“கம்யூனிஸ்ட் என்பது என் அடையாளம்.” வீரவணக்கம் தோழர் எஸ். துரைராஜ்!

சி.மகேந்திரன்
மரணத்தை, இவ்வாறு எதிர்கொண்டவர்கள் ஒரு சிலரே! தனது மரணம் எப்பொழுது நிகழப் போகிறது என்பதை மிக நன்றாகவே அவர் அறிந்திருந்தார். மரணச் செய்தி யார் யாருக்கெல்லாம் சொல்ல வேண்டும் என்ற பட்டியலை தோழர் மு.ப. அவர்களிடம் தெரிவித்து விட்டார்.
ஒரு நிபந்தனையையும் விதிக்கிறார். தன் உடல்நிலைப் பற்றிய எந்தத் தகவலையும் மரணத்திற்கு முன் நெருங்கியவர்கள் யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் என்று. தன்னால் பிறருக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க வேண்டுமென்றே விரும்புகிறார்.
மரண சாசனம் போன்ற ஒன்றையும் அவர் தெரிவிக்கிறார். அதைக் கேள்விபட்ட போது என் உடல் சிலிர்க்கத் தொடங்கிவிட்டது. “தான் மரணமுற்ற பின் தனது உயிரற்ற உடலில் சிவப்பு சட்டை அணிவித்து, செங்கொடி உடலில் போர்த்தப்பட வேண்டும் என்கிறார். இவ்வாறு தனது கடைசி மணித்துளிகளை யோசித்து, தனக்கான மனித அடையாளத்தை முழுமைபடுத்திக் கொண்ட மாமனிதர் தான், எஸ். துரைராஜ்.

கடைசியாக, என் தோழன் துரைராஜ் அவர்களின் முகத்தைப் பார்க்க திருச்சி செல்கிறேன். தோழர் மு.ப என்று நம்மால் அன்போடு அழைக்கப்படும் மு.பழனியப்பன் அவர்கள் இன்றைய கம்யூனிஸ்டு இயக்கத்தின் மூத்த தோழர். ஜனசக்தி இதழுக்காக வெகுகாலம் தன்னை அர்ப்பணித்து கொண்டவர். தோழர் துரைராஜ் அவர்களின் அக்கா கணவர். கடைசி பத்து நாட்கள் அவருடனேயே இருந்திருக்கிறார். அவர் மேற்கண்ட இந்த தகவல்களை கூறியது, என்னை உணர்ச்சி கொள்ள வைத்தது.
மகள் கண்ணமாவை, அவரது துணைவியார் சுலோச்சனா அவர்களையும் பல ஆண்டுகளுக்கு பின்னர் பார்க்கிறேன். இருவரும் என்னை அடையாளம் கண்டு கொண்டார்கள். கண்ணம்மாவின் கண்களில் கண்ணீர் பொங்கி நிற்கிறது. “அங்கிள் காம்ரேட் துரைராஜ் தம்மிடம் விடைபெற்றுக் கொண்டார்“ என்றார். காம்ரேட் என்பது தந்தைக்கும் மகளுக்குமான அன்புச் சொல். அவர் கூறிய மற்றொரு தகவல் என்னை திகைக்க வைத்துவிட்டது, மரணத்தின் மூலம் விடை பெறுதலை துரைராஜ் எவ்வாறு நிகழ்த்திக் கொண்டார் என்பதை இதன் மூலம் புரிந்து கொண்டேன். “ஒரு கையில் என்னையும், மறுகையில் அம்மாவையும் பிடித்துக் கொண்ட நிலையிலேயே அப்பாவின் உயிர் பிரிந்தது” என்று பொங்கி வந்த அழுகையை அடக்க முடியாமல் அடக்கிக் கொண்டு கூறினார் கண்ணமா. தனது மரணத்தை அர்த்தத்துடன் நிகழ்த்திக் கொண்டவர் துரைராஜ் அவர்கள்.
நான் அவரை முதன் முதலில் அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாநாடு ஒன்றில் திருச்சி தேவர் மன்றத்தில் சந்தித்தேன். ரஷியாவிலிருந்து தருவிக்கப்பட்ட ‘ஜெனித்’ கேமரா ஒன்று அவரிடம் இருந்தது. ஒரு பத்திரிக்கையாளராக அவர் அங்கு வந்திருந்தார். அன்றுதான் புன்சிரிப்புடன் ஒரு நீண்ட தோழமை உறவை, என்னுள் தொடக்கி வைத்தார். இதன் பின்னர் 48 ஆண்டுகள் கழிந்துவிட்டன.
