கட்டுரைகள்

வெறுப்பு அரசியலுக்கு நெருப்பு வைப்போம்! நடிப்பு சுதேசிகளிடமிருந்து நாட்டைக் காப்போம்!

த.லெனின்

இந்திய பிரதமர் மோடியைத் தேர்ந்தெடுத்த தொகுதியான உ.பி. மாநிலம் வாரணாசி அருகில் உள்ள கியான்வாபியில் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலமான மசூதியில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக புரளியைக் கிளப்பி விட்டு, அதற்கான அடாவடி ஆர்ப்பாட்ட மத வெறி அரசியலை பா.ஜ.க.வும் சங்கப் பரிவார் கும்பலும் கையில் எடுத்தன.

மோடி பொறுப்பேற்ற பிறகு அவரது தேர்தல் பரப்புரைகளில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலே விஞ்சி நின்றது. ஒரு கட்டத்தில் தேர்தல் போட்டியில் வெற்றி பெறப் போவது  இடுகாடா? சுடுகாடா? என்பதை முடிவெடுங்கள் என்று பேசியதும்,  குஜராத் கலவரத்தில் இஸ்லாமியர்கள் குறிவைத்து தாக்கப்பட்ட அனைத்து சம்பவங்களுக்கும் அன்றைய முதலமைச்சராக இருந்த மோடி எவ்வளவு அணுக்கமாக இருந்தார் என்பதும் நாடறிந்ததே!

மதச்சார்பற்ற இந்தியாவில் பாபர் மசூதி தொடங்கி காசி, மதுரா உள்ளிட்ட இரண்டாயிரம் மசூதிகளை இந்துக்களின் கோவில்களை அழித்து கட்டப்பட்டதாக ஆர்.எஸ்.எஸ்.-ன்  வி.எச்.பி. பகிரங்கமான ஒரு போலி வரலாற்று நூலையே வெளியிட்டது.
கட்டடக் கலைக்கு பெயர்போன குதுப்மினாரை அகழாய்வு செய்து அது இந்துக் கோவிலை இடித்துக் கட்டியதற்கான சான்றுகள் இருக்கிறதா? என்று ஆய்வு செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கை ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் ஒருவர் தொடர்ந்திருந்தார்.

நிலைமை இப்படியிருக்க ஆர்.எஸ்.எஸ். அகில இந்தியத் தலைவர் திரு மோகன் பகவத் கடந்த ஜூலை 4ஆம் தேதி காசியாபாத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இஸ்லாமியப் பிரிவான முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச் கூட்டத்தில் நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது அவருக்கு அலோசகராக இருந்த முனைவர் க்வாஜா இஃப்திகார் அஹ்மத் எழுதிய “தி மீட்டிங் ஆப் மைன்ட்ஸ் எ பிரிட்ஜிங் இனிசியேட்டிவ்” என்ற புத்தகத்தை வெளியிட்டு பேசியபோது, “40 ஆயிரம் ஆண்டுகளாக நாம் அனைவரும் ஒரே மூதாதையரின் வழி வந்தவர்கள். இந்திய மக்கள் அனைவருக்கும் ஒரு மரபணுதான் இருக்கிறது. இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இருவேறு குழுக்கள் அல்ல. அவர்கள் ஏற்கனவே இணைந்திருக்கிறார்கள். எனவே, அவர்களைப் புதியதாக இணைப்பதற்கு ஒன்றும் தேவையில்லை. அரசியலால் சில பணிகளை மேற்கொள்ள முடியாது. மக்களை இணைக்கவும் முடியாது. ஆனால், அது மக்களின் ஒற்றுமையை சிதைக்கும் ஆயுதமாக மாறலாம் என்பதுடன், இங்கு இஸ்லாமியர்கள் வாழக்கூடாது என்று ஒரு இந்து கூறுகிறார் என்றால், அவர் ஒரு இந்துவே அல்ல. பசு ஒரு புனித விலங்குதான். ஆனால் மற்றவர்களை அதற்காக கொலை செய்பவர்கள் கூட இந்துத்துவ தத்துவத்திற்கு எதிரானவர்களே. சட்டம் எவ்விதம் பாரபட்சமும் காட்டாது அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசியதுடன், இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்கள் ஆபத்தில் இருக்கிறார்கள் என்ற சதி வலையில் சிக்கிக் கொள்ளாதீர்கள். இஸ்லாமியர்கள் எந்தவித ஆபத்திலும் இல்லை. நாட்டில் ஒற்றுமை இல்லை என்றால் வளர்ச்சி சாத்தியம் இல்லை. எனவே ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதற்கான உரையாடலை துவங்க வேண்டும்“ என்று பேசியுள்ளார்.

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கிறபோது, சாத்தான் வேதம் ஓதுவதைப் போல் தோன்றலாம். கர்நாடகாவில் பள்ளி, கல்வி நிறுவனங்களில் காலம் காலமாக இஸ்லாமிய மாணவிகளால் கடைபிடிக்கப்பட்டு வந்த ஹிஜாப் அணிவது குறித்து தேவையில்லாத விவாதங்களைக் கிளப்பி நீதிமன்றங்களுக்குச் சென்றது பாவம் பகவத்துக்குத் தெரியவில்லை!

ஏன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றி அதனை இஸ்லாமியர்களுக்கு எதிரான கருவியாக மாற்றியபோது, அப்போது மோகன் பகவத் இந்தியர்களின் மரபணு ஆராய்ச்சி குறித்து ஈடுபடவில்லை போலும்! ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் பகவத்துக்கும் மிகவும் நெருக்கமான உ.பி. முதல்வர் சாமியார் யோகி ஆதித்யநாத் சாலைகள், தெருக்களில் இருந்த இஸ்லாமியப் பெயர்களை நீக்க நடவடிக்கை எடுத்த போதும், தேர்தல் பரப்புரையில் 80 %க்கும் 20%க்கும் என எகத்தாளம் பேசியபோதும்,   பசு மாமிசம் வைத்திருந்தார் என்ற வதந்தியின் பேரில், பசு வன்முறைக் குண்டர்களால் அடித்துக் கொல்லப்பட்ட இஸ்லாமியர்கள் மற்றும் தலித்துகள் குறித்து நாக்பூரின் காதுகளுக்கு எட்டவில்லை போலும்!

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமான ஒன்றிய அரசின் அதீத வரி விதிப்பை கேள்வி கேட்டால் ஒளரங்கசிப் காலத்தில் இந்துக்கள் மீது போடப்பட்ட ஜிஸ்யா வரியைப் பற்றி விவாதிக்கின்றனர். வெள்ளையருக்கு எதிராக விடுதலைப் போராட்டத்தில் எங்கும் போராட அவர்கள் தான் உண்மையான தேச பக்தர்கள் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க முகலாய எதிர்ப்பை எப்போதும் உயர்த்திப் பிடித்தே வருகிறன்றனர்.

கெட்டிக்காரன் புளுகு எட்டுநாள் தான் என்பதைப் போல இவர் பேசி முடித்த சில தினங்களிலேயே பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, கடந்த மே 26ஆம் தேதி டைம்ஸ் நவ் தொலைக்காட்சி “கியான்வாபி பைஸ்ஸ்” என்ற தலைப்பில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு பேசும்போது, முஹமது நபி குறித்தும், இஸ்லாம் குறித்தும் மிகவும் கீழ்த்தரமாகவும், அவதூறாகவும் பேசினார்.
அதுபோலவே டெல்லி மீடியா செல் தலைவரான நவீன்குமார் ஜிண்டாலும் இஸ்லாமை இழிவாகப் பழித்துப் பேசியிருந்தார். இதனையட்டி கடந்த  3 ஆம் தேதி கான்பூரில் இஸ்லாமியர்கள் கடும் போராட்டங்களையும், பேரணிகளையும் நடத்தினர்.

துணை  குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு  தனது மூன்று நாடுகள் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். தோகாவில் தொடங்கிய அவரது பயணத்தின்போதே, மிகப்பெரும் எதிர்ப்பையும், இந்திய பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தோடு கூடிய ஹேஷ் டாக்குகள் கத்தாரிலும், குவைத்திலும், மற்ற வளைகுடா நாடுகளிலும் பெரும் எண்ணிக்கை அலை அலையாக எழுந்தது.

