கட்டுரைகள்

வெண்மணி தியாகிகளுக்கு வீரவணக்கம்!

அ.பாஸ்கர்

வர்ணாசிரமம் திணிக்கப்பட்டபோது “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று முன்னோர்களால் சமத்துவ முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சாதிய அடையாளமிட்டு மனித சமூகம் அடுக்கடுக்களாக பிரிக்கப்பட்டதும், அதன் தொடர்ச்சியாகச் சாதியின் உட்பிரிவுகள் என்ற பெயரில் மேலும் பிளவுபடுத்தியதும் தீராப் பெருநோயாகத் தொடர்கிறது.

தமிழ்நாட்டின் தொழிலாளர் போராட்ட வரலாற்றிலும் ‘சாதி’ உழைப்போர் உரிமையைப் பறிக்கும் ஆயுதமாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கோரமுகம் ஒன்று வெண்மணி கிராமத்தில் 1968 டிசம்பர் 25ல் வெளிப்பட்டது.

ஆலை முதலாளியோ, நிலச்சுவான்தாரரோ, தொழிலாளர்களிடம் இருந்து  கோரிக்கை வந்ததும் ஏற்றுக் கொள்வதை அதிகார இழப்பாகக்  கருதுகிறார்கள். வெண்மணி கிராமத்து விவசாயத் தொழிலாளர்கள் அனைவரும் பட்டியலின சமூகப் பிரிவில் இருப்பவர்கள். இவர்களைத் ‘தொட்டால் தீட்டு’ என்று ஒதுக்கியும், ஒடுக்கியும் வைத்திருந்தனர். பண்ணையாட்களாகக் குனிந்து, பணிந்து, அடிமை நிலையில் பாடுபட்டு வந்தவர்கள் கூலி உயர்வு கேட்பதா? அதுவும் நாம் நடக்கும் பாதையில் எதிர்பட்டால், துண்டைக் கக்கத்தில் வைத்து, உடம்பை வளைத்து, வழியில் ஓரத்தில் ஒதுங்கி, பயிர்களின் நடுவில் வயலில்  கும்பிட்டபடி நிற்கும் ‘’கூலிக்காரப் பயல்கள்’ கோரிக்கை முழக்கம் எழுப்புவதா? அதிகராச் செருக்கும், ஆணவமும் தலைக்கேறிய நிலபிரபுத்துவம், மனித வேட்டையாடும் வெறியோடும், கொலைக் கருவிகளோடும் வெண்மணி கிராமத்தில் தாண்டவம் ஆடியது.

வெண்மணி கிராமத்து விவசாயத் தொழிலாளர் குடும்பங்களின் முதியவர்கள், பெண்கள், பச்சிளம் குழந்தைகள் என 44 பேர்கள்  ராமையாவின் குடிசையில்  தஞ்சம் புகுந்த நேரத்தில், அந்த ஓலைக் குடிசையின் கதவினை வெளியில் பூட்டி, சாதி வெறிபிடித்த நில பிரபுத்துவம்  தீ வைத்துக் கொளுத்தியது.  நிலப்பிரபுத்துவம் வைத்த தீயில்  எரிந்து கரிக்கட்டைகளாக வீழ்ந்த போதிலும் கொள்கையில் சமரசம் காண முடியாது என்ற போராடிய வெண்மணி தியாகிகள் தினம் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின்  நிலங்கள் முழுவதும் ஒரு சில நிலப்பிரபுக்களுக்கும், மடாதிபதிகளுக்கும், ஜமீன்தார்களுக்கும் உடைமையாக இருந்தது. இந்த நிலங்கள் அவர்களது பாட்டான், பூட்டன் சம்பாதித்துக் கொடுத்த பரம்பரை சொத்தல்ல. ஆளும் அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு அடிமை சேவகம் செய்து, தாய் நாட்டின் குடிமக்களைக் காட்டிக் கொடுத்து,  ஆக்கிரமித்துக் கொண்ட நிலங்களாகும். இந்த ஆக்கிரமிப்பு உடைமைகள் அதிகாரம்  செலுத்தும் ஆதாரமாகி விட்டது.

தஞ்சை மாவட்டம் முழுவதும் நிறைந்திருந்த விவாசாயத் தொழிலாளர்களில் பெரும் பகுதியினர் பட்டியலின மக்களாவர். பண்ணையார்கள் விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் அடிமைப்படுத்தி  ஊருக்கு ஒதுக்குபுறமாக வாழ வேண்டும், தோளில் துண்டு போடக்கூடாது, குழந்தைகளைப் பள்ளிக்கூடத்தில் படிக்கச் சேர்க்கக் கூடாது, பண்ணையாரின் அனுமதி இல்லாமல் கிராமத்தை விட்டுச் செல்லக்கூடாது, விடியற்காலையில் வயலில் இருக்க வேண்டும், அந்தி இருட்டும் வரை (கையில் உள்ள ரேகைகளைக் கண்ணால் காணமுடியாத இருட்டு வரும் வரை) வேலை பார்க்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளைப்  பண்ணையாளர்கள் கறாராக அமலாக்கி வந்தனர். பண்ணை தொழிலாளர்கள் உடல்நலிவு, தவிர்க்க முடியாத  நிகழ்வு காலங்களிலும் பண்ணை அனுமதி பெற வேண்டியது கட்டாயம். தவறினால் தண்டனை அளிக்கும் அதிகாரமும் பெற்றிருந்தனர்.

