16ஆம் நூற்றாண்டுக்குப் பிறகான பௌத்தம் அடையாள அரசியலே!
எஸ்.தோதாத்ரி
இந்தியாவில் மிக முக்கியமான மதங்களில் ஒன்று பௌத்தம். சமணம் தோன்றிய அதே காலத்தில் உருவானது பௌத்தம் ஆகும். ஒரு காலத்தில் நமது நாட்டில் செல்வாக்கு மிகுந்த மதமாக பௌத்தம் இருந்தது. இதற்கு அரசர்களது ஆதரவு உண்டு. அசோகர், கனிஷ்கர், ஹர்ஷர், சாளுக்கியர்கள், களப்பிரர்கள் ஆகியோர் இதனை ஆதரித்தனர்.
புத்தர் காலத்தில் மௌரியப் பேரரசானது பல இனக்குழு சமுதாயங்களை அழித்து அடிமைப்படுத்தியது. அடிமைச் சமுதாயம் வேகமாக வளர்ந்து கொண்டிருந்த காலம் புத்தரது காலம். இதனால் மக்கள் படும் துன்பங்களைக் கண்டு இதனை நீக்குவதற்கு ஒரு வழி வேண்டும் என்று புத்தர் கருதினார். இதற்கு வேத, உபநிடதங்கள் சரியான பதிலை அளிக்கவில்லை. எனவே, புத்தர் வேதங்களை மறுத்தார். அவர்கள் கூறும் கடவுளையும் மறுத்தார். இதற்கு மாற்றாக அவர் இந்த துன்பங்களுக்குக் காரணம் ஆசை என்று கூறினார். ஆசையை நீக்கிவிட்டால் இந்தத் துன்பங்கள் மறைந்துவிடும் என்பது அவரது வாதம்.
இன்றைக்கு சில மார்க்சியவாதிகள் இந்த ஆசைதான் வர்க்க முரண்பாடு என்று மார்க்ஸ் கூறியதாகவும், இதற்கும் ஒரு படி மேலே சென்று மார்க்ஸ் கூறிய எல்லாவற்றையும் புத்தர் ஏற்கனவே கூறி விட்டார் என்றும் சொல்லி, மார்க்சியத்தை ஒரு பெட்டிக்குள் அடைத்து பௌத்தம் என்ற பூட்டை போட்டு பூட்டி விடுகிறார்கள்.
மற்ற மதத் தத்துவங்களைப் போன்று பௌத்தத்தை விளக்குவது சற்று கடினமான காரியமாகும். ஏனென்றால் புத்தர் எதையும் விவரமாக கூறவில்லை. அவரிடம் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு அவர் மவுனம் சாதித்தார்.
புத்தர் மறைந்து சுமார் 200 ஆண்டுகளுக்கு பின்னர் அவரது சீடர்கள் புத்த மதத்தை முறைப்படுத்தத் தொடங்கினர். இதன் விளைவாக புத்த மதத்தில் 18 பிரிவுகள் தோன்றின. ஒவ்வொரு பிரிவிலும் தங்களது கொள்கைதான் சரியானது என்று வாதாடினர். இதன் விளைவாக, பௌத்தம் என்ற தத்துவத்தில் முன்னுக்குப்பின் முரணாக கருத்துக்கள் தோன்றின. எவ்வாறு இருப்பினும் பௌத்த தத்துவம் ஒரு கருத்து முதல்வாத தத்துவம் என்று நாம் உறுதியாகக் கூறலாம்.
பௌத்தத்தின் சிறப்பான அம்சம் அது இயங்கியல் பற்றி அதிகம் பேசுகிறது. ஆனால் இந்த இயங்கியல் மதம் சார்ந்த ஒன்று; பொருள் சார்ந்தது அல்ல.
எல்லா தத்துவங்களையும் போல பௌத்தமும் பிரமாணங்களைப் பற்றி பேசுகிறது. பௌத்தம் மேல் காட்சி, அனுமானம் என்று இரண்டு பிரமாணங்களை ஏற்றுக்கொள்கிறது. முன்னோர் உரை என்ற வேதங்களை அவை ஏற்றுக் கொள்ளவில்லை. பௌத்த தத்துவத்தில் மூன்று முக்கியமான கருத்துக்கள் உள்ளன.
ஒன்று கடவுள் இல்லை என்பது.
இரண்டு பொருள்கள் மாறுகின்றன என்று கூறுவது.
மூன்று கன்மம் பற்றிய விரிவான விளக்கங்கள்.
புத்த மதத்தில் மாறுதல் பற்றி அதிகம் பேசப்படுகிறது. நமது கண்ணுக்கு நேரே தெரியும் பொருள்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. இலை சருகாகி மண்ணில் விழுந்து மண்ணோடு மண்ணாகி விடுகிறது. இந்த மாறுதல் இயங்கியலின் ஒரு பகுதியாகும். ஆனால், இது முழு இயங்கியல் அல்ல. எதிர் சக்திகளின் போராட்டம். பின்னர் அவை ஒன்றை ஒன்று மறுத்து ஒரு உயர் கட்டத்தை நோக்கி பொருள்கள் செல்கின்றன என்ற இயங்கியல் முதல்வாத கருத்து இங்கு இல்லை. இதனை நாம் எதிர்பார்க்கவும் கூடாது; எதிர்பார்க்கவும் முடியாது.
பௌத்தத் தத்துவத்தில் மிக முக்கியமான ஒன்று மாறுதலை பற்றி அவர்கள் பேசுவது. பௌத்தர்கள் பிரத்தியட்சம், அனுமானம் ஆகியவற்றை ஏற்றுக்கொள்கிறார்கள். எனவே, இவர்கள் பொருளையும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் பொருளை விட அதில் ஏற்படும் மாறுதல்களைப் பற்றித்தான் அவர்கள் அதிகம் பேசுகிறார்கள். பொருள்களுக்கு நிலைபெற்றிருத்தல், மாறுதல் ஆகிய இரண்டு அம்சங்கள் உண்டு. பௌத்தர்கள் மாறுதலை அதன் எல்லைக்கே கொண்டு செல்வதால் பொருளின் இருப்பை மறுக்கும் நிலைக்கு வந்துவிடுகிறார்கள். இது அத்வைதத்திற்கு நெருக்கமாக வரும் நிலையாகும். பௌத்தர்கள் கருத்துப்படி நாம் ஒரு கணத்தில் பார்க்கும் பொருள் மறு கணத்தில் இல்லை என்றாகிறது. உதாரணமாக தண்ணீரில் கால் வைக்கும்போது இருந்த கால் ஒன்று. தண்ணீரை விட்டு எடுத்தவுடன் இருக்கும் கால் வேறொன்று. முன்பிருந்த காலிலிருந்து அது மாறிவிட்டது. ஆகையினால் பௌத்தர்களுக்கு கணபங்கவாதிகள் என்ற பெயரும் உண்டு. இங்கு மாறுதல் இருக்கிறது, பொருள் இல்லை என்ற நிலை ஏற்படுகிறது.
பௌத்த அறிஞர்களில் சிறந்தவரான நாகார்ஜுனர் என்பவர் மாறுதல் மட்டுமே உண்டு என்று கூறி சூனியவாதம் பேசினார். இந்தக் கருத்தை சங்கரர் ஏற்றுக்கொண்டார் என்று அறிஞர்கள் கூறுவர். ஆகையினால் சங்கரருக்கு மறைந்து உறையும் பௌத்தர் என்ற ஒரு பெயரும் உண்டு.
பௌத்தர்கள் மிக அதிகமாகப் பேசுவது கன்மம் என்பது பற்றி. இதுபற்றி சமணர்களும் பேசுகிறார்கள். ஆனால், சமணர்கள் ஆன்மாவை ஏற்றுக் கொள்பவர்கள். கன்மமானது ஆன்மாவைப் பற்றிக் கொள்கிறது என்று அவர்கள் கூறுவார்கள். ஆனால், பௌத்தர்கள் ஆன்மாவை ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால், உயிர்களை கன்மம் பற்றிக் கொள்கிறது. எனவே கன்மத்தை நீக்குவதற்காக பல பிறவிகள் எடுத்து அதன் பின்னர்தான் நிர்வாண நிலையை அடைய முடிகிறது என்று அவர்கள் கூறுகிறார்கள்.
புத்தமதம் தத்துவத் துறையில் பல பெரும் அறிஞர்களை உருவாக்கியுள்ளது. கி.பி.16ஆம் நூற்றாண்டு வரை அது இந்தியாவில் இருந்தது. ஆனால், அதற்கு பின்னர் இந்தியாவில் மறைந்து விட்டது. இப்போது யாராவது நாங்கள் பின்பற்றினோம் என்று சொன்னால், அது ஒரு அடையாள அரசியல் தவிர வேறு எதுவும் இல்லை. வெளிநாடுகளிலுள்ள பௌத்தம் அந்தந்த நாட்டுக்கு ஏற்றபடி பல வடிவங்களைப் பெற்று நவீனமயமாக்கப்பட்டு உள்ளது.
தொடர்புக்கு: 98947 83657