குவைத் அரசு இந்திய தூதரை தோகாவிலும், குவைத் நகரத்திலும் நேரில் அழைத்து டெல்லியிலிருந்து ஒரு பொது மன்னிப்பை அறிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.
இந்தியாவின் நட்பு நாடான ஈரான், “இஸ்லாமியபோபியா” போன்றவற்றை பரப்பும் இந்தியா வின் ஆளும் கட்சியையும் கண்டித்ததுடன், ஈரானின் வெளியுறவு அமைச்சர் ஹ§சைன் அமித் அப்தொலாஹியன் சில நாட்களுக்கு முன்பு தனது முதல் சுற்றுப் பயணமாக டெல்லி வந்திருந்தபோது,  இங்கு நடந்த இந்த வெறுப்பு சம்பவங்கள் இந்தியாவின் கவுரவத்தை உலக அரங்கில் தலைகுனிய வைத்து விட்டது. 57 நாடுகள் அடங்கிய இஸ்லாமிய கூட்டமைப்பும் இதனை கண்டித்து ஒரு கடுமையான அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

ஆளும் பா.ஜ.க.வினர் இஸ்லாமியர்கள் குறித்து தொடர்ந்து இழிவாகப் பேசுவதுடன் தாக்குதலையும் நடத்துகிறார்கள்.  அவர்கள் ஆளும் சில மாநிலங்களில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதை தடுத்ததன் மூலம் வன்முறையைத் தூண்டி விட்டனர். சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களும், அவர்களது சொத்துக்களை அழிப்பதும் தொடர்கிறது என்று அந்த அறிக்கை கடுமையாகக் கண்டித்திருந்தது. குவைத் மற்றும் தோகாவில் இருக்கும் இந்தியத் தூதரகம் இதற்கான ஒரு பதில் அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில்  வெறுப்பை வெளியிடுவோரின் கருத்து அரசின் கருத்து அல்ல என்று அது தன்னிலை விளக்கம் அளித்திருந்தது. நமது கேள்வி பா.ஜ.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்கள்தான் மோசமானவர்களா? மீதம் உள்ளவர்கள் எல்லாம் நல்லவர்களா? பா.ஜ.க. இந்தியர்களை மட்டுமல்ல உலகத்தையே முட்டாளாக்குகிறது. நாள் தோறும் அதிகரித்து வரும் அவர்களது அருவருக்கத்தக்க இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரம் பெரும் கலவரங்களுக்கு காரணமாக அமைவதை உலகமே கண்டு வருகிறது.

கோவிட் பெருந்தொற்று காலத்தில் அரபு நாடுகளில் நிறுவனங்கள் நடத்துகிற சங் பரிவார் அமைப்புகளின் பொறுப்பாளர்களே அந்த மண்ணில் இருந்துகொண்டே உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்வதைப் போல  இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.  அத்துடன் பாஜகவின் இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூரியா எம்.பி. தனது டுவிட்டர் பதிவில் இஸ்லாமியப் பெண்களை இழிவுபடுத்தி பேசியிருந்தார். அது எப்படியோ குவைத் நாட்டின் இளவரசிக்கு தகவல் போக அவர் ராஜிய ரீதியாக இது குறித்து வினா எழுப்பியதுடன், அவர்களையெல்லாம் திருப்பி அனுப்ப வேண்டும் என்று முனைந்த போது, ஓடோடிச் சென்று மன்னிப்பு கேட்டு தப்பிப் பிழைத்த பல வீராதி வீரர்களும் அங்கு உண்டு.