தோழமை என்றால் என்ன என்பதை அவரிடமிருந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும். 1979 ஆம் ஆண்டில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தில் மாநிலப் பொறுப்பேற்றுச் சென்னை பாலன் இல்லம் வந்து சேர்ந்தேன். சென்னையைப் பற்றி எதையும் அறிந்திராத கிராமப்புற இளைஞன். இதைப் புரிந்து, அந்த காலத்தில் இவர் எனக்களித்த உதவி ஒவ்வொன்றையும் இப்பொழுது நினைத்துப் பார்க்கிறேன். தோழமை கொண்ட மூத்த சகோதரனாகவே எனக்கு அவர் தெரிகிறார்.
அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் ஆகிய இரண்டிலும் மிகவும் கூடுதலான ஈடுபாட்டைச் செலுத்தியவர். குடும்பப் பின்னணி ஒரு காரணம். இவரது தந்தை, திருச்சி பொன்மலையில் கம்யூனிஸ்டு இயக்கத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட ரயில்வே தொழிலாளி. பெரிய குடும்பம். அனைவரும் கட்சியின் மீது பிடிப்பு கொண்டவர்கள். இவரது அரசியல் பயிற்சி அனைத்தும் மதுரை தியாகராய கல்லூரியில் தான் தொடங்கியது. இளங்கலையில் விலங்கியலையும் பட்ட மேற்படிப்பில் தமிழ் இலக்கியத்தையும் பாடமாக எடுத்திருந்தார். அவர் பயின்ற காலத்தில் செயலூக்கமுள்ள மாணவர் பெருமன்றம் ஒன்று அந்தக் கல்லூரியில் செயல்பட்டு வந்தது. கொரானாவில் நம்மை விட்டு பிரிந்த சென்ற எழுத்தாளர் சந்திரகாந்தன் தியாகராய கல்லூரியில் மாணவர் அமைப்பில் அவருடன் இணைந்து செயல்பட்டவர்.
துரைராஜ் சென்னை பாலன் இல்லத்திற்கு வந்தால் அங்கு தனி குதூகலத்தைப் பார்க்க முடியும். நகைச்சுவையும், கிண்டலும் கூத்திடும். அங்கு இன்றைய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, விவசாய தொழிலாளர் அரங்கத்தில் முழுநேர ஊழியராகப் பணியாற்றிய நடராஜன், சிறிது காலத்திற்குப் பின்னர் மாணவர் பெருமன்றத்தில் தலைவராகப் பணியாற்றிய திருச்சி எம்.செல்வராஜ் ஆகியோர் அங்கு இருந்தோம்.
உலக புகழ் பெற்ற நடனக் கலைஞர்கள் உதய்சங்கர், அமலா சங்கர் ஆகிய இருவரும், தூரதேசங்களிலிருந்து கொண்டு வந்து வளர்த்திருந்த மாமரத்தின் நிழலிலும், டீக்கடையிலும் கூட்டாக நாங்கள் நிகழ்த்திய உரையாடல்கள் எத்தனை அரசியல் வளர்ச்சியை எனக்கு தந்திருக்கிறது.
நீண்ட பயணத்தில் “கம்யூனிஸ்டாக வாழ்ந்து காட்டுவதில் தான் பெருமை இருக்கிறது” என்று அடிக்கடி துரைராஜ் கூறுவார். அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்ட ஆளுமைகள் ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டுப் பார்க்கிறேன். என் கண்ணீரால் தான் அவருக்கு நன்றி சொல்ல முடிகிறது.
புன்னகை மாறாத நட்புணர்வை கொண்டவர் துரைராஜ். மிகவும் மாறுபாடான கொள்கை கொண்டவர்களையும் வெறுக்கத் தெரியாதவர். அரசியல் தலைவர்கள், பத்திரிக்கை நண்பர்கள், பழகியவர்கள் என்று அனைவரையும் ஈர்த்து தனக்குள் வைத்துக் கொள்ளும மேன்மை துரைராஜிடம் இருந்தது.
இந்திய பொதுவுடமை இயக்கத்தின் மூத்த தோழர் இரா.நல்லகண்ணு அவர்களும், விவாசாயிகளின் பேரியக்கத் தலைவர் ஆதிமூலம் அவர்களும் இவர் மீது கொண்டிருந்த அன்பை இப்பொழுது யோசித்துப் பார்க்கிறேன். மனதுக்குள் ஒரு விதமான நிறைவு ஏற்படுகிறது.
இவர் குடும்ப வாழ்வில் சிறந்து வாழ்ந்தவர். ஒருமுறை மகள் கண்ணமாவையும், சகோதரி சுலோச்சனா அவர்களைப் பற்றியும் நலம் விசாரித்தேன். அவர்கள் நலனைக் கூறிய துரைராஜ், மருமகன் செந்தில்குமார் மருமகன் அல்ல. மகன் என்றார். இரண்டு பேரக்குழந்தைகளுடன்தான் பொழுது கழிகிறது என்பதையும் மனநிறைவோடு சொன்னார்.
