5 ஆயிரம் ஆண்டு பழமையான கற்கால கருவிகள் பண்ருட்டி அருகே கண்டுபிடிப்பு
பண்ருட்டி, பிப். 3- தென்பெண்ணையாற்று பகுதியில் கண்டறியப்பட்ட புதிய கற்கால கருவி சுமார் 5,000 ஆண்டுகள் பழமை யானதாகும். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உளுந்தாம்பட்டு மற்றும் என திரிமங்கலம் கிராமத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மேற்புற கள ஆய்வு மேற்கொண்டார் அப்போது புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகள் மற்றும் கீறல் குறியீடு ஓடுகள் ஆகியவற்றை கண்டுபிடித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இங்கு கண்டெடுக்கப்பட்ட புதிய கற்கால கைக்கோடாரியின் நீளம் 8 செ.மீ., அகலம் 3.7 செ.மீ., மற்றொரு கருவியின் நீளம் 4 செ.மீ., அக லம் 3.5 செ.மீ., மற்ற இரண்டு கருவி களும் உடைந்த துண்டுகளாக கிடைத்துள்ளன. கருங்கல்லால் ஆன இதை நன்கு தேய்த்து வழுவழுப்பாக்கி மெருகேற்றி உள்ளனர், புதிய கற்கால காலம் கி.மு. 3000 முதல் கி.மு. 1000 வரையிலானது. மனித குலத்தின் தொன்மை வர லாற்றை பழைய கற்காலம், இடைக் கற்காலம், புதிய கற்காலம், உலொக காலம் என வகைப்படுத்தலாம், நமக்கு கிடைத்த இக்கருவி புதிய கற்காலத்தைச் சேர்ந்த கை கோடாரியாகும். பழைய கற்காலத்தில் மனிதன் உணவைத்தேடி அலைந்து நிலையான இருப்பிடம் இன்றி வாழ்ந்தான், புதிய கற்காலத்தில் மனிதன் தனக்கென ஒரு நிலையான வாழ்விடத்தை அமைத்துக்கொண்டு தனக்கு தேவையான உணவை தானே உற்பத்தி செய்து கொண்டு அதில் வெற்றியும் பெற்றான், இக்காலகட்டத்தில் வழுவழுப்பான கற்கருவிகள் மற்றும் சக்கரத்தால் செய்யப்பட்ட மட்பாண்டங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி உள்ளான். புதிய கற்கால கருவிகள் மனி தனின் விலங்கு வேட்டைக்கும், கிழங்கு போன்ற இயற்கை உணவு களை தோண்டி எடுப்பதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. தென்பெண்ணையாற்று பகுதியில் கண்டறியப்பட்ட புதிய கற்கால கருவி சுமார் 5,000 ஆண்டுகள் பழமையானது ஆகும், மேலும் இரும்புக் கழிவுகள் இங்கு கிடைத்துள்ளது. இரும்பு சார்ந்த பொருட்கள் கிடைத்துள்ளதால் இரும்பை உருக்கி பயன்படுத்தவும் அறிந்திருந்தனர் அக்கால மக்கள் என அறிய முடிகிறது இதுபோன்ற புதிய கற்கால ஆயுதங்கள் தமிழ்நாட்டில் மயிலாடும்பாறை, மாங்குடி, பையம்பள்ளி ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.