விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டம்: ஈக்வடார் அரசாங்கம் பணிந்தது!
அதிகரித்து வரும் உணவு மற்றும் எரிபொருட்கள் விலை காரணமாக கடந்த 15 நாட்களுக்கும் மேலாக ஈக்வடார் நாட்டில் மக்கள் போராட்டம் தீவிரமாக நடைபெற்றது. சாலை மறியல் போன்ற போராட்ட வடிவங்கள் தீவிரமடைந்து, வாகனங்கள் எரிப்பு, கல்வீச்சு என்று வன்முறைகளும் வெடித்தெழுந்தன; எண்ணற்றோர் காயமடைந்துள்ளனர். சிலர் உயிர் இழந்துள்ளனர்.
விலைவாசியைக் கட்டுக்குள் வைப்பது, எரிபொருட்கள் விலையைக் கட்டுப்படுத்துவது, உர மானியம் வழங்குவது, வங்கி கடன் வசூலிப்பை நிறுத்தி வைப்பது, பழங்குடி மக்கள் பிரதேசங்களில் சுரங்கப் பணிகளை மேற்கொள்ளாமல் இருப்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி ஈக்வடார் நாட்டின் பூர்வகுடிமக்கள் குழு தீவிர தொடர் போராட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது.
15 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற போராட்ட நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர ஈக்வடார் நாட்டின் அரசாங்கமும், பூர்வகுடிமக்கள் குழுவும் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் விளைவாக , பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படும். மேலும், இந்த ஒப்பந்தம் எண்ணெய் ஆய்வுப் பகுதிகளை விரிவாக்குவதற்கும் வரம்புகளை அமைக்கும் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகள், தேசிய பூங்காக்கள் மற்றும் நீர் ஆதாரங்களில் சுரங்க நடவடிக்கைகளை தடை செய்யும்.
பூர்வகுடிமக்கள் குழுவின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண அரசாங்கத்திற்கு 90 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
“அரசு கொள்கைகள் ஏழைகளின் பிரச்சனையை தீர்க்கவில்லை என்றால், மக்கள் எழுச்சி பெறுவார்கள்” என்று போராட்டக் குழுவினர் எச்சரிக்கை செய்துள்ளனர்.
நன்றி: தி கார்டியன்
ஈக்வடார் போராட்டம் செய்தி அருமை. காலத்துக்கேற்ற தகவல்….
இந்தியாவிலும் விலைவாசி உயர்வு விண்ணை முட்டுகிறது…. ஆனால் நம் கடவுளர்களுக்காக போராட்டம் நடத்துகின்றனர். .. நுபுர் சர்மா…. சிவலிங்கம் சர்ச்சை…. இப்படியாக கடவுளைக் காப்பாற்ற போராடிவரும் கோமாளித் தனத்தை என்னவென்று சொல்வது….