10% இடஒதுக்கீடு: நீதியா? அநீதியா?
த.லெனின்
உயர் சாதியில் முன்னேறிய பொது வகுப்பினருக்கான 10 சத இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தலைமை நீதிபதி உமேஷ் லலித் மற்றும் தினேஷ் மகேஷ்வரி தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வு பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு அரசமைப்புச் சட்ட அடிப்படை கட்டமைப்பை மீறவில்லை என தீர்ப்பளித்துள்ளனர். ஐந்து பேரில் மூன்று பேர் இந்த இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாகவும், இரண்டு பேர் எதிராகவும் தீர்ப்பளித்துள்ளனர்.
பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு அரசமைப்பின் அடிப்படை அம்சங்களை மீறவில்லை என்றும், இது ஒரு உறுதியான நடவடிக்கை என தெரிவித்ததுடன் கல்வி உரிமைச் சட்டம் 2009ன்படி, அதாவது, ஏழை மாணவர்களுக்கான கல்வியை உறுதிப்படுத்தும் விதத்தில் தனியார் கல்வி நிறுவனங்களில் 25 சத இட ஒதுக்கீட்டை எடுத்துக் காட்டியுள்ளது. அப்படியானால் தனியார் துறையில் இடஒதுக்கீட்டை அறிவித்திருக்கலாமே!
தினேஷ் மகேஸ்வரி, பேலா எம்.திரிவேதி, ஜே.பி.பர்டிவாலா ஆகியோர் இந்த சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாகவும், மாற்று கருத்தை முன்வைத்த யு.யு.லலித் மற்றும் ரவீந்திர பட் ஆகியோர் இந்த 103 வது சட்ட திருத்தம் இட ஒதுக்கீட்டின் அளவுகோலை 50 சதத்திற்கு மேல் எடுத்துச் செல்கிறது என்றும், உயர்சாதி ஏழைகளுக்கான 10 சத இட ஒதுக்கீட்டில் தலித் மற்றும் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட ஏழைகள் சேர்க்கப்படாதது பாராபட்சம் என்று தங்களுடைய கருத்தை கூறி உள்ளனர்.
அதிலும், நீதியரசர் ரவீந்திரபட் மக்கள் தொகை அடிப்படையில் வறுமைக்கோட்டை ஆய்வு செய்த ‘சினோ கமிஷன்’ கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலையில் வெளியிட்ட அறிக்கையை எடுத்துக் காட்டியுள்ளார். அதில் நாடு முழுவதும் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழக்கூடியவர்கள் 31.7 கோடி பேர். அதில் தாழ்த்தப்பட்டவர்கள் 7.74 சதவிகிதம். அது அந்த சமூகத்தில் 38% ஆகும். பழங்குடியினரில் 4.25 கோடி பேர். அதாவது அச்சமூகத்தில் 48% வறுமைக்கோட்டுக்கு கீழே வருகின்றனர் என்றும், இதர பிற்படுத்தப்பட்டோரில் 13.86 கோடி பேர், அதாவது 33.01% ஆகும். ஆனால் இந்த உயர்சாதி பத்து சத இட ஒதுக்கீட்டு பிரிவினரில் 5.5 கோடி பேர். அதாவது அந்தச் சமூகத்தில் 18.2% தான் வறுமைக்கோட்டுக்கு கீழே வருகின்றனர் என்று மிகத் தெளிவாக உறுதிப்படக் கூறியுள்ளார். ஏற்கனவே, இச்சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக தீர்ப்பளித்த மூன்று நீதிபதிகள் 10% இட ஒதுக்கீடு அரசாணை அரசியல் சாசனத்தை மீறாது என்றும், இது பொதுத்துறைவினருக்கு நடைமுறைப்படுத்தப்பட்டால் 50% தாண்டக்கூடாது என்ற வரையறைக்குள் வராது என்றும், ஏனெனில், அது சமூக ரீதியான இட ஒதுக்கீடு, இது பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு என்று புதிய விளக்கம் தந்து புலகாங்கிதம் அடைந்தனர்.
பொதுப் பிரிவில் 10%த்தை கழித்தால் அதில் போட்டியிடும் தலித், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வாய்ப்புகளை தட்டிப் பறிப்பதாகத்தானே அமையும்!
75 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் இட ஒதுக்கீடு குறித்த மறு ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். ஆனால், கடந்த கால வெள்ளையர் ஆட்சியில் ஆங்கில படிப்பில் தேர்ச்சி அடையமுடியாத பிராமணர்கள் தேர்ச்சி மதிப்பெண்ணான 50ஐ 35 ஆக குறைக்க வேண்டும் என்று மனு போட்டு குறைத்தனர் என்பதும் வரலாறு.