அடிமை சங்கிலியை அறுத்து, நிலபிரபுத்துவக் கோட்டைகளைத் தகர்க்க செங்கொடி இயக்கத்தைக் கட்டியமைக்கும் பணியை விடுதலைப் போராட்ட வீரர், தியாக சீலர்  பி.சீனிவாசராவ் தஞ்சை மாவட்டத்தில் தொடங்கினார். செங்கொடி இயக்கத்தில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் ஒருசேர, ஒரே அமைப்பில்  அணிதிரட்டப்பட்டனர்.
அடிமைப்பட்ட மக்களின் விடியல் தந்த சூரியனாக , உயிர் காக்க வந்த காவல் தெய்வமாக கிராமங்கள் தோறும் செங்கொடிகள் பறந்தன.

பண்ணையார்கள் மூக்குக் குத்தாத காளைகளாகத் திரிய முடியவில்லை. ஆதிக்க  கொட்டங்கள் குறைந்தன. ‘உழபவருக்கே நிலம்’ என்ற உரிமை முழக்கம் விண்ணதிர எழும்பியது.  
தொடர்ந்து குடிமனைக்கான  போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
 குத்தகை என்கிற பெயரில் விளைந்ததை முழுவதும் அள்ளிச் செல்லும் முறைக்கு எதிரான கோரிக்கை வைக்கப்பட்டது.
குத்தகைக்  குறைப்புக்கான போராட்டம், கூலி உரிமைப்  போராட்டம்  எனப் போராட்டங்கள் திசையெட்டும் தீவிரமாகப் பரவிப் படர்ந்து  நடந்தன.

1968 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம் முழுவதும் விவசாயத் தொழிலாளர்கள் அவர்கள் பெற்று வந்த அறுவடைக் கூலியில், அரைப்படி நெல் அதிகரித்து தர வேண்டும் எனக் கோரி போராட்டம் மாவட்டம் முழுவதும் நடைப்பெற்றது. அரசு நிர்வாகம் விவசாயத் தொழிலாளர்களின் நியாயத்தை  உணராமல் ஆண்டைகளுக்கும், நிலப்பிரபுகளுக்கும்  ஆதரவாகச்   செயல்பட்டது.
செங்கொடி அமைப்பில் திரண்டிருக்கும் தொழிலாளர்களை அடக்குமுறையால் ஒடுக்கி, அவர்களை மீண்டும் பண்ணையாட்களாக  அடிமைப்படுத்த வேண்டும் என நிலப்பிரபுக்கள் சதித்திட்டம் தீட்டினார்கள்.

நெல் உற்பத்தியாளர் சங்கம் உருவாக்கப்பட்டது. இதன் கிளைகள் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் தொடங்கி விவசாயத் தொழிலாளர்கள் மீது  மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டது. சட்டத்தை கையில் எடுத்துக் கொண்ட வன்முறை கும்பலுக்கு,  இரிஞ்சியூர் கோபாலகிருஷ்ண நாயுடு தலைமை தாங்கி செயல்பட்டார்.

 1968ஆம் ஆண்டு வெண்மணி கிராமத்திலும்  செங்கொடிகள் பட்டொளி வீசிப் பறந்தன. அறுவடை துவங்க இருந்த காலம், வயலில் நெற்கதிர்கள் முற்றி, பெண் பார்க்க வந்த வீட்டில் மாப்பிள்ளையைக் காண வரும் பெண் போல் தலை கவிழ்ந்து அசைந்து ஆடிக் கொண்டிருந்தன. அது விவசாயத்  தொழிலாளர்களை வாங்க, என்னை அள்ளி எடுத்துப்  போங்க என வரவேற்பது போல் காட்சி அளித்த  நேரம்.

அரைப்படி நெல் கூலி கூடுதலாகக் கேட்டு போராட்டம் துவங்கியது. இது தொடர்பாக நடந்த  பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படவில்லை. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. போராட்டம் தொடர்ந்தது. அரைப்படி நெல் கூடுதலாக கூலி கொடுக்க நெல் உற்பத்தியாளர் சங்கத்தினர் மறுத்தனர்.

