
தமிழ்நாட்டின் மரபு வழி முறையிலேயே விவாதம் முக்கிய இடத்தைக் கொண்டிருக்கிறது. அதற்கென்று பட்டிமன்றங்கள் மிகப் பழம் காலத்திலேயே நடத்தப்பட்டு இருப்பதற்கான வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. பட்டிமன்றத்தில் தங்கள் கருத்தைக் கூறி வாதிடவும் மறுப்போர் தனது தரவுகளைக் காட்டி மக்களிடம் பேசும் ஒரு வெளிப்படையான கருத்தியல் செயல்பாடாகும்.
அதிலும் குறிப்பாகப் பட்டிமன்றத்தில் பேசக்கூடியவர்கள் கொடியோடு வந்து வாதங்களை எடுத்து வைத்தார்கள் என்ற குறிப்புகளும் காணக்கிடக்கின்றன. அரசியல் கட்சிகள் துவங்குவதற்கு முன்பே கொடிகளோடு விவாதம் நடத்திய பெரும் பாரம்பரியம் தமிழ்நாட்டின் பாரம்பரியம் அதனால் தான் என்னவோ தொலைக்காட்சி அலைவரிசை முழுவதும் முக்கியத் தலைப்புகளில் நடைபெறும் விவாதங்கள் பெரும் பேசுபொருளாக மாறி வருகின்றன. மக்களின் சிந்தனையில் எது சரி எது சரியல்ல? என்பதை முடிவு செய்வதற்கு இதுபோன்ற விவாதக் களங்கள் தற்போதும் முக்கியப் பங்காற்றி வருகின்றன.
அனைவராலும் ரசிக்கப்படும் நீயா- நானா?
வாராவாரம் ஆரவாரமாக விவாதிக்கப்படும் விஜய் டிவி நிகழ்ச்சியின் தலைப்புதான் நீயா- நானா? விஜய் தொலைக்காட்சியில் பிரபல விவாத நிகழ்ச்சியான நீயா நானாவில் மும்மொழிக் கொள்கை தொடர்பான விவாதம் ஒளிபரப்பாக இருந்த நிலையில் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டு வேறு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இந்நிலையில் மும்மொழிக் கொள்கை தொடர்பான விவாதம் என்ற பெயரில் திமுக எழுதிய ஸ்கிரிப்ட்தான் அந்த நிகழ்ச்சி எனவும், அதில் கலந்து கொள்ள தன்னை அழைத்தும் அதில்தான் கலந்து கொள்ளவில்லை என எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று போட்டு உடைத்திருக்கிறார் பாஜக பிரமுகரான அலிசா அப்துல்லா!
தேசியக் கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழிக் கல்வி தொடர்பாக தமிழக அரசு பாஜக தலைமையிலான ஒன்றிய அரசுக்கு இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு நிதி தருவோம் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியது எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல மாறிவிட்டது.இதுவரை எந்த அரசாங்கமும் செய்யாத கொடுமைகளை ஒன்றிய பாஜக அரசு இப்போது அரங்கேற்றி வருகிறது.
இதுகுறித்த விவாதம் பார்வையாளர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பது நியாயம் தானே? கருத்து வலிமை உள்ளவர்கள் ஒருபோதும் இதைத் தடை செய்ய மாட்டார்கள்.
மும்மொழி எதிர் இருமொழி!
மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்தவர்களும், மும்மொழிக் கொள்கை எதிர்ப்பாளர்களும் கலந்து கொண்டு விவாதம் செய்த நிலையில் சமூக வலைதளங்களிலும் விளம்பரம் வெளியானதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு அந்தப் பதிவு நீக்கப்பட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகாமல் அதற்குப் பதிலாக வேறொரு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இது முழுக்க முழுக்க பாஜகவின் ஊடகங்கள் மீதான அழுத்தத்தின் காரணமாகவே அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்த விவாதத்தின் போது மும்மொழிக் கொள்கை மீது எழுப்பப்பட்ட அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதிலளிக்க இயலாமல் அவர்கள் இக்கட்டில் மாட்டியுள்ளனர். இருமொழிக் கொள்கைக்கான ஆதரவு வெகுமக்கள் மத்தியில் இயல்பான மொழியில் வெற்றிகரமாக அமைந்ததால்தான் சீப்பை ஒளித்து வைத்துவிட்டு திருமணத்தை நிறுத்திவிடும் முயற்சியாகத் தடை செய்துள்ளனர்.
கருத்துகளுக்குக் கடிவாளம் வெறுப்புப் பேச்சுக்கு வெண்சாமரம்!
ஒன்றிய ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் தமிழ்நாட்டைச் சார்ந்த எல்.முருகன் இதில் நேரடியாகத் தலையிட்டுத் தடை செய்திருக்கிறார் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனந்த விகடன் பத்திரிகையில் அமெரிக்காவில் இந்தியர்கள் கை விலங்கு இட்டு அவமானப்படுத்தி அனுப்பப்பட்டதைக் கேலிச்சித்திரமாக வரைந்து பிரதமரின் கைகளில் சங்கிலியால் கட்டப்பட்டு இருப்பதைப் போல வரைந்த காரணத்தால் அதனை தடை செய்ததை நாம் அறிவோம். எனவே, கருத்துச்சுதந்திரம் என்றாலே இவர்களுக்கு வேப்பங்காயாகக் கசக்கிறது. ஆனால், மறுபுறத்தில் வெறுப்புப் பேச்சின் ஊற்றுக் கண்ணாக அதன் தலைவர்களே இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக சிறுபான்மையினர் இஸ்லாமியர் வெறுப்புப் பிரச்சாரங்களை அவர்கள் மேற்கொள்ளும்போதெல்லாம் எந்தவிதக் கூச்ச நாச்சமுமின்றிப் பொய்களையும் வதந்திகளையும் அடித்து விடுவதே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள்.
கலைத்துறையில் கூட குறிப்பாக சினிமாவில் காஷ்மீர் பைல்ஸ், கேரளா பைல்ஸ் என்று வெறுப்பைச் சிலாகித்துப் பேசியதோடு மட்டுமல்லாது அதற்காக ஒன்றிய அரசும், பாஜக ஆளும் மாநில அரசாங்கங்களும் விடுமுறை விட்டு அந்தப் படங்களைப் பார்க்க வைத்ததும் இவர்களின் உண்மை முகத்தைக் கடந்த காலங்களில் வெளிப்படுத்திற்று. ஆச்சரியம் என்னவென்றால் இதற்குத் தலைமை தாங்குபவரே பிரதமர அமைச்சராக இருக்கிறார் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றும் உள்துறை அமைச்சராக இருக்கிறார் என்பதுதான் வேதனையிலும் வேதனை!
16 ஆண்டுகளாக தொடரும் நீயா நானா?
16 ஆண்டுகள் 500+ நிகழ்ச்சிகள் கடந்து வெற்றிகரமமாக நடைபோட்டுக்கொண்டிருக்கிறது நீயா நானா. இத்தனை வருடங்கள் கடந்து இன்றும் அதே ஸ்டைல், அதே நெறியாளர், அதே வரவேற்பு என மக்களை ஈர்த்துக்கொண்டிருக்கிறது. நீயா நானா நிகழ்ச்சி பிடிக்கும் விதவிதமான பேசு பொருளான தலைப்புகளைப் பிடிப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் வெற்றியின் ரகசியம். சாதி மறுப்பு திருமணம் அதற்கு எதிரானவர்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற விவாதத்தின் போது சாதிப் பற்றில் ஊறி இருந்த தந்தை அதற்காக வெட்கப்பட்டு தான் இன்றிலிருந்து அதிலிருந்து வெளியேறி விட்டேன் என்று சொல்லும் போது இது பல நிலைகளில் மனங்களையும் வென்றிருக்கிறது, மாற்றங்களையும் தந்திருக்கிறது.
இட ஒதுக்கீடு வேண்டும் – இட ஒதுக்கீடு வேண்டாம் என்ற தலைப்பில் நடத்திய நிகழ்ச்சி அரசு பள்ளி ஆசிரியர்கள் – தனியார் பள்ளி ஆசிரியர்கள், கிராமம் எதிர் நகரம், தமிழ்நாட்டின் மண்டல வாரியான மொழிப் பிரயோகங்கள் குறித்து விவாதம் என்பது உள்ளிட்ட பல தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்றிருக்கிறன.
தமிழ் பாய்ஸ் எதிர் நார்த் இந்தியன் கேர்ள்ஸ்
இதில், அந்தப் பக்கம் வட இந்தியப் பெண்கள் அழகாக தமிழ்ப் பாடல்கள் பாட, நம்மவர்கள் ‘துஜே தேக்கா தோயே’ என்று ஹிந்திப் பாடலைப் பாடியிருப்பார்கள். வடஇந்தியப் பெண்களுக்கு நம் ஆண்களிடம் ரொம்பப் பிடித்த குணம் எது என்று கேட்டால் அவர்கள் ஏமாற்ற மாட்டார்கள், அத்துடன் பெண் என்பதற்கான கிண்டல் தொணியில் பேச மாட்டார்கள் என்று சொல்லும் போது அனைவரும் அசந்து போவோம்.
