
“தீவிரவாதம், ஆக்கிரமிப்பு, பலவந்தம் மற்றும் பிற கடவுள்களை அவமதிப்பது நம் நாட்டின் இயல்பில் இல்லை, அவை ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்று சென்ற டிசம்பர் மாதம் பேசியவர் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்.
அவர்களுக்கு உண்மை தெரிந்து தான் இருக்கிறது. ஆனால் அதைப் போற்றவில்லை. மாறாக மாற்றவே முயற்சிக்கிறார்கள்.
அண்மையில் பேசிய பாஜக தலைவர் காத்ரி சொன்னார்: “தனி நாடு கோரியவர்களில் பெரும் பகுதியினர் இங்கேயே இருந்தனர், ஆனால் இந்தியா சமூக நல்லிணக்கத்தைப் பேணி வருகிறது. ‘ஜெய் பீம், ஜெய் பீம்’ என்று பிரச்சாரம் செய்பவர்கள், இந்து மதம் பெரும்பான்மையாக இருப்பதால்தான் இந்த நாட்டில் அரசியலமைப்பும் சட்டத்தின் ஆட்சியும் நிலவுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.”
விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்க மறுத்து, பிரிட்டிஷ்காரனுக்கு ஆதரவாக நின்ற இந்தக் கேடுகெட்ட ஆர்.எஸ்.எஸ் – பிஜேபிக்கு, உயிர்ப்பலி கொடுத்து விடுதலைக்காகப் போராடிய பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களைப் பார்த்து கேள்வி கேட்க என்ன யோக்கியதை இருக்கிறது?
மேலும் ஜெய் பீம் என்று சொல்வது முஸ்லிம்களா? அவர்கள் ஒதுக்க நினைப்பது முஸ்லிம்களை மட்டும் அல்ல. ஒடுக்கப்பட்டவர்களுக்கான விடுதலையை முன்னெடுக்கும் எல்லோரையும்தான்.
இந்த ஆண்டு ஹோலி கொண்டாடப்பட்ட போது, உத்தரப்பிரதேசத்தில் மசூதிகள் எல்லாம் துணி கொண்டு மூடப்பட்டன. முஸ்லிம்கள் வழிபாடு நடத்தக் கூடாது, அவர்கள் வீட்டிலிருந்து தெருவுக்கே வரக்கூடாது என்று உத்திரப்பிரதேச முதல்வரே எச்சரித்தார்.
வீதியில் தொழுகை நடத்தக் கூடாது என்றார்கள், பிறகு மசூதியில் தொழக்கூடாது என்றார்கள், இப்போது வீடுகளுக்குள் கூட தொழுகை நடத்தினால், அது மற்ற மதத்தைச் சார்ந்தவர்களுக்குத் தொந்தரவாக இருக்கிறது என்று முஸ்லிம் வீடுகளுக்குள் ரவுடிகள் சென்று மிரட்டுகிறார்கள்!
மத்தியப் பிரதேசத்தின் தெருக்களில் ஊர்வலங்களும் பேரணிகளும் வன்முறைத் தளங்களாக மாறி வருகின்றன.
பாபர் மசூதி, மதுரா மசூதி, ஞானவாபி மசூதி ஆகியவற்றுக்கடுத்து, இப்போது அவுரங்கசீப்பின் கல்லறையை இடித்து அகற்ற வேண்டும் என்று மதவெறி கும்பல் அடுத்த இலக்கிற்குத் தாவியுள்ளது.
இந்த நெருப்பை விசிறி விடுவதற்காக அவர்கள் திரைப்பட வடிவத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். ‘சாவா’ (சிங்கக்குட்டி) என்ற திரைப்படம் வெளியானது. சத்ரபதி சிவாஜியின் மகனான சாம்பாஜி, முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்புடன் நடத்திய போரில் கொல்லப்பட்டதை இந்தத் திரைப்படம் விவரிக்கிறது.
அது அரசர்களுக்கிடையே நிலத்தைக் கைப்பற்றுவதற்காக நடத்தப்பட்ட யுத்தம். சாம்பாஜி படையில் முஸ்லிம்களும் இருந்தார்கள், அவுரங்கசீப் படையில் இந்துக்களும் இருந்தார்கள் என்ற உண்மையை மறைத்து விட்டு, ஏதோ இந்துக்களின் படைக்கும் முஸ்லிம்களின் படைக்கும் இடையே நடந்த போராக இது சித்தரிக்கப்படுகிறது. அவுரங்கசீப்புக்கு எதிரான வெறி திணிக்கப்படுகிறது.
நாக்பூர் 300 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ளது. இங்கு ஒருபோதும் வகுப்புவாத கலவரங்களைக் கண்டதில்லை. ஆர்.எஸ்.எஸ் தலைமை பீடம் இருக்கும் நாக்பூரில், மஹல் பகுதியில் உள்ள சிவாஜி சிலை அருகே விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள அமைப்பினர் 250 பேர் மார்ச் 17ம் நாள் திரண்டனர். அவர்கள் அவுரங்கசீப் சமாதியை அகற்ற வேண்டும் எனக் கோரி கோஷங்களை எழுப்பினர். அவுரங்கசீப்பின் உருவப்படம் கொண்ட போஸ்டர்களை எரித்தனர். இந்நிலையில் அந்தப் போராட்டத்தின் போது இஸ்லாமியர்களின் புனித நூல் எரிக்கப்பட்டதாக வதந்திகள் பரவின.
இது எதிர்த்தரப்புக்கு ஆத்திரமூட்டி, ஒரு கலகத்துக்கு வித்திடும் உள்நோக்கம் கொண்டது. இப்போது ஒரு காகிதத்தைத் தான் எரித்தோம் என்று கதை சொல்கிறார்கள்.
1986 ஆம் ஆண்டு அரசாணை என்று எழுதப்பட்ட காகிதத்தை எரித்ததற்காக கலைஞர், பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்டோரின் சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதை நாடறியும். வெறும் காகிதம்தான் என்று அப்போது விடவில்லை.
எதிர்பார்த்ததைப் போலவே முஸ்லிம்கள் வெகுண்டெழுந்தனர்.
சமாதியை அகற்றக் கோரி நாக்பூரின் சில பகுதிகளில் வன்முறை வெடித்தது. வன்முறையின் போது, பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன, கடைகள் சேதப்படுத்தப்பட்டன, காவல்துறையினர் மீது கற்கள் வீசப்பட்டன.
நாக்பூரைச் சொந்த ஊராகக் கொண்ட மகாராஷ்டிரா முதல்வர் ஃபட்னாவிஸ், சட்டப்பேரவையில் பேசிய மக்களிடையே கோபத்தைத் தூண்டியதற்கு ‘சாவா’ திரைப்படத்தைக் குற்றம்சாட்டினார்.
ஆனால், திட்டமிட்ட தாக்குதல் நடத்தியவர்கள் முஸ்லிம்கள்தான் எனும் மறைபொருளுடன், மோதல்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பாசிஸ்டுகள் முழு வேகத்துடன் களமிறங்கி விட்டனர். தடுக்க நினைப்பவர்கள் பிரிந்து நிற்கக் கூடாது.