தன்னிடம் கைகட்டி வாய் பொத்தி அடிமையாய் இருந்தவர்கள் நம்மை எதிர்க்க துணிந்து விட்டார்களே என்று எண்ணிய இரிஞ்சியூர் கோபாலகிருஷ்ணனும், அவரது அடியாட்களும், குண்டர்களும், 1968 டிசம்பர் 25 அன்று கீழ வெண்மணியில் விவசாய தொழிலாளர்கள் மீது  நேரடித் தாக்குதலை நடத்தினர். அது நள்ளிரவு வரை நீடித்தது. பச்சிளம் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என 44 விவசாயத் தொழிலாளர்கள் ராமையாவின் குடிசையில் தஞ்சமடைந்த போது, அவர்களை உள்ளே  வைத்து பூட்டி குடிசைக்கு தீ வைத்து கொளுத்தி, தீயில் அங்கம் எரிந்து எழுப்பிய கூக்குரலை கேட்டுவிட்டுத் திரும்பியது அந்தக் கொலைகார கும்பல்.

டிசம்பர் 25 இயேசு பிரான்  அவதரித்த நாளில் அன்னை வேளாங்கண்ணி மாதா கோவிலில் திருப்பள்ளி  பாடி வழிபட்டனர். கீழ வெண்மணியில் அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டதற்காக விவசாயத் தொழிலாளர்கள் குடிசையோடு தீயிட்டுக் கொளுத்தப்பட்டனர். இந்த அநீதியை தடுக்க  வேளாங்கண்ணி மாதா வரவில்லை. நாகூர் ஆண்டவன் ஆத்திரம் காட்டவில்லை. எட்டுக்குடி முருகன் எட்டியும் பார்க்க வில்லை. கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் தான்  திரண்டனர். மக்களுக்கு ஆறுதல் சொன்னது மட்டும் அல்ல, கொடுஞ்செயல் புரிந்த குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கும் போராட்டத்திலும் இறங்கினர்.
நீண்ட போராட்டத்திற்கு பின்னர்  நாகப்பட்டினம் நீதிமன்றம் ஆயுள்  தண்டனை  வழங்கியது.
இதனை எதிர்த்து குற்றவாளிகள் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்தனர்.

உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்கள்  “மிராசுதார்கள், சொந்தமாக “கார்” வைத்திருக்கிறார்கள். தும்பைப் பூ போல் வெள்ளை ஆடை அணிகிறார்கள். இப்படிப்பட்ட கண்ணியவான்கள்  இதுபோன்ற கொடுங்குற்றத்தைச் செய்திருக்க மாட்டார்கள் எனக் கூறி அந்த மனித மிருகங்கள் விடுதலை செய்யப்பட்டன.

சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய  தீர்ப்பைக் கண்டித்து மாவட்டம் முழுவதும்  சுவரொட்டிகள் ஒட்டியது, கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி என்பது வரலாற்றில் பதிந்து இருக்கும் உண்மையாகும்.

உயர் நீதிமன்ற  தீர்ப்பைக்  கண்டித்து நாட்டில் நடைப்பெற்ற முதல் போராட்டமாகும்.

 “விடுதலை! விடுதலை! விடுதலை! பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை! பரவரோடு குறவருக்கும்  மறவருக்கும் விடுதலை! என்று பாரதி ஆனந்தக் கூத்தாடி  விடுதலைக் கனவு கண்டார். ந்த முன்டாசு கவி கண்ட கனவு  இன்னும் நனவாகவில்லை. நாடெங்கிலும் நடைபெறும் சமூக ஒடுக்குமுறைகள், அடக்குமுறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
மதத்தின் பெயரால், சாதிகள் நியாயப்படுத்தும் வரை, சாதிகளில் மேன்மை எனும்- இழிவு கருத்தியல் இருக்கும் வரை தீர்வுக்கு வழியில்லை.

பன்மைப் பண்போடு, மனித உரிமைகள் மதிக்கப்படும் ஒரு சூழல் உருவாக வேண்டும். இதற்கு மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகள் ஜனநாயகப் புரட்சியை முன்னெடுக்க வேண்டும்.
இந்தத் திசைவழியில் உறுதியுடன் பயணிப்போம் என வெண்மணி தியாகிகள் பெயரில் உறுதி ஏற்போம்.

வெண்மணியில் எரிந்து விழுந்த தோழர்களே, அக்னி சூழ்ந்து அங்கங்களை எரித்த போதும், செங்கொடி உயர்த்திய தங்கள் ஈகை வேட்கையின் வெப்பக் காற்றை உள்வாங்கி, எஞ்சிய பணியை முடிப்போம் என சூளுரைக்கிறோம்.

வெண்மணி தியாகிகள் திருப்பெயர் நீடூழி வாழ்க!


தொடர்புக்கு: 94884 88339

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button