ஆளுநரின் ஆத்திரமூட்டல் நடவடிக்கைக்கு கண்டனம்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கடும் கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு…
ஆளுநரின் ஆத்திரமூட்டல் நடவடிக்கைக்கு கண்டனம்
தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி தனது அதிகார எல்லையை தாண்டி தமிழ்நாட்டு மக்களை ஆத்திரமூட்டும் செயலில் தீவிரம் காட்டி வருகிறார்.
அரசியலமைப்பு சட்டத்தின்படி சட்டமன்றம், அமைச்சரவை, முதலமைச்சர் ஆலோசனைப்படி செயல்பட வேண்டிய ஆளுநர், மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சி முறைக்கு எதிரான அதிகார வர்க்க ஏதேச்சாதிகார முறையில் செயல்பட்டு வருவது தமிழ்நாட்டின் அமைதி நிலைக்கு குந்தகம் ஏற்படுத்தி வருகிறது.
இளநிலை மருத்துவம் பயில நீட் தேர்வு எழுதி, அதிக மதிப்பெண் பெற்று கல்லூரியில் சேர்ந்து விட்ட மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் ஆளுநர் மாளிகைக்கு அழைத்து கூட்டம் நடத்தி வருகிறார்.
இதன்படி இன்று (12.08 2023) நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோர்கள் “நீட்” தேர்வு எழுதுவது தொடர்பான சிரமங்களை தெரிவித்து, அதற்காக பல லட்சம் ரூபாய் செலவழிக்கும் கட்டாயம் ஏற்படுவதையும் அனுபவரீதியாக எடுத்துக் கூறி, “நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு கோரும் சட்ட மசோதா – 2021 செப்டம்பர் மாதம் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு தாங்கள் எப்போது ஒப்புதல் அளிப்பீர்கள் என வினா எழுப்பியுள்ளார்.
இந்தக் கேள்விக்கு முறையாக பதில் அளிக்காத ஆளுநர், “நீட்” தேர்விலில் இருந்து விலக்குக் கோரும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்திற்கு நான் ஒரு போதும் ஆதரித்துக் கையெழுத்து போட மாட்டேன்” என ஆணவத்தோடு பதிலளித்து, பெற்றோர்களை மிரட்டி அச்சுறுத்தி இருப்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது. ஜனநாயக முறைகளை நிராகரித்து செயல்படும் ஆளுநரின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த ஜனநாயக சக்திகள் ஒன்று திரண்டு போராட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது என மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்.
(படம் : நன்றி விகடன்)