மண்டல் குழு பரிந்துரையை வி.பி.சிங் அமல்படுத்த ஆணையிட்ட போது இதனால் தகுதியும், திறமையும் குறைந்துவிடும் என்று பொங்கி எழுந்து போராடியவர்கள் இப்போது ஏன் அமைதி காக்கிறார்கள்?
அதுவும் ஒன்றிய அரசு இந்த அரிய வகை ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் விதத்தில் பல இடங்களில் பணி நியமனம் செய்துள்ளது. ஸ்டேட் வங்கியில் இந்தப் பிரிவினர் தலித்துகள் எடுத்த மதிப்பெண்ணில் பாதி அளவில் எடுத்தவர்களே வேலையில் சேர்ந்துள்ளனர். என்னே தகுதி!
பொதுவாக இட ஒதுக்கீடு என்பது தகுதியுள்ள மக்களுக்கு உரிய அதிகாரங்கள் மற்றும் உரிமைகள், சலுகைகளை உறுதி செய்யும் ஒரு சமூக நடவடிக்கையாகும். காலம் காலமாக, இந்தியச் சமூகத்தில் பிறப்பின் அடிப்படையில் அமைந்த சாதிய அடுக்குமுறையால் உழைப்பாளி மக்களான சூத்திரர்களும், தலித்துகளும், பழங்குடியினரும் கல்வி கற்க கூடாது என்ற சமூகத் தடைக்கு ஆளாகி வந்தனர். எனவே தான், அவர்களுக்கான உரிமையை உத்தரவாதம் செய்ய, சுதந்திர இந்தியாவில், ஏன் அதற்கு முன்பே இட ஒதுக்கீட்டு முறை அமலுக்கு வந்தது.
நீதிக்கட்சி ஆட்சியில் 1921 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவ இடஒதுக்கீடு முதல் முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அமல்படுத்தப்பட்டது.
நிலைமை இப்படி இருக்க சுதந்திரத்திற்கு பிறகு முதல்முறையாக நாம் அனைவரும் சட்டத்திற்கு முன் சமம் என்ற அரசமைப்புச் சட்ட பிரிவு 15ஐ காரணம் காட்டி இடஒதுக்கீட்டை நீக்கக் கோரி செண்பகம் துரைராஜன் என்ற மாணவர் 1951-ல் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை கொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏற்கனவே இருக்கும் இட ஒதுக்கீடு அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும் தீர்ப்பளித்தனர். அதனையே உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. இதனால் தமிழ்நாடு போர்க்களம் கண்டது. தந்தை பெரியார் சமூக நீதிக்கான இந்த இட ஒதுக்கீட்டை காப்பாற்றுகிற போராட்டங்களுக்கு தலைமை தாங்கினார். நாடு முழுவதும் இது விவாதத்தை ஏற்படுத்தியது.
எனவே தான் 1951-ல் இந்திய அரசமைப்பின் முதல் சட்ட திருத்தத்தை நேரு அரசு கொண்டு வந்து, பிரிவு 15(4) உட்பிரிவாக சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கலாம் என்ற திருத்தத்தை கொண்டு வந்தது. அதன் பிறகே இட ஒதுக்கீட்டை தொடர்ந்தது. செய்தி என்னவென்றால், செண்பகம் துரைராஜன் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான மனுவே செய்யாமல் தான் பாதிக்கப்பட்டதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது என்பதுதான் அதிசயத்திலும் அதிசயம்!
சங்கரி பிரசாத் எதிர் இந்திய அரசு என்ற வழக்கில் அரசமைப்புச் சட்டத்தின் இந்த முதலாவது சட்டத் திருத்தத்தை எதிர்த்து 1951ல் நிறைவேற்றப்பட்ட நாடாளுமன்ற சட்ட திருத்தம் சட்டப்படி செல்லுமா? என்ற வினாவை தொடுத்தது. ஆனால், உச்சநீதிமன்றம் இந்தச் சட்ட திருத்தம் செல்லும் என்று தீர்ப்பு அளித்தது. அதோடு அரசமைப்புச் சட்டம் பிரிவு 368 பயன்படுத்தி நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பை திருத்தம் செய்யலாம் என்றும் கூறியது. இதன் பிறகே அரசமைப்புச் சட்டப் பிரிவு 340 ஐ பயன்படுத்தி 1953-ல் முதலாவது பிற்பட்டோர் ஆணையத்தை இந்திய அரசு அறிவித்தது. காக்கா கல்லேல்கர் தலைமையில் அமைந்த இந்த ஆணையம் நாடு முழுவதும் இரண்டு ஆண்டுகள் ஆய்வுகள் மேற்கொண்டு 1955-ல் பரிந்துரைகளை வெளியிட்டது. அதில் மத்திய, மாநில அரசுகளை சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கான அடையாளப்படுத்தப்பட்டவர்களை அடையாளம் காணும்படி வலியுறுத்தியது. அதன் பரிந்துரைகளும் மிகச் சிறப்பானதாகும். நில சீர்திருத்தம், கிராம பொருளாதார மறு சீரமைப்பு, பூதான் இயக்கம், குடிசை தொழில்கள், ஊரக வீட்டு வசதி, பொது சுகாதாரம், குடிநீர், விநியோகம், கல்வி, பல்கலைக்கழக கல்வி, அரசு பணிகள் இவைகளில் இதர பிற்பட்டவர்களுக்கான பிரதிநிதித்துவத்தை 75% ஆக இருக்க வேண்டும் என்று இவ்வறிக்கை பரிந்துரைத்தது.
1961 ஆம் ஆண்டு சாதி அடிப்படையில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உயர்ஜாதியில் உள்ள பெண்களையும் பிற்படுத்தப்பட்டவர்களாக அறிவித்தது. இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு இதர பிற்படுத்தப்பட்டோர் 80% இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், 1979இல் ஜனவரி ஒன்றாம் தேதி மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஒன்றிய அரசு மண்டல் குழுவை இதர பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையத்தை அறிவித்தது. அது 1980ல் மக்கள் தொகையில் இதர பிற்படுத்தப்பட்டோர் 52% என்று 1931-ல் வெள்ளைக்காரர்கள் காலத்தில் எடுக்கப்பட்ட சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அமைந்த அறிவிப்பதாகும்.
இதில் 27% பரிந்துரைப்பாகச் சொன்னது. ஏனெனில், ஏற்கனவே உச்ச நீதிமன்றம் இட ஒதுக்கீடு 50%க்கு மேல் செல்லக்கூடாது என்று தீர்ப்பளித்த காரணத்தால்தான் 52% இருக்கிற பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அதே அளவு நியாயம் செய்ய முடியவில்லை என்றும், அதில் 27% இடஒதுக்கீடு அளிக்கலாம் என்று பரிந்துரைத்தது. வி.பி.சிங் அரசு இதை நடைமுறைப்படுத்தியது.
இதனால், இதை எதிர்த்து பெரும் போராட்டங்களை வட மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியும், ஆர்.எஸ்.எஸ் சங்க பரிவார அமைப்புகளும் நடத்தியது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே, இந்த மண்டல் குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்ற முயற்சி எடுத்த போது, அதை எதிர்த்து உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்களிலும் வழக்கு தொடுக்கப்பட்டது. அதற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் ஏற்கனவே உயர் சாதியில் இருக்கிற ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு என்பதை அவர் அறிவித்தார்.
1992 இந்திரா சஹானி வழக்கு என்று அறியப்பட்ட அந்த வழக்கு புகழ்மிக்க வழக்காக அறியப்படுகிறது. இதில்தான் ஒன்பது பேர் அடங்கிய நீதி அரசர்கள் அமர்வு தீர்ப்பு வழங்கியது. இட ஒதுக்கீடு 50% சதத்திற்கு மேல் இருக்கக் கூடாது என்றும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு கிரிமினிலேயர் முறையையும் பரிந்துரைத்தது மட்டுமல்லாமல், அரசமைப்புச் சட்டம் பிரிவு 16(4) ன்படி இதர பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார ரீதியில் அல்லாது, சாதி மற்றும் கல்வி பின்தங்கல் அடிப்படையில் காணப்பட வேண்டும் என்றும் அது குறிப்பிட்டது.
ஆனால், அன்று 9 பேர் அடங்கிய நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பை, இன்று ஐந்து பேர் அடங்கிய அமர்வு, அதிலும் மூன்று பேர்தான் இந்தத் தீர்ப்பை அளித்துள்ளனர். இந்தத் தீர்ப்பு 9 பேர் அடங்கிய அமர்வையும் கட்டுப்படுத்துவதாகக் கூறுவது விந்தையிலும் விந்தையாக இருக்கிறது.
