தமிழகம்

வேளாண் விளைபொருட்களுக்கு கரீப் பருவத்திற்கு ஒன்றிய அரசு 3 முதல் 5 சதம் விலை உயர்த்தி அறிவிப்பு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்

வேளாண் விளைபொருள் மற்றும் உற்பத்திக்கான செலவு திட்டமிடல் குழு பரிந்துரையை ஏற்று ஒன்றிய அரசு விவசாய விளைபொருட்களுக்கு நிகழாண்டைவிட 3 முதல் 5 சதம் வரை மட்டுமே விலையை உயர்த்தி அறிவித்திருக்கிறது. மேலும் கோதுமை, நெல் ஆகியவை தற்போது இந்தியாவிற்கும் வெளிநாடு ஏற்றுமதிக்கும் பெரிய அளவில் தேவைப்படும் நேரத்தில் கூட விவசாயிகளுக்கு விலையை உயர்த்தி கொடுத்திட ஒன்றிய அரசுக்கு மனமில்லை. இந்த விலை உயர்வு என்பது ஏற்கத்தக்கதல்ல.

இடுபொருட்கள் மற்றும் ஏனைய செலவுகள் 15 முதல் 20 சதம் வரை கடந்த ஓராண்டில் உயர்ந்திருக்கும் நிலையில் 3 முதல் 5 சதம் விலை உயர்வு என்பது விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும். டி.ஏ.பி.பொட்டாஸ் போன்ற இரசாயன உரங்கள் விலை 15 சதம் வரை உயர்ந்திருக்கிறது. இரசாயன உரங்களின் தட்டுப்பாட்டால் கூடுதல் விலை கொடுத்து அல்லது துணைப் பொருட்களையும் வாங்க வேண்டிய நிலை உள்ளது. உரம் கிடைக்காது மகசூல் குறைவையும் விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 100 அதேபோல் பிற பொருட்களுக்கும் பொருத்தமில்லாத விலையை அறிவித்துவிட்டு வேளாண் கமிஷன் பரிந்துரைப்படி உற்பத்திக்கான செலவுடன் 50 சதம் சேர்த்து அறிவித்ததாக ஒன்றிய அரசு பெருமைப்பட்டுக் கொள்கிறது.

வேளாண் விளைபொருட்களுக்கான உற்பத்தி செலவு என்பது சி2+50 அதாவது உற்பத்தி செலவு, நிலமதிப்பு, குடும்ப பாதுகாப்பு பராமரிப்பு செலவு மற்றும் இதற்குரிய வட்டியையும் சேர்த்து உற்பத்தி செலவாக கணக்கிட்டு இத்துடன் 50 சதம் சேர்த்து வழங்கிட வேண்டும் என்பது தான் வேளாண் கமிஷன் பரிந்துரையாகும். இதை வலியுறுத்தி தான் கடந்த 13 மாதங்களாக இந்தியா முழுவதும் விவசாயிகள் ஒரு ஆண்டுக்கும் மேலாகப் போராடி வந்த சூழலில் இதை ஏற்று பரிசீலிப்பதாக மத்திய அரசு ஒப்புக்கொண்ட நிலையில் தான் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த முறையில் அமல்படுத்த வேண்டிய ஒன்றிய அரசு ஒப்பந்தத்திற்கு மாறாக மீண்டும் விவசாயிகளை ஏமாற்றி வஞ்சிக்கும் செயலை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டிக்கிறது.

ஒப்பந்தப்படி சி2+50 அடிப்படையில் வேளாண் விளை பொருளுக்கு உடனடியாக அதற்கேற்ப விலையை உயர்த்தி வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button