வேலை நேர அதிகரிப்பு சட்டத்திருத்தம் நிறுத்தி வைப்பு: முதல்வருக்கு நன்றி!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:
தமிழ்நாடு சட்டமன்றத்தின் கடந்த 21.04.2023 ஆம் தேதி எதிர்ப்புகளுக்கு மத்தியில் தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம் 2023 குரல் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தை நிறைவேற்றக் கூடாது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வெளிநடப்பு செய்தனர்.
தொழிற்சங்கங்களும், தொழிலாளர்களும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதுடன் எதிர்ப்புத் தெரிவித்து வேலைநிறுத்தம் அறிவித்தனர். இந்த நிலையில், தொழிற்சங்கத் தலைவர்களை அழைத்துப் பேசுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டதும், தொழிற்சங்க தலைவர்களின் கருத்துக்களையும், தோழமைக் கட்சிகளின் வேண்டுகோளையும் ஏற்று, தொழிலாளர்களின் உணர்வுகளை மதித்து, தொழிற்சாலை திருத்தச் சட்டத்தை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
விமர்சனங்களுக்கு காது கொடுப்பதும், தவறுகளைத் திருத்திக் கொள்வதும் ஜனநாயகத்தின் உயர்ந்த பண்பாகும். அந்த வகையில், காலத்தில் தலையிட்டு, தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாத்த முதலமைச்சர் நடவடிக்கைக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு நன்றி பாராட்டுகிறது.