தமிழகம்

2023 மே மாதம் 30 புதுடெல்லியில் ‘மாபெரும் ஆர்ப்பாட்டம்’ ! – தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் அறிவிப்பு

இந்த ஆண்டு மே மாதம் 30 ஆம் தேதி புதுடெல்லியில் மகா தர்ணா போராட்டம் நடத்த இருப்பதாக தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் நா பெரியசாமி சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆதரவாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது பின்வருமாறு:

அன்புமிக்க தோழர்களே, வணக்கம்!

இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மத்திய நிர்வாகக் குழுக் கூட்டம் கடந்த பிப்ரவரி 23, 24 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற செய்தியை அறிவீர்கள். இந்தக் கூட்டத்தில் பாஜக ஒன்றிய அரசின் விவசாயத் தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் குறித்து விவாதித்து சில இயக்க நடவடிக்கைகளுக்கு திட்மிடபட்டுள்ளது.

அதில் முக்கியமானதும், முதன்மையானதுமானதும் 2023 மே 30 ஆம் தேதி ஒன்றியத் தலைநகர் புதுடெல்லியில் நடைபெறும் “மகா தர்ணா” போராட்டம்…

ஆம் தோழர்களே,

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நமது மூத்த தலைமுறைத் தொழிலாளர்கள் போராடியதன் காரணமாகவும், 2004 ஆம் ஆண்டில், இடதுசாரி கட்சிகள் அரசியல் அதிகாரத்தில் தலையிட்டு நிர்பந்திக்கும், அழுத்தம் கொடுக்கும் வலுவுடன் திகழ்ந்ததும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் (2005 செப்டம்பர் 5) நிறைவேற வழிவகுத்தது.

இந்திய ஒன்றியம் முழுவதும் உள்ள, அனைத்து மாநிலங்களிலும் ஊரகப் பகுதிகளில் வாழ்ந்து வரும் உழைக்கும் மக்கள் குடும்பங்கள் ஆண்டுக்கு நூறு நாள் வேலை பெறுவதற்கு சட்டபூர்வு உரிமை பெறுவதில் வெற்றி பெற்றன. இன்று இச்சட்டத்தின் மூலம் சுமார் 15 கோடி குடும்பங்கள் ஆண்டுக்கு 100 நாள் சட்டபூர்வமாக வேலை பெறும் உரிமை பெற்றுள்ளன. இதன் மூலம் சுமார் 25 கோடி ஆண், பெண் தொழிலாளர்கள் பயன் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாத்மாக காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் நாட்டின் சுயசார்பு கொள்கையை வலிமைப் படுத்தும். உடல் உழைப்புத் தொழிலாளர் வாழ்வாதரத்தை உறுதிப்படுத்த உதவி வருகிறது.

இத்திட்டத்தை 2006 பிப்ரவரி 2 ஆம் தேதி அறிமுகப்படுத்தும் போது, 25 கோடி தொழிலாளர்களுக்கு, 15 கோடி குடும்பங்களுக்கு ஆண்டு தோறும் 100 நாள் வேலை எனில் அதற்கு பெருமளவில் நிதியொதுக்கம் செய்ய வேண்டும், அதற்கு அரசின் வரவு – செலவில் பற்றாக்குறையும், கடனும் அதிகரித்து வரும் போது, அரசு எப்படி நிதிதிரட்டும் ? நிதிக்கு என்ன வழி? என்ற வினாக்கள் எழுப்பப்பட்டன.

அன்றைய பிரதமர் திரு டாக்டர் மன்மோகன் சிங் “நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் இத்திட்டத்திற்கு நிதி ஒரு பிரச்சினையே அல்ல. அதற்கு எவ்வளவு நிதி தேவைப்பட்டாலும் அதனை ஒதுக்கீடு செய்ய முடியும்” என்று தெரிவித்தார். 2006 முதல் 2014 வரை அவர் நிதி ஒதுக்கீடு செய்வதில் இறுக்கமாக இருந்த போதும். திட்டப் பணிகள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்வதில் கவனம் செலுத்தி வந்தார்.

ஆனால், 2014 ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் அதிகாரத்தை கைப்பற்றிய பாஜக ஒன்றிய ஆட்சியில் அமர்ந்தது. திரு நரேந்திர மோடி பிரதமரானார்.

இதன் பிறகு மகாத்மாக காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை சிதைத்து, சீர்குலைக்கும் வேலைகள் தொடங்கின. அது படிப்படியாக அதிகரித்து இன்று, அத்திட்டத்தை அடியோடு அழித்து விடும் தீவிரத் தாக்குதலை நடத்தியுள்ளது.

கடந்த பிப்ரவரி 01 ஆம் தேதி, நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசின் நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நிதிநிலை தாக்கல் செய்தார். இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்திற்கு ரூ 60 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

கடந்த 2021 – 22 ஆம் நிதியாண்டில் 1 லட்சத்துக்கு 11 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்கும் கணக்கோடு ஒப்பிட்டால் 50 சதவீதம் வெட்டிக் குறைக்கப் பட்டிருக்கிறது.

பாஜக ஒன்றிய அரசின் நிதிக் குறைப்பு. ஊரகப் பகுதி உழைக்கும் மக்களின் வேலை பெறும் உரிமையை பறிக்கும் வஞ்சக செயலாகும்.

ஒன்றிய அரசின் வஞ்சகச் செயலை கண்டித்தும் எதிர்த்தும் வரும் 30.05. 2023 ஆம் தேதி டெல்லியில் உள்ள ஜந்தர் – மந்தர் பகுதியில் மகா தர்ணா (மாபெரும் ஆர்ப்பாட்டம்) நடைபெறுகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க தமிழ்நாட்டில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க தயராகி வருகிறார்கள்.

அண்மையில் திருவாரூர் மாவட்டத்தில் நடந்த சங்கத்தின் மாவட்டக் குழு மற்றும் இடைக்குழுக் கூட்டங்களில் டெல்லி தர்ணா குறித்து பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதுவரை 100 க்கும் மேற்பட்டோர் ரயில் முன்பதிவு செய்துள்ளனர் என்ற மகிழ்ச்சியான, ஊக்கமூட்டும் செய்தியை தோழர் அ பாஸ்கர் தெரிவித்தார்.

ஆமாம், தங்கள் மாவட்டத்திலும் தயாரிப்புப் பணிகள் வேகமாக நடைபெற்று தானே வருகிறது. முன்னேறுங்கள், முன்பதிவு செய்ய முந்துங்கள்.

பாஜக ஒன்றிய அரசை அகற்றுவோம்! அன்ளை நாட்டைப் பாதுகாப்போம்!

வேலை பெறுவதை அடிப்படை உரிமையாக்கப் போராடுவோம்!

புரட்சிகர வாழ்த்துக்களுடன்!

தோழமையுள்ள,
நா பெரியசாமி
பொதுச் செயலாளர்
தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம்.
20.03. 2023

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button