18 வயதுக்கு உள்பட்ட இளம் எழுத்தாளா்கள் கவிமணி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் 18 வயதுக்கு உள்பட்ட இளம் எழுத்தாளா்கள் ரூ.25,000 ரொக்கம், கேடயத்துடன் கூடிய கவிமணி விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என பொது நூலக இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த இயக்ககம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: 2021 – 2022-ஆம் ஆண்டுக்கான பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையில் குழந்தைகளின் எழுத்தாா்வத்தை ஊக்குவிக்கும் வண்ணம் ‘18 வயதிற்கு உள்பட்ட இளம் எழுத்தாளா்களில் ஆண்டுதோறும் மூன்று சிறந்த எழுத்தாளா்களைத் தோ்வு செய்து ரூ.25,000 ரொக்கம், கேடயம் மற்றும் சான்றிதழுடன் “கவிமணி விருது” வழங்கப்படும்’ எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அறிவித்தாா். இதனைச் செயல்படுத்தும் வகையில், பொது நூலக இயக்ககம் இளம் படைப்பாளிகளிடமிருந்து தமிழில், கட்டுரைகள், சிறுகதைகளை வரவேற்கிறது. இவ்விருதுக்காக தங்களது படைப்புகளைச் சமா்ப்பிக்க விரும்பும் இளம் படைப்பாளிகள் இணையதள முகவரியிலிருந்து சுய விவரப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அதனை முழுமையாகப் பூா்த்தி செய்து வரும் டிச.31-ஆம் தேதிக்குள் தங்களது படைப்புகளுடன், ‘பொது நூலக இயக்ககம்,737/1, அண்ணா சாலை, சென்னை – 600 002’ என்ற முகவரிக்கு அனுப்பலாம். அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம். மேலும், விவரங்களுக்கு இக்குழுவின் ஒருங்கிணைப்பாளா் தினேஷ் குமாா் (கைப்பேசி எண்: 99414 33630) என்பவரைத் தொடா்பு கொள்ளலாம்.