நெறியாளர் கோபிநாத்
விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், தனியார் பண்பலை ஒன்றில் வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றுகிறார் கோபிநாத். இவர் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் பிறந்தவர். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். கோபிநாத் சிறந்த ஜனநாயகத் தன்மையோடு அதே நேரம் மோதல் ரசாபாசமாக ஆகிவிடாமல் மிக நளினமாக நெறிப்படுத்தும் விதம், கண்டிப்புடன் நடந்து கொள்ளும் விதம் என்பதெல்லாம் இந்நிகழ்ச்சியின் சிறப்பாக அமைந்துள்ளது.
தமிழ் நிகழ்ச்சித் தொகுப்பாளர் களில் தன்னுடைய தனித் தமிழ் மொழிநடைக்காகவும், தனிப்பாங்கிற் காகவும் இவர் மிகவும் அறியப்படுகிறார். இவர் தொகுத்து வழங்கும் சில முக்கியமான நிகழ்ச்சிகள்:
நீயா நானா?
விஜய் விருதுகள்
குற்றமும் பின்னணியும், நடந்தது என்ன?
உன்னால் முடியும் போன்றவையாகும்.
இருந்தும் இந்த நீயா நானா நிகழ்ச்சியின் மும்மொழி விவாதம் இப்போது தடை செய்யப்பட்டிருக்கிறது என்றால் அதற்கு என்ன காரணம்? கருத்துகளைக் கருத்துகளால் எதிர்கொள்ள முடியாதவர்கள் காலம் காலமாக இந்த வழியைத்தான் பின்பற்றுகிறார்கள் என்பதற்கு மீண்டும் ஓர் உதாரணம் இது!
கருத்துச் சுதந்திரத்தின் முக்கியத்துவம்
கருத்துச் சுதந்திரம், பொதுவாகச் சமுதாயத்திற்குப் பல்வேறு வகையான நன்மைகள் பயக்கும் உரிமையாக விளங்குகிறது. அரசியல் உரையாடல்களில் (அரசியல் சொற்பொழிவு), இது ஜனநாயகத்தை வளர்க்கும் ஒரு முக்கியக் கூறாகக் காணப்படுகிறது. ஒரு நாட்டில் குடிமக்கள் தங்கள் அரசை விமர்சிக்கவும் அரசியலில் தங்கள் குரலை எழுப்பவும், புதிய யோசனைகள் மற்றும் சீர்திருத்தங்களைப் பரிந்துரைக்கவும் உண்மையில் தகுதி பெறுவார்கள் என்றால், அந்தக் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில்தான் இது நிகழ முடியும்.
பேச்சு, எழுத்து, இசை, நாடகம், ஓவியம், நிகழ்த்துக் கலை, பல்லூடகம், நம்பிக்கைகள், இணையம் எனப் பல்வேறு வடிவங்களிலும் கட்டுப்பாடுகளின்றிக் கருத்துகளை ஆக்க, அறிய, வெளிப்படுத்த, பகிர ஆகியவற்றுக்கான சுதந்திரம் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரமாகும்.
சமூக மாற்றங்கள் அடைவதற்கும், நியாயத்தை நிலைநாட்டுவதற்கும், கருத்துச் சுதந்திரம் ஓர் அத்தியாவசிய உரிமையாகும். அடக்குமுறையால் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்த முடியாத மக்களுக்கு இது ஒரு குரலாகவும் அதாவது குரல் அற்றவர்களின் குரலாக இருக்கிறது.
சமூக ஆர்வலர்கள், மனித உரிமைப் போராளிகள், ஊடகத்துறைப் பணியாளர்கள் தங்கள் நிலையை வெளிப்படுத்தும் இச்சுதந்திரத்தை அதிகம் பயன்படுத்துகிறார்கள். அதுதான் நமது ஜனநாயகத்தின் மிக முக்கியக் கூறு. ஆனால், ஜனநாயகத்தை அழிப்பதற்கு முதலில் கருத்துச் சுதந்திரத்தின் குரள்வலையைத்தான் அறுப்பார்கள் என்பதற்கு பாஜக ஆட்சியின் தொடர்த் தாக்குதல்களே ஆதாரமாக உள்ளன. ஒரு போதும் கருத்துச் சுதந்திரத்தை அனுமதிக்க மாட்டார்கள். எனவே, என்ன விலை கொடுத்தேனும் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்க அணி திரள்வோம்! ஜனநாயகத்தைப் பலப்படுத்துவோம் மக்களாட்சி மாண்பினை வெற்றி பெறச் செய்வோம்!