
இந்தியாவில் 100 கோடி பேர் வாழ்க்கைத் தேவைகளுக்கு அச்சமின்றி செலவிடும் நிலையில் இல்லை என்பதை புளூம் வென்ட்சர்ஸ் ஆய்வறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. இந்தப் போக்கு நீடித்தால் என்ன ஆகும் என்பதையும் அந்த ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.
உயிரோடும் உயிர்ப்போடும் வாழ்வதற்காக மானுட சமூகம் போராடி முன்னேறி வந்திருக்கிறது. ஆனால், வாழ்வதற்கான தேவைகளுக்குகூட செலவிட முடியாமல் பெரும்பான்மை மக்கள் பரிதவிக்கும் சூழல் தற்போது நிலவுகிறது. இதனை அண்மையில் வெளியான ஆய்வறிக்கை உறுதி செய்துள்ளது. 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், 100 கோடிப் பேர் தங்களின் தேவைகளுக்கு அச்சமின்றி செலவிடும் நிலையில் இல்லை என்று புளூம் வென்ட்சர்ஸ் (Blume Ventures) முதலீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை கூறுகின்றது.
இந்திய மக்களில் 13 முதல் 14 கோடி பேர் வணிகச் சந்தை நிறுவனங்களின் நுகர்வோர்களாக இருக்கின்றனர். இந்தப் 14 கோடி பேரைக் கொண்ட சந்தையைத் தான் மதிப்புமிகுந்த சந்தையாக வணிக நிறுவனங்கள் கருதுகின்றன. இதனையடுத்து உள்ள 30 கோடி பேர் வளர்ந்துவரும் நுகர்வோர் என மதிப்பிடப்பட்டுள்ளனர். அதாவது சந்தையில் குவிந்துகிடக்கும் பொருட்களை வாங்கி தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள விரும்புகின்றனர்.
ஆனால், விரும்பும் வகையில் செலவிடும் நிலையில் அவர்கள் வருமானம் இல்லை என்பதால், மிகுந்த தயக்கத்துடன் செலவுகளைச் செய்கின்றனர். டிஜிட்டல் பரிமாற்றங்களின் வளர்ச்சி செலவுகளை செய்வதற்கான தூண்டுதல்களை அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளன.
இந்தியாவில் வசதி படைத்தவர்களிடமே மேலும் மேலும் செல்வம் சேர்கிறது. ஏற்கனவே பணக்காரர்களாக இருப்பவர்களே மேலும் பணம் படைத்தவர்களாக மாறுகின்றனர். புதிய செல்வந்தர்கள், பணக்காரர்கள் அதிகரிக்கவில்லை என்று இந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இதனால் இந்தியாவின் நுகர்வுச் சந்தை விரிவடைந்த அளவுக்கு நுகர்வோர் எண்ணிக்கை பெருகவில்லை. அதாவது இந்தியாவின் நுகர்வுச் சந்தை தனித்துவமான வழியில் விரிவடைந்துள்ளது.
வெகுமக்களுக்குப் பயன்படும் பொருட்களுக்குப் பதிலாக, இருமடங்கு விலை மதிப்பு கொண்ட பொருட்களே சந்தைக்கு வருகின்றன. இதனை ஊக்கப்படுத்தி வளர்த்தெடுக்கவே உற்பத்தி நிறுவனங்கள், பிராண்டுகள் முயற்சிக்கின்றன. இந்தச் சந்தையைத்தான் பிரீமியம் மார்க்கெட் என்று அழைக்கின்றனர்.
எளிதில் வாங்கக் கூடிய குறைந்த விலை வீடுகளின் விற்பனை 5 ஆண்டுகளுக்கு முன்பு மொத்த சந்தையில் 40 விழுக்காடாக இருந்தது. இந்த வீடுகளின் விற்பனை தற்போது வெறும் 18 விழுக்காடாகக் குறைந்துள்ளது. சந்தையில் பிராண்டட் பொருட்கள் அதிக அளவில் விற்பனையாகிக் கொண்டுள்ளன. அதேநேரத்தில், சந்தையில் குறைந்த விலைப்பொருட்களின் விற்பனைக்காக போராட வேண்டிய நிலை உள்ளது. இதனால் குறைந்த விலை விற்பனை நிறுவனங்களின் எண்ணிக்கை, சந்தை வளர்ச்சி அடையவில்லை.
பெருந்திரளான மக்களைக் குறிவைத்து செயல்படும் நிறுவனங்கள், பிராண்டுகள் சந்தையில் இழப்பை சந்திக்கின்றன. பிரீமியம் என்று கூறப்படும் வசதிபடைத்த நுகர்வோரைக் குறிவைக்கும் நிறுவனங்களே வளருகின்றன என்று இந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
நம் நாட்டில் ஏற்றத்தாழ்வான, சமச்சீரற்ற வளர்ச்சி அதிகரித்து வருகிறது. நாட்டின் மொத்த வருவாயில் முதல் 10 பணக்காரர்களுக்கு 57.7 விழுக்காடு வருமானம் சென்று விடுகிறது. இது 1990 ஆம் ஆண்டு 34 விழுக்காடாக இருந்தது.
நாட்டின் மொத்த வருவாயில் சரிபாதி மக்கள் பெற்றுக்கொண்டிருந்த 22.2 விழுக்காடு வருமானம், 15 விழுக்காடாக குறைந்துள்ளது. மக்களுடைய வாங்கும் சக்தியில் ஏற்பட்டுள்ள பின்னடைவை இது வெளிப்படுத்துகிறது. இதனால் மக்களுடைய சேமிப்புகள் கரைந்து போவதுடன், கடன் சுமைகள் அதிகரிக்கின்றன. எளிமையாகச் சொன்னால் நடுத்தர வர்க்க மக்கள் நசுக்கப்படுகின்றனர். கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அவர்களின் சேமிப்புகள் கரைந்துள்ளன.
வருமான வரி செலுத்துபவர்களில், 50 விழுக்காட்டினரின் வருமானம் கடந்த பத்து ஆண்டுகளாக அதிகரிக்கவில்லை. பணவீக்கத்துடன் இதனை ஒப்பிட்டால், அவர்களின் வருமானம் பாதியாகக் குறைந்துள்ளது.
அதானி, அம்பானிகளின் பணப்பையை நிரப்புவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ள அரசும் அதன் கொள்கைகளும் இந்தப் போக்கை அதிகரிக்கவே செய்யும். பொருளாதார வளர்ச்சி என்பது கார்ப்பரேட் உற்பத்தி, கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒப்பந்தம், அவர்களுக்கு பெரும் வசதிகளை செய்து கொடுப்பது என்பதாகவே இருந்து வருகிறது. ஆனால், இந்த வளர்ச்சி மிகப்பெரும்பான்மையான மக்களின் முன்னேற்றத்துக்கு உதவவில்லை. சமூகத்தில், மக்கள் வாழ்க்கையில், பொருளாதாரத்தில் வளர்ச்சியைக் கொண்டுவரவில்லை என்று ஆய்வறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள இந்தப் போக்கு “நாட்டின் பொருளாதார வளர்ச்சிப் பாதையை திசைதிருப்பும் ஆற்றலைக் கொண்டுள்ளது” என்று இந்த ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.