விவசாயிகள் போராட்டம் மாபெரும் வெற்றி
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை.
விவசாயிகள் போராட்டம் மாபெரும் வெற்றி
மாபெரும் வெற்றி விவசாயிகளுக்கும், ஜனநாய சக்திகளுக்கும் வாழ்த்துக்கள்!
நாட்டின் வரலாற்றில் தனி முத்திரை பதித்த விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட்டம் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
கடந்த 2020, செப்டம்பர் மாதத்தில் பாஜக ஒன்றிய அரசு நிறைவேற்றிய மூன்று விவசாயிகள் விரோத, கார்ப்பரேட் ஆதரவு வேளாண் வணிகச் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி ஒராண்டுக்கும் மேலாக அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவும், ஐக்கிய விவசாயிகள் முன்னணியும் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தன.
இதன் தொடர்ச்சியாக 2020 நவம்பர் 26 “டெல்லி சலோ” (டெல்லி செல்வோம்) இயக்கம் அறிவிக்கப்பட்டது. இந்த நாளில் தலைநகர் டெல்லி நோக்கி சென்ற ஆயிரமாயிரம் விவசாயிகளை பாஜக ஒன்றிய அரசும், அரியாணா, உத்தரப்பிரதேச மாநில அரசுகளும் விவசாயிகளை டெல்லி நகருக்குள் நுழைய விடாமல் திக்ரி, சிங்கு, காஸியாபாத் என நகரின் எல்லைகளில் வழிமறித்து, அடக்குமுறை தர்பார் நடத்தின. குளிர்காலத்தில் வந்த விவசாயிகள் மீது குளிர்ந்த தண்ணீரை பீச்சி அடித்தது, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியது. தடியடி நடத்தியது, நெடுஞ்சாலைகளில் அகழிகள் வெட்டியது. கூர்மையான ஆணிகளை சாலையில் நட்டது. தடுப்புச் சுவர் அமைத்தது. பொய் வழக்கு போட்டது. விவசாயிகளுக்கு எதிராக மற்றவர்களை தூண்டிவிட்டு மோதலை ஏற்படுத்தும் சதி வேலைகளில் ஈடுபட்டது. நக்சல்கள், மாவோயிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் என நாட்டின் எதிரிகள் ஊடுருவி விட்டன என அவதூறு பரப்பியது. குடியரசு தினத்தில் (2021 ஜனவரி 26) டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியை சீர்குலைக்கும் சதிச் செயலில் ஈடுபட்டது. இதன் உச்சமாக உத்தரப் பிரதேசம், லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் மீது கார்களை ஏற்றி படுகொலை செய்தது என தொடரும் பாஜக ஒன்றிய, மாநில அரசுகளின் அடக்குமுறைகள், பிளவுவாதம் அனைத்தும் படுதோல்வி அடைந்துள்ளன. ஐம்பத்தாறு இஞ்ச் அகல மார்பு கொண்டவர்கள் நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டங்களை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று முழங்கி வந்ததை நாடு எளிதில் மறந்து விடாது.
இந்த ஒராண்டு காலத்தில் 700க்கும் மேற்பட்ட விவசாயிகளின் உயிர்களை பலி கொடுத்து நடந்த ஜனநாயக உரிமைப் போராட்டத்தை பஞ்சாப், கேரளா, ராஜஸ்தான், டெல்லி, சத்தீஸ்கர், மேற்குவங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில மக்கள் ஒருமனதாக ஆதரித்து வந்ததையும், சட்டப் பேரவைகளில் தீர்மானங்களும், எதிர் சட்டங்களும் நிறைவேற்றப்பட்டதையும், தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்கள் நாடாளுமன்ற இயக்கத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றியதையும் விவசாயிகள் இயக்கம் நன்றியோடு என்றென்றும் நினைவு கொள்ளும்.
கார்ப்பரேட் ஆதரவு வேளாண் வணிக சட்டங்களை திரும்பப் பெறுவது தவிர வேறு வழியில்லை என்ற நிர்பந்தத்தை உருவாக்கி, ஒன்றிய அரசைப் பணிய வைத்த ஜனநாயக சக்திகளுக்கும், உறுதி குறையாது போராடி வந்த விவசாயிகளுக்கும், விவசாயிகள் போராட்டத்தில் கலந்து செயல்பட்ட தொழிற்சங்க அமைப்புகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு நன்றி பாராட்டி, வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
தங்களன்புள்ள,
(இரா.முத்தரசன்)
மாநிலச் செயலாளர்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி