விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு – மாநிலம் முழுவதும் மறியல் – 25 ஆயிரம் பேர் கைது
பாஜக ஒன்றிய அரசின் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான கொள்கைகளால், அத்தியாவசிய உணவுப் பொருள்கள் உட்பட அனைத்துப் பொருள்களின் விலைகளும் நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்புக்கு ஆளாகியுள்ளனர். லட்சக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து நிற்கின்றன. இந்த நிலையில், மின்சார சட்டத் திருத்தம் மூலம் மின் விநியோகத்தை தனியாரிடம் விடுவது, மின் கட்டணச் சலுகைகளை ரத்து செய்வது, மானியங்களை வெட்டிவிடுவது, இலவச திட்டங்களை அவமதித்து அழித்தொழிப்பது என்ற மக்கள் விரோத நடவடிக்கையில் ஒன்றிய அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதை கண்டித்தும், கழுத்தை முறிக்கும் செலவுச் சுமைகளை தாங்கி நிற்கும் மக்களிடம் வீட்டு வரி உயர்வு, சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட மாநில அரசின் நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் 150க்கும் மேற்பட்ட மையங்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இன்று (30.08.2022) மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது.
இந்த மறியல் போராட்டத்தில் மாநிலம் முழுவதும் சுமார் 25 ஆயிரம் பேர் கைதாகியுள்ளனர். பல இடங்களில் மறியல் தொண்டர்களை காவல்துறையினர் கைது செய்யாமல், திருப்பி அனுப்பியுள்ளனர். மக்கள் துயரங்களை வெளிப்படுத்தும் போராட்டத்தின் உணர்வை மதித்து பாஜக ஒன்றிய அரசு தனது மக்கள் விரோத நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என வலியுறுத்துவதுடன் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கும், ஆதரவு காட்டியவர்களுக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு நன்றியினையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.