ஆரம்ப காலங்களில் எழுத்தாளர் ஜெயகாந்தன் நூல்களைப் பற்றியும் கதைகள் பற்றியும் கூடுதலாக எனக்கு அறிமுகப்படுத்தியவர் துரைராஜ் தான். ஜெயகாந்தன் மீது எல்லையில்லா அன்பைக் கொண்டிருந்தார். இதைப்போல கவிஞர் பரிணாமன் அவர்களை ஊக்குவிப்பதிலும் அவரது கவிதையை வரிவிடாமல் திருப்பச் சொல்வதிலும் தனி ஆர்வம் கொண்டிருந்தார். என்னிடம் இருந்த இலக்கிய ஆர்வம் புதிய நுட்பங்களைப் பெறுவதற்கு இவரும் ஒரு முக்கிய காரணம் என்பதை இங்கு குறிப்பிடுவது அவசியம் என்று கருதுகிறேன்.
நான் மாணவர், இளைஞர் பெருமன்றங்களில் பொறுப்பிலிருந்து பணியாற்றிய காலங்களில் ‘தமிழகத்தை பாலைவனமாக்காதே’, ‘தன்னானே பாடல்கள்’, ‘வேலையின்மை எதிர்ப்பு போராட்டம்’ என்ற மூன்று முக்கிய இயங்கங்கள் நடந்தன. இவை மூன்றிற்கு இவர் அளித்த பங்களிப்பை இப்பொழுது நினைத்துப் பார்க்கிறேன். அமைப்பை வளர்ப்பதில் அவரவர் பங்கை அவரவர் செலுத்த வேண்டும் என்பது குறித்த இவரது ஆழ்ந்த புரிதலையும், இவரது பொறுப்புணர்ச்சியையும் இது எனக்கு உணர்த்துகிறது.
கட்சியின் தலைவர்கள் எம்.கல்யாணசுந்தரம் ப.மாணிக்கம், கே.டி.கே தங்கமணி போன்றவர்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார். அவர்களோடு தனக்கு மாறுபட்ட கருத்துக்கள் உண்டு என்றாலும், அதை நேரில் சொல்லிவிடும் இயல்பையும் கொண்டிருந்தார். தோழர் மொகித்சென் மார்க்சீயத்தை நன்கு கற்றறிந்த கல்வியாளர். அவருடன் துரைராஜ் தத்துவார்த்த உறவு கொண்டிருந்தார். அவர் எழுதிய Road and Traveller என்னும் நூலை தமிழாக்கம் செய்யப் போவதாக கூறினார். தனது வாழ்வின் இறுதி நாட்களில் ஐந்து அத்தியாயத்தை அவர் தமிழாக்கம் செய்துவிட்டதாக அறிகிறேன்.
அச்சடித்தைப் போல தமிழிலும் ஆங்கிலத்திலும் அழகுற எழுத்துக்களை எழுதும் துரைராஜ் அவர்கள் ஒரு சிறந்த பத்திரிக்கையாளர். இதனால் தான் தமிழக அரசின் சார்ப்பில் தமிழக முதல்வர் சிறப்பு இரங்கல் செய்தியை வெளியிட்டிருந்தார். இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் அதிகாரப்பூர்வ ஆங்கில இதழ் ‘நியூஏஜ்’ பத்திரிக்கை இவரது பிறப்பிடம். இதன் பின்னர் இந்து, பிரண்ட் லைன், பேட்ரியாட், லிங்க், நியூஸ் டுடே முதலான ஆங்கில பத்திரிக்கைகளிலும் பி.டி.ஐ. முதலான செய்தி நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார்.
கொரானா முடக்கம் கெடுபிடி நிறைந்த காலம். தோழர் துரைராஜ் அவர்களின் இறப்பும் நிகழ்கிறது. திருச்சி மாவட்டத் தோழர்கள் இறுதி விடைகொடுத்து அனுப்ப, வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். டெல்லியிலிருந்து தோழர் ராஜா, குடும்பத்தினரிடம் இரங்கல் செய்தியை தெரிவித்துக் கொண்டிருக்கிறார். எம். செல்வராஜ் அவர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் முன் நின்று கவனித்து வருகிறார். திருச்சி மாவட்ட செயலாளர் இந்திரஜித், வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் ஆகியோர் அவசர அவசரமாக வந்து சேருகிறார்கள்.
என் தோழனே உனது இறுதி பயணம் தொடங்க இருக்கிறது. வெளியுலகில், நீ ஒரு மேன்மை கொண்ட பத்திரிக்கையாளன். இன்னமும் பல பெருமைகள் உன்னைப் பற்றி பேசப்படுகிறது. ஆனாலும் கம்யூனிஸ்டு என்பது என் அடையாளம் என்பதாக, நீ கடைசியில் அணிந்திருந்த சிவப்பு சட்டையும், செங்கொடியும் சொல்கிறது, நீ நிகரற்ற கம்யூனிஸ்டு புரட்சிகாரன் என்று!
உனக்கு என் வீரவணக்கம்! வாழ்க மாசற்ற உன் புகழ்!