறை உண்மை தெரிந்திருந்தாலும், அரசியல் தெளிவும் புரிதலும் சமூகப் பார்வையும் இல்லாததால், தொடக்கத்தில் மும்மொழிக் கொள்கையை ஒப்புக்கொண்டுவிட்டன.

இந்த மாநிலங்களில் வாழும் அனைத்துப் பிரிவு மக்களும் இந்தியைப் பயன்படுத்தும் நிலையினை எட்டிவிட்டார்கள் என்று கூறிவிட முடியாதுதான். மிகச் சிலர் பேசுவதைப் புரிந்துகொள்ளவும் பேசவும் தெரிந்திருக்கலாம். எழுதவும் படிக்கவும் முடிகின்ற நிலை எல்லோருக்கும் ஏற்படவில்லை. பள்ளியில் படித்த பின் மறந்துவிடுகின்ற நிலையிலேயே பெரும்பாலானோர் நீடிக்கின்றனர் என்பதுதான் உண்மை. இப்போது சற்று விழிப்புணர்வு தோன்றியுள்ளதால், தமிழகத்தைப் போல அவர்களும் இந்தித் திணிப்பை எதிர்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்தித் திணிப்பை எதிர்க்கும் போராட்டங்களும் அவ்வப்போது பல மாநிலங்களில் எழுகின்றன.

இரு மொழிக் கொள்கையால் தமிழர்கள் இருட்டிலும் கிடக்கவில்லை; மும்மொழி பயில்வதால் மற்றோர் முன்னேற்றமும் காணவில்லை.

எனவே, 1960களின் இரு மொழிக் கொள்கை காலம் கடந்து பொருத்தமற்றுப் போய்விடவில்லை. இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால், மேலும் பொருந்துவதாக மெருகேறியிருக்கிறது. மாறாக, இன்றைய அறிவு-நுட்ப வளர்ச்சியில் மும்மொழிக் கொள்கையான இந்தித் திணிப்புத்தான் காலத்தைத் தவறவிட்டுப் பொருத்தமற்றதாக மாறிவிட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button