விலைவாசி இந்தளவு உயர்ந்தும் பாஜக-வுக்கு எப்படி வாக்களிக்கிறார்கள்?
டேராடூன், மார்ச் 11 – “விலைவாசி இவ்வளவு கடுமை யாக உயர்த்தப்பட்ட போதும்கூட, உத்தரகண்ட் மக்களால் எவ்வாறு ‘பாஜக ஜிந்தாபாத்’ என கூற முடி கிறது?” என்று காங்கிரஸ் மூத்த தலை வர் ஹரீஷ் ராவத் ஆச்சரியத்தை வெளிப் படுத்தியுள்ளார். உத்தர கண்ட் மாநில சட்டப்பேர வைத் தேர்தலில், மொத்தமுள்ள 70 இடங்களில் 47 இடங்களைக் கைப் பற்றி பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துள் ளது. இது காங்கிரஸ் தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், உத்தரகண்ட் முன்னாள் முதல்வருமான ஹரிஷ் ராவத் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “மக்கள் மாற்றத்திற்காக வாக்களிப்பார்கள் என்று நம்பினோம். எங்களுடைய பிரச்சாரம் மக்களின் மனங்களை வெல்லும்படியாக இல்லை. நாங்கள் இன்னும் அதிகமாக முயற்சித்திருக்க வேண்டும். இதனை ஏற்றுக்கொண்டு இந்த தோல்விக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். ஆனால், என்னை இந்த ஒரு விஷயம் தான் ஆச்சரியப்படுத்துகிறது… அது, இவ்வளவு விலைவாசி உயர்வுக்குப் பின்பும் மக்களால் ‘பாஜக ஜிந்தா பாத்’ என எப்படி சொல்ல முடிகிறது? என்பதுதான். இதுதான் மக்களின் மனநிலை என்றால், மக்கள் நலன் மற்றும் சமூகநீதிக் கான வரையறைதான் என்ன?” என்று ராவத் விரக்தியை வெளிப்படுத்தி யுள்ளார்.