நம்முடைய கேள்வி என்னவென்றால் இநத இடஒதுக்கீட்டில் வருவோரின் வருமான வரம்பு ஆண்டுக்கு 8 லட்சம் என்று அறிவித்திருக்கிறது. அப்படி என்றால் மாதத்திற்கு ரூ.66,666 வருமானம் என்று வருகிறது. அதாவது நாளொன்றுக்கு ரூ.2,222 வருமானம் பெறுவோர் ஏழைகள் என்றால் அவர்களைத்தான் அரிய வகை ஏழை என்று நாம் அழைக்கிறோம்!
இந்தியாவின் வறுமை கோடு குறித்த பல்வேறு புள்ளி விவரங்கள் குறிப்பிடுவது இங்கு நோக்கத்தக்கது. நாளன்றுக்கு ரூ.40 ஊதியம் பெற்றாலே அவர் வறுமை கோட்டுக்கு மேலே சென்று விட்டதாக சொல்கிறது ஒன்றிய அரசு. ஆனால், இங்கே நாளன்றுக்கு ரூ.2222 வருமானம் பெறக்கூடியவர் வறுமை கோட்டுக்கு கீழே வருவதாக சொல்வது விந்தையிலும் விந்தை. நீதி அரசர்கள்தான் இதை விளக்க வேண்டும்!
அரசமைப்பு சட்டப்பிரிவுகள் 15(4) பிரிவு 16 (4) மற்றும் வழிகாட்டும் நெறி பிரிவு 46 ஆகியவை கல்வி மற்றும் சமூக ரீதியாக பிற்பட்டவர்கள் மற்றும் பட்டியலினத்தவர், பட்டியல் பழங்குடியினர் ஆகியோரின் வளர்ச்சிக்கான சிறப்பு அதிகாரங்களை வழங்குகிறது. ஆனால், அரசமைப்புச் சட்டத்தின் எந்த இடத்திலும் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து சொல்லப்படவே இல்லை. ஏனெனில், இது வறுமை ஒழிப்பு திட்டம் என்பதால்தான். நீதி அரசர்கள் அரசமைப்புச் சட்டத்தில் இல்லாத ஒன்றைப் பரிந்துரைப்பது எதைக் காட்டுகிறது? ஏற்கனவே இந்திய ஆட்சிப் பணி உள்ளிட்ட ஒன்றிய குடிமைப் பணிகளுக்கான தேர்வாணையத்தில் நடத்தப்பட்ட தேர்வுகளில் பொதுப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட இளைஞர்கள் மற்றும் தலித் பழங்குடி இளைஞர்கள் அந்தப் பட்டியலில் வைக்கப்படாமல் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் பழங்குடியினர் பட்டியலில் வைக்கப்பட்டு அந்த பொதுப் பிரிவு மொத்தத்தில் இட ஒதுக்கீடு அல்லாதவர்களுக்காக பாவிக்கிற ஒரு பொது போக்கு தொடர்ந்து நிலவுகிறது. இது குறித்து உச்ச நீதிமன்றம் எச்சரித்தும் உரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
அதுபோலவே இட ஒதுக்கீட்டுக்கு வராத பொதுப் பிரிவினரின் ஆதிக்கம் தான் நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகளில் ஏறத்தாழ 75% உயர்சாதி வகுப்பைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் இருவரைத் தவிர மற்ற அனைவருமே உயர் சாதி வகுப்பினைச் சார்ந்தவர்கள்தான். ஏன் இந்த வழக்கை விசாரித்த ஐந்து நீதிபதிகளும் உயர்சாதி வகுப்பைச் சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். மருந்துக்கு கூட ஒரு பிற்படுத்தப்பட்ட நீதிபதியை இந்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்கினை விசாரிப்பதற்கான அமர்வில் சேர்க்கப்படவில்லை. இதுவே இயற்கை நீதிக்கு எதிரானது ஆகும். இடர்பாடுகளில் இடஒதுக்கீடு சமூக நீதி!
எனவே, இந்த தீர்ப்பை மறு சீராய்வுக்கு உட்படுத்துவதற்கும், அரசமைப்பு சட்டப்படி கல்வி ரீதியாக, சமூக ரீதியாக பின்தங்கியவர்களுக்குத்தான் இட ஒதுக்கீடு என்பதை உறுதிப்படுத்துவதற்கும் தொடர் போராட்டங்கள் எழட்டும்! நம்மை ஆட்டுவிக்கும் அநீதி சங்கிலிகள் அறுபடட்டும்!
தொடர்புக்கு: 94444 81703