25.10.2022 முதல் உள்ளாட்சி தூய்மை பணியாளர்கள் மீண்டும் காலவரையற்ற வேலை நிறுத்தம் : தமிழ்நாடு உள்ளாட்சி துறை பணியாளர் சம்மேளனம் ( ஏஐடியுசி) முழு ஆதரவு
கோவை மாவட்டத்தில் நடைபெற்ற மகத்தான நான்கு நாட்கள் வேலை நிறுத்ததைத் தொடர்ந்து மாநகர மேயர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், உள்ளாட்சி தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்குதல், அது வரை அரசாணை 62 இன் படி குறைந்த பட்ச ஊதியம் வழங்குதல், சட்டப்படி போனஸ் வழங்குதல் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க ஒபபுக்கொள்ளப்பட்டது. இதனை ஏற்று வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது.
ஆனால், ஏற்றுக்கொண்டவாறு மாமன்ற தீர்மானம் நிறைவேற்றாமல் ஒரு கண்துடைப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை தொழிலாளர்கள், மற்றும் சங்கங்கள் ஏற்கவில்லை. இது ஏமாற்றம் செயல் என்று கருதுகின்றனர். அதனால், 25.10.2022 முதல் மீண்டும் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு உள்ளாட்சி துறை பணியாளர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ம. இராதாகிருஷ்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு பின்வருமாறு:
கோவை தொழிலாளர்கள் கோரிக்கைகளும், போராட்டமும் தமிழ்நாட்டின் அனைத்து உள்ளாட்சி தூய்மை பணியாளர்கள் உட்பட அனைவருக்குமானது. போராடும் தொழிலாளர்கள் உடன் நிற்பது நமது கடமையாகும். எனவே,
தமிழ்நாடு அரசே! கோவை மாவட்டத்தில் போராடும் உள்ளாட்சி தொழிலாளர்கள் கோரிக்கைகள் மீது உடனே தலையிட்டு தீர்வு செய்!
உள்ளாட்சி தூய்மை பணியாளர்கள் கோரிக்கைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு செய்யப்படும் என்ற தேர்தல் அறிக்கை வாக்குறுதியை நிறைவேற்று!
என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் தொடங்கும் 25.10.2022 அன்று ஏஐடியுசி இணைப்பு சங்கங்கள் சக்திமிக்க ஆதரவு ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.