பட்டியலின, பழங்குடி மக்களின் உரிமைகளை மீட்க; சம உரிமையை நிலைநாட்ட; 12 அம்ச கோரிக்கை சாசன நாடு தழுவிய கையெழுத்து இயக்கம் நடத்தப்பட இருப்பதாக தமிழ்மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. 12 அம்ச கோரிக்கைகள் வருமாறு:
- பொதுச் சொத்துகளில் பட்டியலின மக்கள் உரிய பங்கு பெற சட்டம் இயற்ற வேண்டும்.
- நிலமற்ற கிராமப்புற மக்களுக்கு 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும். அவை அந்த மக்களிடமே இருக்கச் செய்ய வேண்டும்.
- கொத்தடிமைத் தொழிலாளர் (ஒழிப்புச்) சட்டம் – 1976 யை நடைமுறைப்படுத்த வேண்டும். குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும்.
- அரசு கொள்முதல் ஒப்பந்தங்கள், வணிகம் ஆகியவற்றில் உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்.
- புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும். அரசு, தனியார் கல்வி நிலையங்களில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்.
- தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும்.
- மனிதக் கழிவை மனிதர்களே அகற்றும் முறையை ஒழிக்க வேண்டும்.
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 200 நாள் வேலை, தின சம்பளம் ரூ 600/- ஆக உயர்த்த வேண்டும்.
- பட்டியல் சாதி, பழங்குடி வன்கொடுமை(தடுப்பு) சட்டத்தை நீர்த்துப் போகாத வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
- பட்டியல் இன துணை திட்ட நிதியை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
- சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
- சாதி ஆணவ படுகொலையை தடுக்க தனி சட்டம் நிறைவேற்ற வேண்டும்.
இந்த கோரிக்கை சாசனத்தில் அக்டோபர் 25 முதல் நவம்பர் 17 ஆம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் கையெழுத்து இயக்கம் நடத்துவது என்றும்; நவம்பர் 18 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் மாநாட்டில் ஒப்படைக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. பின்னர், டிசம்பர் – 4 ஆம் தேதி டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்று, குடியரசுத்தலைவரை நேரில் சந்தித்து கோரிக்கை சாசனம் அளிக்கப்பட உள்ளது என்றும் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, கடந்த ஆகஸ்ட் மாதம் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டியலின, பழங்குடி அமைப்புகள் கூடி, 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாடு தழுவிய கையெழுத்து இயக்கம் நடத்துவது; டெல்லியில் நாடாளுமன்றம் நோக்கி ஊர்வலமாகச் சென்று குடியரசுத்தலைவரிடம் அவற்றைக் கொடுப்பது என முடிவெடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
பட்டியலின பழங்குடி மக்களின் கோரிக்கை சாசனத்தில் கையெழுத்துப் பெறும் இயக்கத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினரும் நாகை நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.செல்வராசு முதல் கையெழுத்திட்டு தொடங்கிவைத்தார். திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்துவும் கையெழுத்திட்டார்.
தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு தமிழ்மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பிரதாபன் தலைமையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டச் செயலாளர் எஸ்.கலைச்செல்வன் முதல் கையெழுத்திட்டு, இயக்கத்தை தொடங்கி வைத்தார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினரும் சங்க மாவட்ட செயலாளருமான எஸ்.தேவராஜன் உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் என்.எஸ்.பிரதாப் சந்திரன் தலைமையில், முன்னாள் அமைச்சர் சா.மு.நாசர் முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். இதில், மறுமலர்ச்சி திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் அந்திரிதாஸ் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.