வீர மரணம் அடைந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்தாருக்கு ரூ.1 கோடி நிதியுதவி!!
திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவியாளர் பூமிநாதன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆடு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை வழக்கில் 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஆடு வெட்டும் கத்தியால் பூமிநாதனை கடுமையாகத் தாக்கி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட இருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சிறுவர்கள் இருவர் கூர்நோக்கு பள்ளியில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பூமிநாதனின் உடல் அவரது சொந்த ஊரான சோழமாதேவியில் 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. நேற்று பூமிநாதன் இல்லத்திற்கு சென்ற டிஜிபி சைலேந்திரபாபு அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியதுடன், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் மறைவுக்கு முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன் பூமிநாதன் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதியும் , குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் காவல் பணியின் போது வீர மரணம் அடைந்த திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் உட்கோட்டம் , நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் அவர்களின், குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை அவரது மனைவி கவிதாவிடம் வழங்கினார். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர், காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு ,பூமிநாதன் மகன் குகன் பிரசாத் ஆகியோர் உடன் இருந்தனர்.