நமது நாடு அரபுநாடுகளோடு வரலாற்று ரீதியாக மிகச்சிறந்த வியாபாரத்தை மேற்கொண்டு வருகிறது. 2017லிலிருந்து 2021வரை ஒட்டுமொத்த வியாபாரத்தில் உலகில் உள்ள 200 நாடுகள் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் மட்டும் 7% வணிகத்தில் பங்கு வகிக்கிறது. சவுதி 3.8%, கத்தார் 1.4%, குவைத் 1.1%, ஈரான் 1.1%, ஓமன் 0.8% என ஆக மொத்தம் 16% பங்கினை இந்தநாடுகளோடு இந்தியா கொண்டுள்ளது.
எண்ணெய் இறக்குமதியில் 2017&2021 கால கட்டத்தில் 14.1% எண்ணெயை சவுதியிலிருந்து மட்டும் இந்தியா இறக்குமதி செய்திருக்கிறது. ஐக்கிய அமீரகம் 9.5%, கத்தார் 5.7%, குவைத் 4.3%, ஈரான் 3.6%, ஓமன் 1.6%, பக்ரைன் 0.1% என ஆக  மொத்தம் ஒட்டுமொத்த எண்ணெய் தேவையில் 39% த்தை இந்த நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கொள்கிறது.

அத்துடன் திரைகடல் ஓடியும் திரைகடல் தேட இந்தியர்கள் இந்த நாடுகளில் குடிபெயர்ந்து பணியாற்றி வருகிறார்கள். ஐக்கிய அமீரகத்தில் 34,25,144, சவுதியில் 25,94,947, குவைத்தில் 10,29,861, ஓமனில் 7,81,341, கத்தாரில் 7,46,550, பக்ரைனில் 3,26,658, ஈரானில் 4,337 பேரும் ஆக மொத்தம் 89,08,638 பேர் மேற்சொன்ன நாடுகளில் பணியாற்றி இந்தியாவிற்கான அந்நியச் செலாவணியை ஈட்டி வருகின்றனர். உள்ளாட்டு பண வரவில் ஐக்கிய அமீரகத்தில் 13.8% (உலகிலேயே முதலிடம் பெறும் நாடாகும்), சவுதியில் 11.2%, குவைத்தில், 4.6%, கத்தாரில் 4.1%, ஓமனில் 3.3%. பக்ரைனில் 1.5% என பண வரவு வருகிறது. பா.ஜ.க.வின் மதவெறி பித்தேறிய அரசியல் தவறுகளுக்கு வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஏன் பாதிப்படைய வேண்டும்? உலக அரங்கில் இந்தியா ஏன் தனிமைப்பட்டு மதிப்பை இழக்க வேண்டும்? இவையெல்லாம் பாசிசத்தின் பக்க விளைவுகளின்றி வேறு என்ன?

பாசிசம் பெரும் நிறுவனங்களின் நலன்களைக் காக்க அதற்கு எதிராகத் திரளும் மக்களை பிளவுபடுத்தும் ஒரே சூழ்ச்சியைத்தான் அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து செய்து வருகிறது. மோடியின் அரசும் கார்ப்பரேட் முதலாளித்துவத்திற்கு தலையையும் இந்துத்துவ பாசிச வெறியாட்டத்திற்கு வாலையும் காட்டி தனது இரட்டை நிலையை இப்போதும் நிரூபித்தே வருகிறது.

இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது உலகின் மிகப்பெரும் வலதுசாரி பாசிச பயங்கரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.சின் தலைவர் மோகன் பகவத்தின் சமீபத்திய பேச்சை எந்த வகையில் வைப்பது? வெறுப்பு பிரச்சாரத்தை பேச வைத்து அழகு பார்த்த இவர்களே இன்று பா.ஜ.க.வின் அமைப்பு விதி 10 (அ) வின் படி அவர்கள் தவறு இழைத்து விட்டதாகச் சொல்லி நீக்கியிருக்கிறது. இந்த விதி அமித்ஷாவிற்கு, மோடிக்கு, தேஜஸ்வி சூர்யாவிற்கு, உ.பி.முதல்வர் யோகிக்கு பொருந்துவதில்லையே ஏன்?

வெறுப்பு அரசியலுக்கு எதிரான நெருப்பை பற்றவைப்போம்! நடிப்பு சுதேசிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாப்போம்!

தொடர்புக்கு: 94444 81703

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button