1908 பம்பாய் பொது வேலைநிறுத்தம்
ஏஐடியுசி: எழுச்சியின் வரலாறு -8
வடஇந்தியப் பகுதிகளிலும் தொழிலாளர் ஒற்றுமையும், போராட்டங்களும் வேர்பிடித்து வளர்ந்தன. இந்திய பர்மா ரயிலவே தொழிலாளர் சங்கம், கல்கத்தாவில் அச்சுத் தொழிலாளர் சங்கம், 1906ல் பம்பாய், கல்கத்தாவில் தபால் தொழிலாளர் சங்கம் ஆகியவை உருவாகி வளர்ந்தன. இவற்றில் எல்லாம் வேலைநிறுத்தங்களும் அடிக்கடி நடந்தன. இன்னொரு பக்கம் விடுதலைப் போராட்டமும் அனல் வீசிக் கொண்டிருந்தது. இயல்பாகவே தேச விடுதலை இயக்கத்துக்கும், தொழிலாளர் இயக்கத்துக்கும் இடையில் நெருக்கமான பிணைப்பு ஏற்பட்டது.
தொழிலாளர் இயக்கத்துக்கு பாலகங்காதர திலகர் பெரிதும் உதவி வந்தார்.
திலகர் மீது ஜூலை 1908ல் ராஜத்துரோகக் குற்றம் சுமத்தி பிரிட்டிஷ் அரசு கைது செய்தது. முன்னர் சொன்னது போல, 6 ஆண்டு கடுங்காவல் தண்டனை அளித்தது.
அரசியல் உணர்வு பெற்ற வளர்ந்து வந்த தொழிலாளி வர்க்கம், கைதுக்கு எதிராய் போராட்டத்தில் இறங்கியது. ஒட்டுமொத்த பம்பாயும் முழுமையாக ஸ்தம்பித்தது. சாலைகள் வெறிச்சோடின.
போலீஸ் போதாதென பிரிட்டிஷ் அரசு துணை ராணுவப் படையை வேறு களத்தில் இறக்கியது. ஓர் அரசியல் உணர்வுடன் எல்லாத் தொழில்களிலும் உள்ள தொழிலாளர்கள் வேலைநிறுத்த ஆயுதம் ஏந்தினர். கடைக்காரர்கள், மத்திய தர வர்க்கத்தினரும் போராட்டங்களில் களமிறங்கினர்.
1908 ஜூலை 23 முதல் ஆறு நாட்கள் வேலைநிறுத்தம் நடைபெற்றது. போலீஸோடும், ராணுவத்தோடும் தொழிலாளர்கள் மோதினர். துப்பாக்கிச்சூட்டில் 16 பேர் இறந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுக்கு ஆளாகினர்.
இது தோழர் லெனினை எட்டியது.
“இந்திய ஜனநாயகவாதி மீது, பிரிட்டிஷ் நரிகள் வழங்கிய இழிபுகழ் தண்டனையை எதிர்த்து தெருக்களில் போராட்டங்கள் நடக்கின்றன. விடுதலை வந்துவிடும் என்ற முழு நம்பிக்கையோடு, ஒவ்வொரு காலையும் மலர்கிறது. உணர்வு கொண்ட பெருந்திரள் அரசியல் போராட்டத்துக்கு, இந்தியத் தொழிலாளி வர்க்கம் தயாராகிவிட்டது”
என்று லெனின் எழுதினார்.
இந்த வேலைநிறுத்தத்திற்கு முன்பு வ.உ.சி கைதை எதிர்த்து நடந்த அரசியல் பொது வேலை நிறுத்தம், லெனின் காதுகளுக்கு எட்டாமல் போயிருக்கலாம். ஆனால் இன்று வரை வரலாற்று நூல்களில், தென்தமிழக அரசியல் பொது வேலைநிறுத்தத்தைப் புறக்கணித்து, பம்பாய்க்கே முதலிடம் வழங்கப்பட்டு வருகிறது.
(இன்னும் வரும்)
கட்டுரையாளர்:
டி.எம்.மூர்த்தி
தேசிய செயலாளர், ஏஐடியுசி
ஆசிரியர், ஜனசக்தி