வேலை பெறும் சட்டபூர்வ உரிமையைப் பறிக்கும் பாஜக ஒன்றிய அரசுக்கு தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் கண்டனம்!
ஊரகப் பகுதி உழைக்கும் மக்களின் முன்னோடி திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை பாஜக எதிர்கட்சி நிலையில் இருந்த காலத்தில் கடுமையாக எதிர்த்து வந்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தையும், அதன் கீழ் நடைபெறும் திட்டப்பணிகளையும் சிதைத்து அழித்து வருகிறது.
நாடு முழுவதும் உள்ள ஊரகப் பகுதி உடல் உழைப்புத் தொழிலாளர்கள் ஆண்டுக்கு நூறு நாள் வேலை பெறுவதற்கு சட்டபூர்வ உரிமை அளிக்கப்பட்டுள்ளது. சமூகத்தின் அடித்தட்டில் வாழும் மக்கள் சட்டபூர்வ உரிமை பெறுவதைச் சகித்துக் கொள்ள முடியாத “மனுவாதிகள்” உடலுழைப்புக்கு முன்னுரிமை தராத, ஒப்பந்ததாரர்கள் நுழைந்து கொள்ள வழிவகை செய்யும் பல்வேறு திருத்தங்களைச் செய்துள்ளனர். தற்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் மூலம் 20 ஆயிரத்துக்கும் அதிகமான “அங்கன்வாடி மையங்கள்” கட்டப்படும் என ஒன்றிய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது கட்டப்படும் நான்கு அங்கன்வாடி மையங்களில் மூன்று மையங்கள் நூறு நாள் வேலைத் திட்டத்தில் கட்டப்படும் என்றும், ரூபாய் 12 லட்சம் மதிப்பில் கட்டப்படும் அங்கன்வாடி மையத்திற்கு தலா 8 லட்சம் ரூபாய் வேலை உறுதியளிப்புத் திட்ட நிதியில் இருந்து எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டுக்கு (2023 – 24) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்த நிதி ரூ 60 ஆயிரம் கோடி, இதில் இதுவரை வேலை செய்த தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய ஊதியப் பாக்கி ரூபாய் 17 ஆயிரம் கோடி, இத்துடன் 20 ஆயிரம் அங்கன்வாடி மையங்களுக்கு தலா ரூ.8 லட்சம் வீதம் சுமார் ரூ. 1700 கோடி ஒதுக்கீடு செய்துவிட்டால், நடப்பாண்டில் வேலை அட்டை பெற்ற தொழிலாளர்களுக்கு பெயரளவில் மட்டுமே வேலை வழங்க முடியும். இதன் மூலம் தொழிலாளர்கள் சோர்வடைந்து சலிப்புற்று, திட்டத்தை விட்டு வெளியேற நிர்பந்திக்கும் வஞ்சகச் செயலில் ஒன்றிய அரசு ஈடுபடுவதைத் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதுடன், வேலை அட்டை பெற்றுள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் சட்டப்படி வேலை பெறும் உரிமையை மறுக்காமல் வேலை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது .