![](https://www.janasakthi.in/wp-content/uploads/2025/02/தலையங்கம்-Thambnail-780x470.jpg)
அம்பேத்கரைப் பற்றி அமித்ஷா நாடாளுமன்றத்தில் அவதூறு பேசிய 2024 டிசம்பர் 17ஆம் தேதி. கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டு, வெளிநடப்பு செய்த நேரம்.
அப்போது, ஒன்றிய அரசின் நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் ராய் சவுத்ரி, இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளரின்(சிஏஜி) 14வது அறிக்கையை ஓசைப்படாமல் நாடாளுமன்றத்தில் வைத்தார். அது யார் கவனத்திலும் படவில்லை. ஊடகங்களும் உடனடியாக அதைப்பற்றி பேசவில்லை.
அது 230 பக்கங்களைக் கொண்ட அறிக்கை. கார்ப்பரேட்டுகளுக்கும், உயர் வருமானம் கொண்ட பெருந்தனக்காரர்களுக்கும் விதிக்கப்பட்ட வருமான வரி நிலுவைத் தொகைகள் அதிகரித்துக் கொண்டே செல்வது பற்றிய அதிர்ச்சியூட்டும் விவரங்களை அந்த அறிக்கை எடுத்துக் கூறியிருக்கிறது. ரூ19.35 லட்சம் கோடி ரூபாயை வசூலிக்க அரசு தவறி உள்ளது!
நவம்பர் 2020 முதல் ஜனவரி 2023 வரை, உயர் வருவாய் நபர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட வருமான வரித்துறை அதனை வசூலித்து, மீட்டெடுப்பது தொடர்பாக, வருமான வரி துறையின் செயல் திறனை இரண்டு கட்டங்களாக சிஏஜி தணிக்கை செய்தது.
முதலாவதாக, கார்ப்பரேட்டுகள் வைத்துள்ள வருமானவரி பாக்கி, ஒட்டுமொத்தமாக வசூலிக்கப்பட்டதை விட அதிகமாக இருக்கிறது. இரண்டாவதாக ‘மீட்டெடுப்பது கடினம்‘ என்று துறை வகைப்படுத்திய நிலுவைத் தொகை அந்த ஆண்டுகளில் கணக்கிடப்பட்ட மொத்த நிலுவைத் தொகையில் 97%க்கும் அதிகமாக இருந்தது.
தணிக்கை தொடங்குவதற்கு முன்பு, பல ஆண்டுகளாக ஒன்றிய நிதி அமைச்சகத்தின் வரவு குறித்த தரவுகளை பகுப்பாய்வு செய்ததன் மூலம் சிஏஜி இந்தப் போக்கைக் கண்டறிந்ததாகத் தெரிகிறது.
உதாரணமாக, 2016- 17ல், வசூலிக்கப்பட்ட மொத்த வருமான வரி மற்றும் கார்ப்பரேட் வரி ரூபாய் 8.5 லட்சம் கோடி ஆகும். ஆனால் வசூல் ஆகாத தொகை ரூபாய் 10.44 லட்சம் கோடி! இதில் ரூ.10.3 லட்சம் கோடி ‘மீட்டெடுக்க முடியாத தொகை’ என்று வருமான வரித்துறை கூறிவிட்டது!
அதுவே 2021 & -22ல், வசூலித்த தொகை ரூ.14.12 லட்சம் கோடி.ஆனால் வசூலிக்கப்படாத தொகை ரூ.19.35 லட்சம் கோடி! இவை பற்றி மிக விரிவாக அட்டவணைகளோடு அறிக்கை விவரங்களை தந்துள்ளது.
அதோடு மட்டுமின்றி, நிலுவை வைத்துள்ள நிறுவனங்களைப் பற்றிய தரவுகளை தணிக்கைக்கு கோரிய போது, வருமான வரித்துறை சரியாக ஒத்துழைக்கவில்லை என்பதையும் சுட்டி காட்டி இருக்கிறது.
ரூ. 7.59 லட்சம் கோடி நிலுவை வைத்துள்ள 18,870 நிறுவனங்களைப் பற்றிய விபரங்களை கோரிய போது, 10,896 நிறுவனங்களின் விவரங்களை மட்டுமே கொடுத்தது என்றும், வருமானவரித்துறை தராத 8,080 நிறுவனங்கள் தான் ரூ.6 லட்சம் கோடி வரை பாக்கி வைத்துள்ளன என்றும் அறிக்கை கூறுகிறது.
வருமான வரி விதித்த பின்பு, அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் நிறுவனங்கள், விதிக்கப்பட்ட வரியில் 15 முதல் 20% கட்டிய பின்பு தான் மேல்முறையீடு செய்ய முடியும். மேல்முறையீடு செய்த 3400 நிறுவனங்களில், 382 மட்டும்தான் இந்த தொகையை கட்டியுள்ளன.
மற்றவர்களிடமிருந்தும் வருமான வரித்துறை சட்டப்படியான தொகையை வசூலித்திருக்க வேண்டும், அல்லது தொகை கட்டாததால் மேல்முறையீடு செல்லாது என்று வாதிட்டு இருக்க வேண்டும். இரண்டையுமே செய்யவில்லை!
மேல் முறையீடும் செய்யவில்லை, நீதிமன்ற தடையும் தரவில்லை என்ற நிலையில் உள்ள 3.32 லட்சம் கோடி ரூபாயை வசூலிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதே நேரத்தில் மாத ஊதியம் பெறும் ஊழியர்களிடம் சரியான வரித்தொகை சம்பளத்திலேயே பிடிக்கப்படுகிறது. இவர்களுக்கு சம்பளம் இல்லாமல், வங்கி வைப்புத் தொகை போன்றவற்றிலிருந்து வட்டி வரும் என்பதால், முன்கூட்டியே ‘அட்வான்ஸ் வரி’ வேறு வசூலிக்கப்படுகிறது. ஆனால் முதலாளிகள் கட்டாமல் விட்டால், ‘மீட்டெடுக்க முடியாத தொகை’ என்று வருமான வரித்துறை அவர்களுக்கு ஒத்துழைக்கிறது.
சரியாக வசூலிக்கப்படாததால், வருவாய் குறைவு என காரணம் காட்டி கல்வி, மருத்துவம், விவசாயிகளுக்கான மானியங்கள், பெண்கள் குழந்தைகள் நலம், கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்டவற்றுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு குறைக்கப்படுகிறது.
பட்ஜெட் யானை பின்னால் வருகிறது. அதன் ஊழல் மணியோசை முன்பாகவே வந்து விட்டது!